கதகளி நடனத்தின் பெயரை தங்கள் ஊரின் பெயராக மாற்றம் செய்துள்ளது கேரள கிராமம் ஒன்று. கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பதனம்திட்டா என்ற பகுதியில் அமைந்திருக்கிறது அயிரூர் கிராமம். இதன் பெயர் இனி, அயிரூர் கதகளி கிராமம் என்றழைக்கப்படவுள்ளது.
சுமார் 12 ஆண்டுகள் இதற்காக போராடி, கிராமத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் நவ் தளம் கூறுகிறது.
கதகளி கேரளா மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும். ”கதையை அடித்தளமாக கொண்ட ஆடல்” என்பது இதன் பொருள். கதகளி நடனத்தை ’ஆட்டக்கதை’ என்றும் அழைக்கின்றனர். சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த நடனத்தின் மூலம் பழங்கதைகள், இதிகாச கதைகளை கலைஞர்கள் மக்களுக்கு எடுத்துச்செல்வார்கள்.
அயிரூர் கிராமத்தில் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் இந்த பாரம்பரிய நடனக்கலை மூலமாக, இந்து இதிகாசங்கள், பைபிளில் இடம்பெற்றுள்ள கதைகளும் அரங்கேற்றப்படுகின்றன.
இதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். கதகளி நடனக்கலைஞர்கள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையை சேர்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு மாவட்ட கதகளி கிளப் ஒன்றை தொடங்கினார். இவர் கதகளி கலைஞர் அல்ல என்றாலும், நடனத்தின் மீதான ஆர்வத்தினால், இந்த கிளபை தொடங்கியிருக்கிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டு இந்த கிளப் கிராம பஞ்சாயத்தின் மூலமாக, அயிரூர் கிராமத்தின் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பஞ்சாயத்து தலைவர் அம்பிலி பிரபாகரன் நாயர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
எனினும், இவர்களது கோரிக்கை நிறைவேற கிட்ட தட்ட 12 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாக இருந்துள்ளது. பெயர் மாற்றம் என்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.
மாநில, மத்திய அரசின் ஒப்புதல்கள், உளவுத்துறை அதிகாரிகளின் சோதனைகள் என பல கட்டங்களை இவர்கள் கடக்கவேண்டியதாக இருந்துள்ளது.
“இந்த பெயர் மாற்றம் சமூக ரீதியிலான, அல்லது சாதிய ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருந்தது” என்கிறார் ராஜ்.
இருப்பினும், தங்களது கிராமத்தில் அப்படியான பிரச்னைகள் ஏற்படவில்லை என்றும், குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து தான் அதிக ஆதரவு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
“இந்த கதகளி மேம்பாட்டு கிளப்புக்கு பொருளாதார ரீதியில் அவர்களது பங்களிப்பு அதிகமாக இருந்தது. கதகளி நிகழ்ச்சிகளை காண அதிக அளவில் அவர்கள் கூடுவார்கள்.”
அயிரூர் கிராமத்தின் புத்தேழம் பகுதியை சேர்ந்தவர் சிராகுழியில் சங்கர் பணிக்கர். இவர் தனது பூர்வீக வீட்டில், கதகளி, களரியை ஆரம்பித்து, இக்கிராமத்தில் நடனக்கலைக்கு வித்திட்டார். இதன் தொடக்கம், கிராமத்தில் இருந்த அனைத்து சமூகத்தினருக்கும் நடன வடிவத்தை எடுத்துச்சென்றது.
அதாவது, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். கதகளி களரியின் தொடக்கம், இந்த சமூக பிரிவினையை உடைத்தெரிந்தது எனலாம்
பின்னர் ராஜ் ஆரம்பித்த இந்த கிளப், அதன் சொந்த செலவில் கிராமத்தினருக்கு நடன பயிற்சியளித்து. பல குழந்தைகள் நடனம் கற்க முன்வந்தனர். “குழந்தைகள் எளிதாக கலையை உள்வாங்கிக்கொண்டனர். இதனால் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு கலையை கற்பிக்க நினைத்தோம்.”
கதகளி கிளப் மெல்ல பிரபலமடையவே, குழந்தைகள் அதிகளவில் நடனம் கற்க முன்வந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் 7 நாட்கள் கொண்ட நடன திருவிழாவை நடத்த கிளப் முடிவு செய்தது. கடந்த 17 ஆண்டுகளாக இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது, விழாவில், ஒரு நாளைக்கு 1500 குழந்தைகள் பங்கேற்கின்றனர்.
தவிர ஓராண்டிற்கு 20,000 குழந்தைகளுக்கு இந்த கிளப் பயிற்சியளிக்கிறது. இதன் விளைவாக மாநில மற்றும் மத்திய அரசுகள் கிராமத்தின் பெயர் மாற்றும் கோரிக்கையை பரிசீலித்து, தற்போது கிராமத்தின் பெயர், “அயிரூர் கதகளி கிராமம்” என்று மாற்றப்பட்டிருக்கிறது
கிட்ட தட்ட 200 ஆண்டுகள் பழமையான கதகளியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கிராமத்தின் பெயர் மாற்ற திட்டமிட்டதாக ராஜ் கூறுகிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust