பீகாரில் ராம் நவமி கொண்டாட்டத்தின் போது மசூதியில் காவிக்கொடி ஏற்றப்பட்டதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்றைக்கு முன்தினம் இந்து பண்டிகையான ராம் நவமி கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பல இடங்களில் ஊர்வலம் சென்றவர்களால் சச்சரவுகள் ஏற்பட்டன. மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஊர்வலம் சென்றவர்கள் மோதலை ஏற்படுத்தினர்.
வன்முறையினால், இந்த மாநிலங்களின் முக்கிய இடங்கள் பற்றி எரிந்தன. பிகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு மசூதியில் நீண்ட வாள்கள் மற்றும் ஹாக்கி ஸ்டிக்குகளைக் கொண்டு வந்த கும்பல் காவிக் கொடியேற்றினர்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு, “இதுபோன்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், இதற்கு பாஜக காரணம் எனக் கூறுபவர்கள் மூளையை பயன்படுத்த வேண்டும். இது அல்ல பாஜக. எங்கள் கட்சி இதனை ஊக்குவிப்பதில்லை. எங்களின் பிரதமர் மோடி சமத்துவம், வளம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.