'ஹலோ நான் ப்ரியா பேசுறேன்' - பெண் என மோசடி: இணையத்தில் சொக்கியவர் இழந்தது ரூ.34 இலட்சம்

சைபர் குற்றம் எனப்படும் கணினிவழி மோசடிகள் தற்போது தொடரும் சவாலாக இருந்துவருகிறது. இதிலும் கணிசமாக சித்தரிப்பு மோசடிகள் கணிசமானவை என்கின்றனர், இணையக்குற்றத் தடுப்பு காவல்துறையினர்
Cybercrime
CybercrimeCanva
Published on

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சீட்டு நடத்தி சொன்னபடி பணத்தைத் திருப்பித்தராமல் மோசடி செய்வது சர்வசாதாரணமாக இருந்தது.

அன்றாடச் செய்திகளில் எத்தனை முறை நடவடிக்கை பற்றிய தகவல்கள், முன்னெச்சரிக்கைகளை அரசு அதிகாரிகள் வெளியிட்டாலும், மீண்டும் மீண்டும் மோசடியில் சிக்கி பணத்தை இழந்து நிற்பது தொடர்கதையாக இருந்தது. குற்றங்கள் பெருகப் பெருக கைதுகள், வழக்குகளும் அதிகரிக்க, தனிச் சட்டம் கொண்டுவரப்பட்டே அது மட்டுப்படுத்தப்பட்டது.

அந்த இடத்தை இப்போது சைபர் குற்றம் எனப்படும் கணினிவழி மோசடிகள் தொடரும் சவாலாக இருந்துவருகிறது. இதிலும் கணிசமாக சித்தரிப்பு மோசடிகள் கணிசமானவை என்கின்றனர், இணையக்குற்றத் தடுப்பு காவல்துறையினர்.

அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற மோசடியின் கதையைக் கேட்டால் அசந்துபோவீர்கள். மும்பை, பரேல் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞரே பாதிக்கப்பட்டவர்.

அவருடைய தந்தை கடந்த வாரம் தன்னுடைய வங்கிக்குப் போனபோதுதான், இலட்சக்கணக்கான ரூபாயைக் காணோம். அவருடைய கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமல் அந்த சில இலட்சங்கள் மாற்றப்பட்டிருந்தன. உடனே அந்தப் பெரியவர் அருகில் உள்ள சைபர்குற்றத் தடுப்பு காவல் பிரிவினரிடம் புகார் அளித்தார். தன்னுடைய வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கிவைக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி சைபர்குற்றத்தடுப்பு காவல் பிரிவினர் நடத்திய விசாரணையில், பெரியவரின் மகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அந்த இளைஞன் அப்படி இல்லையென சாதித்தான். அதனால் அவனை காவல்துறையினர் தனியாகக் கூட்டிச்சென்று விசாரித்தனர். கடைசியில், தான் தான் தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அனுப்பியதாக இளைஞன் ஒப்புக்கொண்டான்.

சரி, இத்தனை இலட்சங்களை யாருக்காக, எதற்காக அந்த இளைஞர் அனுப்பினார்?

குறிப்பிட்ட இளைஞருக்கு (மிஸ்டர் எக்ஸ் என்பதைப் போல திருவாளர் ‘இ’ என்போமே) சமூக ஊடகத் தளமான முகநூல் இணையதளத்தில் சனா கான் என்ற பெண் பெயரில் ஒருவர் இணையவழித் தொடர்பாளர் ஆகிறார். (ஆம், சமூக ஊடக நண்பர் எனக் கூறுவது எவ்வளவு பொருத்தம் அல்லது அபத்தம் என்பதை வாசகர்கள் இதன் முடிவில் தீர்மானித்துக்கொள்ளலாம்.) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்வதாகவும் மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருப்பதாகவும் அந்தப் ’பெண்’ தெரிவிக்கிறார். அதை அப்படியே உண்மையென நம்பும்படி அவருடைய பேச்சும் தகவல்தொடர்பும் இருந்திருக்கிறது.


சொக்கவைக்கும் பேச்சும், அந்தப் ’பெண்’ணின் தனிப்பட்ட, அந்தரங்கப் படங்களெனத் திருவாளர் இ-க்கு முகநூலில் பகிர்ந்து ஒரே இன்பமயத்தை அளித்திருக்கிறார், எதிர்முனைத் தொடர்பாளர் சனா கான். மதிமயங்கிப் போய் இருந்த திருவாளர் இ பதிலுக்கு ’சனா கான்’ கேட்ட அழகுப்பொருள்கள், அம்மாவுக்கு உடல்நலமில்லை; சிகிச்சைக்கு, திருமணத்துக்கான தயாரிப்புகளுக்கு என சனாகான் சொல்லியிருந்த காரணங்களில் ஒன்றைப் பற்றிக்கூட, இ-க்கு சிறுபொட்டு சந்தேகம்கூட இல்லை. கேட்கக் கேட்க பணம் போய்க்கொண்டே இருந்திருக்கிறது.

Cybercrime
ஹாலிவுட் சினிமாவை மிஞ்சும் வகையில் மோசடி : உலக நாடுகளை அலறவிட்ட பெண்

எல்லாவற்றுக்கும் காரணம், அந்தத் தொடர்பாளர் ’இ’யைத் திருமணம் செய்துகொள்வதாக சனா கான் உறுதியளித்ததுதான்...

சரி, அதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கம்தான்... விரும்பியவன் வாய்ப்பு இருப்பதால் அனுப்புகிறான் என எடுத்துக்கொள்ளலாம் என சிலர் சொல்லலாம்.

இ- அனுப்பியதெல்லாம் அவரே கடினமாக உழைத்து அனுப்பியிருந்தார் என்றாலே பாவம் பரிதாபம்தான் என்று வேறு சிலர் சொல்லலாம்.


ஆனால், இ-யின் நிலவரமோ, ’அதையும் தாண்டி அதையும் தாண்டி’ என குணா திரைப்படத்தின் வசனத்தைப் போல, இருந்தது. இ-யின் தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் 24.67 இலட்சம் ரூபாய் சனா கானுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

தற்செயலாக வங்கிக்குப் போன இ-யின் தந்தை, பணம் இல்லததைப் பார்த்து அதிர்ந்துபோக, விவகாரம் காவல்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இணையக்குற்றத் தடுப்பு காவல்துறையின் விசாரணையில், இதே விவகாரத்தில் இன்னொரு சோகக் கதையும் வெளியே வந்தது.

இதே இளைஞர் திருவாளர் ’இ’, 2021ஆம் ஆண்டிலும் சோபியா என்ற பெயரில் முகநூல் தொடர்பாளரான ஆளிடம் 8 இலட்சம் ரூபாய்வரை பறிகொடுத்து ஏமாந்திருக்கிறார்!

முதலில் சூடுபட்டபோதே கவனமில்லாமல் விட்டதால், இப்போது அதைவிட மூன்று மடங்கு பணத்தை இழந்துவிட்டு, கையைப் பிசைந்தபடி நிற்கிறார், திருவாளர் ‘இ’.

விசாரணையில், பழைய சோபியாவும் இப்போதைய சனா கானும் ஒரே ஆள்தான் என்பதை உறுதிப்படுத்தப்பட்டது. முகநூல் உரையாடல், வங்கிப் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றை இணையக்குற்றத்தடுப்பு மையக் காவல் பிரிவினர் அலசிப் பார்த்தனர். அதில் ஒருவழியாக, இ-யை பெண் என்று நம்பவைத்து மோசடி செய்த ஆள், ஜார்க்கண்டில் வசிக்கும் சையது அகமது என்பது கண்டறியப்பட்டது.

அந்த மோசடி நபர் எதற்காக இப்படியொரு மோசடியில் இறங்கினான் என விசாரித்துப் பார்த்தபோது... பி.காம் பட்டதாரியான அந்த இளைஞன், ஆன்லைன் ரம்மிக்கு, சூதாட்டத்துக்கு அடிமையானவன் என்பதும் தெரியவந்தது. நாட்டையே ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் இணையவழிச் சூதாட்டத்தில், இழந்த காசை எடுப்பதற்காக எப்பாடு பட்டாவது யாரிடமாவது பணத்தை மோசடி செய்வது என்கிற எல்லைக்கு ஜார்க்கண்டு இளைஞன் போயிருப்பது உறுதியானது.

பாதிக்கப்பட்ட இளைஞனின் விவரங்களை வெளியிடாத மும்பை காவல்துறையின் இணையக்குற்றத் தடுப்புப் பிரிவினர், அவன், இன்னும் தன்னை சனா கான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறாள் என நம்பிக்கொண்டிருக்கிறான் என்கின்றனர்.

ஒரு பக்கம் திருமண ஆசை, இன்னொரு பக்கம் சூதாட்டம் இளைஞர்களை எப்படியெல்லாம் தடுமாற வைத்துவிடுகின்றன... அவர்கள் அடைய விரும்பும் வாழ்க்கையும் கிடைக்காமல், அதற்கு சம்பந்தமே இல்லாமல் என்னென்னவோ நேர்ந்துவிடுவது எவ்வளவு பெரும் சோகம்!

Cybercrime
Facebook : பேஸ்புக் பயனர்கள் ஜாக்கிரதை! ஏமாற்று ஃபிஷிங் மோசடி உஷார்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com