பல ஹாலிவுட் சினிமாக்களில், அமெரிக்க உளவுத்துறையின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளவர்கள் என்று கதையின் வில்லன்களையோ வில்லிகளையோ காட்டுவதைப் பார்த்திருக்கலாம்.
உண்மையிலேயே இப்போது அமெரிக்க எஃப்.பி.ஐ. உளவு அமைப்பால் முக்கியமாகத் தேடப்படுவோர் பட்டியலில் உலகப்பெரும் கில்லாடிகளுடன் பெண் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
பல்கேரியாவைச் சேர்ந்த சுமார் 42 வயதானவர் எனக் கருதப்படும் அந்தப் பெண், டாக்டர் ருஜா இக்னட்டோவா. இவரைப் பற்றிய தகவலை அளித்தாலோ கைது செய்ய உதவும்படியான தகவல் தந்தாலோ ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என எஃப்.பி.ஐ. அமைப்பு அறிவித்துள்ளது.
இவர், கடைசியாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதியன்று தன்னுடைய நாடான பல்கேரியாவிலிருந்து கிரீசுக்கு பயணம் செய்துள்ளார். ஜெர்மன் நாட்டு பாஸ்போர்ட் மூலம் அவர் ஐக்கிய அரபு அமீரகம், பல்கேரியா, ஜெர்மணி, ரசியா, இரீஸ், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குத் தொடர்ந்து பயணித்திருக்கலாம் என்பது அமெரிக்க கூட்டுப் புலனாய்வு அமைப்பின் அனுமானம்.
ருஜாவின் சகோதரரான கான்ஸ்டாண்டைனும் அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டார் என 2019ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டில் ஒன்காயின் என்ற கிரிப்டோ நாணயத்தை அவர் தொடங்கினார். உலகம் முழுவதும் அதில் முதலீடு செய்யும்படி விளம்பரம் செய்து ஏராளமானவர்களை நம்பவைத்தார்.
நம்ம ஊர் சீட்டுக் கம்பெனிகளைவிட மோசமான அளவில் அப்போது எல்லா நாடுகளிலும் கிரிப்டோ நாணயத்தில் முதலீடு செய்வதற்கு மக்கள் கூட்டம் அலைபாய்ந்தபடி இருந்தது. அந்த மனநிலை ருஜா போன்றவர்களுக்கு அருமையான வாய்ப்பாக அமைந்துவிட்டது.
பன்னாட்டு அளவிலான பிரமிட் மோசடி போல, ஒன்காயின் மூலம் நம்பவே முடியாத அளவுக்கு முதலீடுகளைத் திரட்டினார், ருஜா. ஒன்காயின் கிரிப்டோ நாணயத்தில் கணக்கு தொடங்குவதற்காகப் படித்த ஏமாளிகளாக ஏராளமானவர்கள் ருஜா சொன்ன கணக்குக்குப் பணத்தை அனுப்பியபடி இருந்தார்கள்.
இரண்டு ஆண்டுகளில் ருஜாவின் ஒன்காயினுக்கு அவரே நம்பாத படியான வரவேற்பு கிடைக்கவே, இங்கிலாந்தின் வெம்ப்ளே அரினா பகுதியில் தனி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, பிட்காயினுக்குப் போட்டியாக தங்களுடைய கிரிப்டோ நாணயம் உருவாகும் என உறுதிமொழிகளை அள்ளிவீசினார். அதன்பிறகு பல நாடுகளின் முக்கிய நகரங்களிலும் ஒன்காயின் தொடர்பாக நட்சத்திர விடுதிக் கூட்டங்களையும் நடத்தினார்.
ஒரு கட்டத்தில் ருஜா சொன்னவை எல்லாம் உண்மை அல்ல என்பது மெல்ல மெல்லத் தெரியவர, 2017ஆம் ஆண்டில் மோசடி வழக்குப் பதியப்பட்டது. அமெரிக்காவின் கூட்டுப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யும் இதில் விசாரணையில் இறங்கியது.
2019ஆம் ஆண்டில் ஒன்காயின் விவகாரம் பற்றி அதன் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தது.
ஒன்காயினை வைத்து ஒரு பொருளையும் வாங்கமுடியாது; அதன்மூலம் பலன்பெறக்கூடிய வாய்ப்பு எந்த முதலீட்டாளருக்கும் இல்லை; அதன் நிறுவனருக்கும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் மட்டுமே பலன் கிடைத்திருக்கிறது என உண்மையைப் போட்டு உடைத்தது, எஃப்.பி.ஐ.
உலகம் முழுவதும் ருஜாவை நம்பி 30 லட்சம் பேர் ஒன்காயினில் முதலீடு செய்து மோசம் போயிருக்கிறார்கள். மொத்தம் ஒன்றல்ல இரண்டல்ல 31,557 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு கம்பிநீட்டிவிட்டார், அந்த மோசடிப் பெண்.
இதே வழக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிக்கிய ருஜாவின் சகோதரர், குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதில் இன்னும் மேல்முறையீடு நடந்துவருகிறது.
இன்னொரு நபரான இந்த மோசடியில் சதிசெய்ததாகக் கடந்த மார்ச்சில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
இந்த நிலையில், ருஜாவை எப்படியாவது பிடித்தே தீருவது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியுள்ள எஃப்.பி.ஐ. தலைக்கு அல்ல அவரைப் பற்றிய தகவலுக்கு விலை வைத்திருக்கிறது.
முன்னதாக, கடந்த மாதம் ஐரோப்பிய காவல்துறையும் ருஜாவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 ஆயிரம் யூரோ வழங்கப்படும் என அறிவித்திருந்தது, வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust