சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்தது அதிகம் கவனம் ஈர்த்த நிலையில், இந்த முறை காரில் வந்திருந்தார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்களெல்லாம் நேற்று முன்தினம் மாலை முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்புகளெல்லாம் தேர்தல் ஆணையத்தால் பலப்படுத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிக்க இருக்கிறது.
சில புள்ளி விவரங்கள்..
மொத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:
மாநகராட்சி - 21
நகராட்சி - 138
பேரூராட்சி - 490.
21 மாநகராட்சிகளிலுள்ள மொத்த வார்டுகள் - 1,374, இவற்றில் போட்டியின்றி தேர்வானவர்கள் - 4, தேர்தல் நடக்கும் வார்டுகளின் எண்ணிக்கை - 1,370, போட்டியிடுவோர் - 11,196.
138 நகராட்சிகளிலுள்ள மொத்த வார்டுகள் - 3,843, இவற்றில், போட்டியின்றி தேர்வானவர்கள் - 18, தேர்தல் நடக்கும் வார்டுகள் - 3,825, போட்டியிடுவோர் - 17,922.
490 பேரூராட்சிகளிலுள்ள வார்டுகள் - 7,609, இவற்றில் போட்டியின்றி தேர்வானவர்கள் - 196, தேர்தல் வார்டுகள் - 7,412, போட்டியிடுவோர்- 28,660.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள மொத்த வார்டுகளில் போட்டியின்றி தேர்வானவர்கள் - 218.
மொத்தமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள வார்டுகள் - 12,607. இவற்றில் போட்டியிடுவோரின் மொத்த எண்ணிக்கை - 57,778.
காஞ்சிபுரம் 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டதால் இந்த வார்டுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு வேட்பாளர் அனுசுயா மற்றும் ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி வேட்பாளர் ஐயப்பன் உயிரிழந்ததால் இந்த வார்டுகளுக்குமான வாக்குப்பதிவும் தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டம், முதல்நிலை பேரூராட்சியின் 12-வது உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8-வது வார்டில் யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது" என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு 6-வது நாளாக இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இன்று கர்நாடக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நாவதகி வாதங்களை முன்வைத்தார்.
"ஹிஜாப் தடை நடவடிக்கையில், அரசு பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை கண்டு அரசு வேதனை கொள்கிறது. அனைவரையும் சமமாக நடத்துவதில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. இதனை முழு மனதுடன் சொல்கிறோம். இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. இந்த வழக்கில் மாணவிகளின் சீருடையை மாற்ற கல்லூரி வளர்ச்சிக் குழு (சி.டி.சி.,) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஆனால் இந்த தீர்மானத்துக்கு கீழ்ப்படியாமல், ஹிஜாப் அணிய மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜனவரி 25 அன்று, மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு இந்தப் பிரச்சினையை ஆலோசிப்பதால், தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனவரி 31ஆம் தேதி, குழந்தைகள் ஹிஜாப் அணியக் கூடாது என்றும், பெற்றோர் பெண் குழந்தைகளை ஹிஜாப் அணிந்து அனுப்பினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக போராட்டங்கள் தீவிரமடைந்ததால் அரசு அரசாணை வெளியிட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு நேரடியாக தலையிடவில்லை. கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் பரிந்துரைத்துள்ள சீருடையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை மட்டுமே அரசு எடுத்தது. அரசு, இந்த விவகாரத்தில் கல்லூரி வளர்ச்சிக் குழுவுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் முழு சுயாட்சி வழங்கியுள்ளது" என்று வாதிட்டார்.
தலைமை நீதிபதிகள், அவரை இடைமறித்து, "கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதித்தால், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையா?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, வழக்கறிஞர் நவத்கி, "பிரிவு 131-ன் கீழ் மாநிலத்திற்கு மறுசீரமைப்பு அதிகாரங்கள் உள்ளன. எதிர்காலத்தில் இதில் மாணவர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ குறை இருந்தால் அரசு தடை குறித்து முடிவெடுக்கலாம் அல்லது எடுக்காமலும் போகலாம்" என்று பதில் கொடுத்தார்.
கர்நாடகாவில் தேசியக் கொடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சட்டமன்றத்திலேயே உணவருந்தி, உறங்கி எழுந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர் அமளி காரணமாக சட்டமன்றம் இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக கே.எஸ். ஈஸ்வரப்பா இருந்து வருகிறார். கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காவிக்கொடி இந்தியாவின் தேசியக் கொடியாக எதிர்காலத்தில் மாறலாம். காவிக் கொடி செங்கோட்டையில் பறக்க விடப்படலாம் என்று கூறியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
தற்போது சட்டமன்றம் நடைபெற்று வரும் நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை, சபாநாயகர் விஷ்வேஸ்வர் ஹெக்டே, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், 'எதிர்க்கட்சி தலைவர்களை சமாதானப்படுத்த 2 மணி நேரமாக முயற்சி மேற்கொண்டோம். சட்டமன்றத்தில் படுத்து உறங்கி போராட்டம் நடத்த வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளனர்' என்றார்.
இந்நிலையில் நேற்றிரவு கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் தலைமையில் சட்டமன்றத்தில் தங்கி தர்ணாவில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற கேன்டீனில் இரவு உணவை முடித்துக் கொண்டு, அலுவல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே அவர்கள் உறங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.
எக்கோ நிறுவனம் , அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக அந்நிறுவனங்களின் மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த, எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் மனுதாரரின் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு உரிய காப்புரிமையை சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பெறவில்லை என்றும் வாதிட்டார்.
தனி நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான சட்டப்பிரிவு 14-ல் "பதிப்புரிமை" என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார். இசைப்பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது "எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு" பிரத்யேகமான உரிமையாகும் என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.