அஜித்தின் ரசிகர்கள் `வலிமை' ரிலீஸில் பரபரப்பாக இருக்கிறார்கள். ஆனால் ஹெச்.வினோத்தின் டீமோ 'ஏகே61'க்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டனர்.
ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. செட் வேலைகள் நிறைவடைந்த பின்பு, படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவாகின்றன. ஹீரோயினாக தபுவை கமிட் செய்துள்ளனர். 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்திற்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து தற்போது அஜித்துடன் நடிக்கிறார் தபு. 'வலிமை'யில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை மாற்றிய அஜித், இதிலும் லுக் மாற்றியிருக்கிறார். இந்தக் கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகிவிட்டார் என்றும், அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இயக்குநரிடம் காட்டியிருக்கிறார் என்கின்றனர். வினோத்தும் அந்த லுக்கில் ஆச்சர்யமாகிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
இதர நடிகர்களின் தேர்வுகளும் இன்னொரு புறம் நடந்து வருகிறது. டெக்னீஷியன்கள் டீமில் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் இருக்கலாம் என்கிறார்கள் காரணம் இருவருமே அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' இரண்டிலும் இருந்துள்ளதால் அதே டீம் இணைகிறது. இசையமைப்பாளராக ஜிப்ரான் இருக்கலாம் என்கிறார்கள். 'தீரன் அதிகாரம் ஒன்று'க்கு பிறகு வினோத்துடன் கைகோர்க்கிறார் அவர்.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி மன்மோகன் சிங் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்துள்ளார். அதில் அவர் பேசியது: "ஒருபுறம் மக்கள் பணவீக்கத்தாலும், வேலைவாய்ப்பின்மையாலும் அவதிப்படுகின்றனர். மற்றொருபுறம் 7 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஓர் அரசு தனது தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்வதை விடுத்து, எல்லா பிரச்சினைகளுக்கு முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை காரணம் கூறுகிறது.
பிரதமரின் பதவிக்கென தனிச்சிறப்பான முக்கியத்துவம் இருக்கிறது. பிரதமர் என்பவர் அவரின் கண்ணியத்தை உணர்ந்து நடக்க வேண்டும். வரலாற்றில் பிழை கண்டுபிடித்து பழி போடுவதை நிறுத்த வேண்டும். நான் எப்போதும் இந்த தேசத்தின் கவுரவத்தை எங்கும் விட்டுக் கொடுத்ததில்லை.
இந்த அரசாங்கத்திற்கு பொருளாதார கொள்கை பற்றி புரிதல் இல்லை. வெளியுறவுக் கொள்கையிலும் அரசு தோல்வியடைந்துவிட்டது. சீனா நமது எல்லையில் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாமல் அந்தச் செய்தியைக் கட்டுப்படுத்துகிறது. வெளியுறவுக் கொள்கையை பிற நாட்டுத் தலைவர்களை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடிப்பதாலும், பிரியாணி சமைத்துக் கொடுப்பதாலும், ஊஞ்சலில் ஒன்றாக ஆடுவதாலும் மட்டும் கட்டமைக்க முடியாது. பாஜகவினர் போலி தேசியவாதிகள். இந்த அரசு பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறது.
நாங்கள் எப்போதும் நாட்டைப் பிரித்ததில்லை. உண்மையை மறைக்க முயன்றதில்லை. நாட்டின் மாண்பையோ அல்லது பிரதமரின் பதவிக்கான கண்ணியத்தையோ குறைவாக எண்ணியதில்லை. ஆனால் இன்று மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்தில் போலி தேசியவாதம் வெறும் கூடு. ஆனால் மிகவும் ஆபத்தானது. இது பிரிட்டிஷ் நாட்டவர் பின்பற்றிய பிரித்தாளும் கொள்கைக்கு சமமானது. இந்த ஆட்சியின் அரசியல் சாசன அமைப்புகள் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
பொருளாதாரக் கொள்கைகளில் சுயநலமும், பேராசையும்தான் மிகுந்து நிற்கிறது. பாஜக, என்னை எப்போதுமே வலுவற்றவன், மவுனி, ஊழல்வாதி என்று விமர்சித்தது. ஆனால், இன்று பாஜக, அதன் பி, சி டீம்கள் எல்லாம் நாட்டு மக்கள் முன்னால் சுயரூபம் தென்பட அம்பலமாகி நிற்கிறது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி" என்று மன்மோகன் சிங் பேசினார்.
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு ஒருபோதும் அனுமதி வழங்கமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தேசிய பசுமைதீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வன உயிரிபாதுகாப்பு அமைப்பிடம் உரியஅனுமதி பெற்ற பிறகு இத்திட் டத்தை செயல்படுத்தலாம் எனக் கூறி, இதற்கான அனுமதியை ரத்து செய்ய மறுத்து விட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்தவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில்,தமிழக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் நியூட்ரினோ திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இத்திட்டம் அமையும் இடம்புலிகள் இடம்பெயரும் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் தனியார்ஆராய்ச்சி கழகத்துக்கு இத்திட்டத்துக்கான அனுமதி வழங்க முடியாது என மாவட்ட வன அதிகாரி அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். மேலும் இத்திட்ட அமைவிடம் உலகளவில் பல்லுயிர் உயிர்ப்பன்மை முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
இதேபோல போடி மேற்குமலைப்பகுதியானது, புலிகள் வசிக்கும் மேகமலை, வில்லிபுத்தூர் புலிகள் சரணாலயப் பகுதியையும், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியையும் இணைக்கும் முக்கிய பகுதி. இங்கு புலிகள் மட்டுமின்றி பிற வனவிலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து செல்வதற்கான முக்கிய வழித்தடம் மட்டுமின்றி இனப்பெருக்கத்துக்கும் முக்கிய காரணியாக உள்ளது.
இந்த மலையில் மிகச்சிறிய அளவில் அதிர்வுகள் ஏற்பட்டால்கூட புலிகளின் நடமாட்டம் பாதிக்கப்படும். அப்படியொரு சூழல் ஏற்பட்டால் இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கும் நிலை ஏற்படும். எனவே இங்கு நியூட்ரினோ திட்டத்துக்கு ஒருபோதும் அனுமதிவழங்க முடியாது என திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விரைவி்ல் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் நியூட்ரினோ திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா வருவதற்கான விமான கட்டணம் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் தங்கி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் இந்தியா திரும்ப முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஆனால் இந்தியா திரும்புவதற்கான விமான கட்டணம் அதிரடியாக அதிகரித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இருந்த விமான டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதாகவும், இது வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய ஒன்றிய அமைச்சர் முரளிதரன், விமான டிக்கெட் கட்டணம் தொடர்பாக விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
``தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி என்று சொன்னார். அதை நம்பி இருந்தவர்கள் ஏமாந்து வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் ஒரே கட்சி தி.மு.க தான். இனியும் அவர்களது பித்தலாட்டத்தை மக்கள் நம்பமாட்டார்கள்'' என்று தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு கீழே இறங்கிய போது, எதிரே பிரசாரம் செய்து கொண்டு வந்த அமைச்சர் கே.என்.நேருவைப் பார்த்ததும் கைகொடுத்துச் சிரித்து பேசினார் ஹெச்.ராஜா.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக வாகனத்தில் நின்றபடியே பேசத்தொடங்கினார் ஹெச்.ராஜா, ``தி.மு.க ஆட்சிக்காலத்தில் ரெளடித்தனம் செய்கிறார்கள். கோவில்களை இடிக்கிறார்கள் என்பதற்காகத் தான் மக்கள் அ.தி.மு.க-விற்கு வாக்களித்தனர். ஆனால், அ.தி.மு.க எப்போதுமே வாயை மூடிக் கொண்டே இருப்பதால் வேறு வழியில்லாமல் மீண்டும் தி.மு.க-விற்கு வாக்களித்தார்கள். இப்படி தான் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கிறார்கள். தர்மத்தைக் காக்க இந்த முறை பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
இனி தி.முக அரசை மனநலம் குன்றிய அரசு என்று அழையுங்கள். நீங்கள் ஒன்றிய அரசு என்று சொல்லும் போது நாங்கள் மனநலம் குன்றிய அரசு என்று சொல்வதில் எந்த தவறும் இல்லையே. இனி சமூக வலைத்தளங்களில் பதிவு மனநலம் குன்றிய அரசு தி.மு.க என்று சேர்த்து எழுது அதனை டிரெண்டாகவும் மாற்றுங்கள்.
தாமரைக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்காவது வாக்களித்தீர்கள் என்றால் அது மகாப்பாவம். இதனை நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” மோடி அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்" என்று பேசிவிட்டு அடுத்தடுத்த பிரசாரம் செய்ய அங்கிருந்து கிளம்பிய போது தி.மு.க வேட்பாளரை ஆதரித்து கே.என் நேரு பிரசாரம் செய்ய வந்தார்.
அப்போது கே.என்.நேருவும், ஹெச்.ராஜாவும் வாகனத்தை விட்டு இறங்கி ஒருவரை ஒருவர் சந்தித்து கைகளை கொடுத்து நட்பு பாராட்டிக் கொண்டனர். கூடியிருந்த தொண்டர்கள் அண்ணணோட பாணியைக் கொஞ்சம் கூட புரிஞ்சிக்கவே முடியவில்லையே என்று நெளிந்தனர்.