இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான என் டி டிவி நிறுவனத்தை இத்தனை காலமும் பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் நடத்தி வந்தனர்.
கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட சில நிறுவன ரீதியிலான மாற்றங்கள் காரணமாக, தற்போது என் டி டிவியை அதானி குழுமம் முழுமையாகக் கைப்பற்ற இருக்கிறது.
அதனை முன்னிட்டு, ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோர் "ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங்ஸ்" என்கிற நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
அதோடு, "ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங்ஸ்" நிறுவனத்தின் இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்ஜய் புகலியா, செந்தில் சின்னியா செங்கல்வராயன் ஆகியோரை நியமித்துள்ளனர்.
இந்த விவரங்களை மும்பை பங்குச் சந்தையிடமும் முறையாகத் தெரியப்படுத்தியுள்ளது "ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங்ஸ்" நிறுவனம். இந்த இரண்டு முடிவுகளும் நவம்பர் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் என் டி டிவி சமர்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், VCPL என்கிற துணை நிறுவனத்தை வாங்கியதன் மூலம், என் டி டிவி குழுமத்தின் 29.18 சதவீத பங்குகளை கைப்பற்றியதாக அதானி குழுமம் கூறியது.
அதனைத் தொடர்ந்து, என் டி டிவி நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்ற, மேற்கொண்டு என் டி டிவி நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கு கடந்த நவம்பர் 22ஆம் தேதி ஓபன் ஆஃபர் சேல் அறிவிப்பும் வெளியானது.
இந்த ஓபன் ஆஃபருக்கு வரும் டிசம்பர் 5ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டத்துக்குள் யார் வேண்டுமானாலும் அதானியிடம் தங்களின் பங்குகளை விற்கலாம்.
ஒருவேளை எவரும் முன் வந்து அதானி குழுமத்துக்கு என் டி டிவியின் பங்குகளை விற்கவில்லை எனில், அதானி குழுமம், என் டி டிவி பங்குகளை வைத்திருக்கும் நிறுவன முதலீட்டாளர்களை அணுகி பங்குகளை வாங்கத் தொடங்கும்.
எல் டி எஸ் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் லிமிடெட் (9.75%), மெளரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த விகாசா இந்தியா இ ஐ எஃப் 1 ஃபண்ட் (4.42%), ஜி ஆர் டி செக்யூரிட்டீஸ் (2.82%), ஆதேஷ் ப்ரோகிங் ஹவுஸ் (1.5%), த்ரோலியா ஏஜென்சீஸ் (1.48%), கன்ஃபார்ம் ரியல் பில்ட் (1.33%) ஆகிய நிறுவனங்களிடம் கணிசமான என் டி டிவி பங்குகள் உள்ளன.
இதைத் தடுக்க வேண்டுமென்றால் பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய், அதானிக்கு எதிராக, இதே போல ஒரு ஓபன் ஆஃபரை அறிவிக்கலாம். ஆனால் அதற்கு கோடிக் கணக்கில் பணபலம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட தசாப்த காலத்திற்கு முன்பே என் டி டி வி நிறுவனத்தை கைப்பற்றுவதற்கான பணிகள் அன்றைய தேதிக்கு இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டது என்கிறது ஸ்க்ரோல் வலைதளம்.
ஏ எம் ஜி மீடியா நெட்வொர்க் லிமிடெட் என்கிற அதானி குழுமத்தின் துணை நிறுவனம், விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) என்கிற நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 113.74 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்த VCPL நிறுவனத்தின் மூலம் தான் அதானி குழுமம் என் டி டிவி பங்குகளை கைப்பற்றியது.
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நிறுவனம் தன்னை ஒரு வணிக மேலாண்மை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் நிறுவனமாக கூறிக் கொள்கிறது.
ஆனால் இதுவரை அந்நிறுவனத்துக்கு என எந்த ஒரு சொத்து பத்துக்களும் இல்லை. அதேபோல விஸ்வ பிரதான் நிறுவனத்தின் இயக்குனர்கள் அந்த காலகட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது
கடந்த 2009 ஆம் ஆண்டு இதே விஷ்வ பிரதான் நிறுவனம் ராதிகா ராய் ப்ரனாய் ராய் பிரைவேட் லிமிடெட் ("ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங்ஸ்") என்கிற நிறுவனத்திற்கு 403.85 கோடி ரூபாயைக் கடனாக கொடுத்தது. அந்த ராதிகா ராய் ப்ரனாய் ராய் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் என் டி டி வியில் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்தது.
இப்போது தானே விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எந்த சொத்து பத்துக்களும் இல்லை என்று பார்த்தோம். அதற்குள் எப்படி சுமார் 403 கோடி ரூபாயை வேறு ஒரு நிறுவனத்திற்கு கடன் கொடுக்க முடிந்தது என கேள்வி எழுகிறதா?
விஷ்வ பிரதான் நிறுவனத்திற்கு ஷினானோ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் கடன் கொடுத்தது. ஷினானோ நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனம் கடன் கொடுத்திருக்கிறது. ஷினானோ நிறுவனம் அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாக இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 ஆம் ஆண்டு விஸ்வ பிரதான் நிறுவனத்தின் உரிமை கைமாறியதாக அந்நிறுவனம் இந்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் மற்றும் தரவுகள் கூறுகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மகேந்திர நாத்தாவோடு தொடர்புடைய நெக்ஸ்ட் வேவ் டெலிவெஞ்சர் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ப்ளூ பில்ட்டுவேல் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் விஸ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய உரிமையாளர்களாயினர்.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, அதானி குழுமம் விஷ்வ பிரதான் நிறுவனத்தை வாங்கும் வரை, விஸ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நெக்ஸ்ட் வேவ் டெலிவெஞ்சர்ஸ் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாகவே இருந்ததாக இந்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கை மற்றும் தரவுகள் கூறுகின்றன.
ராதிகா ராய் பிரனாய் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கொடுத்த 403 கோடி ரூபாய் கடன் இப்போது வரை திரும்ப கொடுக்கப்படவில்லை என பல்வேறு செய்திகள் கூறுகின்றன.
"ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங்ஸ்" நிறுவனத்திற்கு கடன் கொடுக்கும் ஒப்பந்தத்தில், கடன் காலத்தில் விஸ்வ பிரதான் வழங்கிய கடனை எப்போது வேண்டுமானாலும், "ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங்ஸ்" நிறுவனத்தின் 99% பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்ததாக ஸ்க்ரோல் வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டது.
ஒருகட்டத்தில் விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நிறுவனம், தான் கொடுத்த கடன் தொகைக்கு பதிலாக, "ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங்ஸ்" நிறுவன பங்குகளாக மாற்றிக் கொண்டு அந்நிறுவனத்தின் 99% பங்குகளை கைப்பற்றியது.
இதன் விளைவாக, "ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங்ஸ்" வசமிருந்த 29.18 சதவீத பங்குகளும், VCPL வசமாயின. அதானி VCPL நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கிய பின், அந்த 29.18 சதவீத பங்கு, அதானி குழுமத்தின் வசமானது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust