தாஜ்மஹால் : 'தேஜோ மஹாலயா' எனும் சிவன் கோயிலா? - தொடரும் சர்ச்சை | விரிவான கட்டுரை

தாஜ்மஹாலில் உள்ள 20 க்கும் மேற்பட்ட சீல் வைக்கப்பட்ட “அறைகளை” திறக்கக் கோரி உத்தரவிட வேண்டும். இந்த அறைகளில் இந்து கடவுள்கள் சிலைகள் இருக்கக் கூடும். என்பவை பாஜக தலைவர் ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்த மனுவில் உள்ள கோரிக்கைகள்.
தாஜ்மஹால்
தாஜ்மஹால்Twitter
Published on

இந்தியாவில் பணவீக்கம், வேலையின்மை, மின்வெட்டு அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அன்றாட வாழ்க்கையை கடப்பதற்கு கஷ்டப்படுகின்றனர். இப்படி பொருளாதார அரங்கில் இந்திய மக்கள் பிரச்சினைகளை சந்திக்கும் போதெல்லாம் ஆட்சியாளர்கள் மதவாதத்தை கையிலெடுக்கின்றனர். அதன் லேட்டஸ்ட் வரவு தாஜ்மஹால் ஒரு இந்துக் கோவில் எனும் சதிக்கோட்பாடு!

“தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை” நிறுவ உண்மையையறியும் குழு அமைக்க வேண்டும். தாஜ்மஹாலில் உள்ள 20 க்கும் மேற்பட்ட சீல் வைக்கப்பட்ட “அறைகளை” திறக்கக் கோரி உத்தரவிட வேண்டும். இந்த அறைகளில் இந்து கடவுள்கள் சிலைகள் இருக்கக் கூடும். இவை பாஜக தலைவர் ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்த மனுவில் உள்ள கோரிக்கைகள். இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை மே 12 அன்று தள்ளுபடி செய்தது.

இதற்கு ஒரு நாள் முன்பு, ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ராஜ்சமந்தின் பாஜக எம்பியும், ஜெய்ப்பூரின் முன்னாள் அரச குடும்ப உறுப்பினருமான தியா குமாரி, தாஜ்மஹால் இருக்கும் நிலம் தனது முன்னோர்களுக்குச் சொந்தமானது என்றும், “ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டு அவற்றை நீதிமன்றம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டால் ஆவணங்களை வழங்குவோம்”, என்று கூறியிருக்கிறார்.

பல ஆண்டுகளாக, பல பாஜக தலைவர்கள் தாஜ்மஹால் உண்மையில் ஷாஜஹானின் ஆட்சிக்கு முன்பே கட்டப்பட்ட ஒரு இந்து கோவில் என்று கூசாமல் பொய்யுரைத்து வருகின்றனர். வரலாற்றுக்கு மாறான இந்தப் பொய்க் கூற்றுக்களை மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 2017 ஆம் ஆண்டில், அப்போதைய பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வினய் கட்டியார், இந்த நினைவுச்சின்னம் உண்மையில் "தேஜோ மஹாலயா" என்று பெயரிடப்பட்ட சிவன் கோயில் என்றும், இது ஒரு இந்து ஆட்சியாளரால் "முதலில்" கட்டப்பட்டது என்றும் கூறினார்.

"தேஜோ மஹாலயா" கூற்று முதன்முதலில் பி என் ஓக் என்ற வரலாற்றாசிரியரால் 1989 இல் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த பி என் ஓக் ஒரு இந்துத்துவவாதியாவார். உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று அறிஞர்களோ இல்லை பல்கலைக் கழகங்களோ இவரது கருத்துக்களை ஏற்பதில்லை. ஆனாலும் அவர் தனது வரலாற்றுக்கு மாறான கருத்துகளை நிலைநிறுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்தார். இந்த மனு குறித்து 2000 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் bee in his bonnet என்று ஆங்கில வழக்கால் கேலி செய்தது. இந்த வாக்கியத்தின் பொருள் ஒருவர் எதையாவது மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருப்பார். அது உண்மையா, பொய்யா என்பதைப் பற்றி கவலைப்படாமல் அவரைப் பொறுத்தவரை அதை முக்கியமானது என்று நினைப்பதால் பேசிக் கொண்டே இருப்பார். இப்படி உச்சநீதிமன்றம் குட்டு வைத்தும் அவர் அடங்கவில்லை.

அழகிய தாஜ்மஹாலின் அமைப்பு

தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தாஜ்மஹாலை பதிவு செய்திருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் உலகளாவிய சின்னமாகவும், உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. முகலாய பேரரசர் ஷாஜகானின் உத்தரவின் பேரில் 1632 மற்றும் 1648 க்கு இடையில் தாஜ்மஹால் கட்டப்பட்டது.

தாஜ்மஹால் இந்தோ-இஸ்லாமிய மற்றும் தைமுரிய கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளை உள்ளடக்கியது. மேலும் டெல்லியில் உள்ள ஹுமாயூனின் கல்லறை போன்ற பழைய நினைவுச்சின்னங்களிலிருந்து வளர்ந்து வந்த முகலாய கட்டிடக்கலையின் முன்னேற்றமாக இது காணப்படுகிறது.

தாஜ்மஹாலின் அமைப்பு என்பது ஒரு பிரமாண்டமான வெள்ளை பளிங்கு கல்லறை ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 305 மீட்டர் மற்றும் 549 மீட்டர் அளவுள்ள சுவர்களுக்குள் சூழப்பட்ட வடிவியல் கட்டங்களின் வரிசையுடன் கட்டப்பட்ட ஒரு பெரிய வளாகத்தின் ஒரு பகுதியாகும். ஒரு மசூதி, விருந்தினர் மாளிகை, பிரதான நுழைவாயில் மற்றும் வெளிப்புற முற்றம் போன்ற கட்டமைப்புகள் கட்டப்பட்ட பின்னர் 1653 இல் இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

தாஜ்மஹால்
Karnataka : பள்ளிகளில் திப்பு சுல்தான் பாடங்களை குறைக்க பாஜக அரசு முடிவு

இதயம் கவரும் அழகான நினைவுச் சின்னமான தாஜ்மஹால் மொகலாயப் பேரரசர் ஷாஜகானின் அன்பு மனைவி மும்தாஜ் மஹால் இறந்த பிறகு அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். பேரரசர் ஷாஜகானும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

தாஜ்மஹால் அன்பின் அழியாத சின்னமாக அறியப்படுகிறது. ஷாஜகானின் மும்தாஜ் மீதான காதலை விடவும், முகலாயப் பேரரசின் அதிகாரம் மற்றும் மகிமையின் பிரகடனத்தை விடவும் ஷாஜகானின் லட்சிய நினைவுச்சின்னமாக இது இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். தாஜ்மஹால் மூலம் வருங்கால மக்கள் தனது கீர்த்தியைப் பெருமையை நினைவு கொள்வர் என ஷாஜகான கருதியிருக்கலாம்.

சமாதியின் வெளிப்புறம் செவ்வக பேனல்களில், பதிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களின் கையெழுத்து மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சமாதி நிற்கும் மேடையின் நான்கு மூலைகளிலும் மினாராக்கள் எனப்படும் அழகான குறுகிய கோபுரங்கள் உள்ளன.

கல்லறைக்கு தெற்கே ஒரு தோட்டம் உள்ளது. இது நீர்வழிகளால் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய மற்றும் இந்தியக் கலையின் வரலாற்றாசிரியரான கேத்தரின் ஆஷரின் கூற்றுப்படி, குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கத்தின் நீரோடைகளை ஒத்திருக்கிறது. ஆஷரின் கூற்றுப்படி, இந்த தோட்டம் முகலாயர்கள் ஏற்றுக்கொண்ட சொர்க்கத்தின் தோட்டம் என்ற பண்டைய பாரசீகக் கருத்தை முன்மாதிரியாகக் கொண்டது.

தாஜ் மஹால்
தாஜ் மஹால்Twitter

"தேஜோ மஹாலயா" சதிக் கோட்பாடு

இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான நிறுவனத்தின் எழுத்தாளரும் நிறுவனருமான பி என் ஓக் எனும் போலி வரலாற்றாசிரியர், முஸ்லீம் ஆட்சியாளர்களின் நினைவுச்சின்னங்கள் உண்மையில் இந்து தோற்றம் கொண்டவை என்று நம்பினார். 1976 இல், அவர் ‘‘Lucknow’s Imambaras are Hindu Palaces’ என்ற புத்தகத்தையும், ‘டெல்லியின் செங்கோட்டை இந்து லால்கோட்’ Delhi’s Red Fort is Hindu Lalkot என்ற புத்தகத்தையும் எழுதினார். 1996ல் ‘Islamic Havoc in Indian History இஸ்லாமிக் ஹேவோக் இன் இந்தியன் ஹிஸ்டரி’யை வெளியிட்டார்.

இருப்பினும், ஓக் 1989 ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகமான 'தாஜ்மஹால்: தி ட்ரூ ஸ்டோரி', இன்று தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. ஷாஜகானின் தாஜ்மஹால் உண்மையில் சிவபெருமானுக்குரிய ஒரு இந்து கோவில் என்று ஓக் வாதிட்டார். இது ராஜா பரமர்தி தேவ் என்பவரால் "நான்காம் நூற்றாண்டில் ஒரு அரண்மனையாகக் கட்டப்பட்டது", என்று ஓக் தனது நூலில் கூறுகிறார்.

ஓக்கின் கூற்றுப்படி, முகலாயர்களின் வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தாஜ்மஹால் கட்டப்பட்டது. மட்டுமல்ல, "தாஜ்மஹால் என்பது பண்டைய இந்து பெயரான தேஜோமஹாலயாவின் பிரபலமான தவறான உச்சரிப்பு என்பதைத் தனது ஆராய்ச்சி உறுதியாக நிறுவியுள்ளது," என்கிறார்.

12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் மீது முஹம்மது கோரி படையெடுத்த போது "தேஜோ மஹாலயா" அழிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது என்று அவர் தனது நூலில் கூறுகிறார். அடுத்து மொகலாய பேரரசர் ஹுமாயூன் 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அது ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் கைகளுக்குச் சென்று நிர்வகிக்கப்பட்டது என்றும் அவர் கருதினார்.

ஓக்கின் கூற்றுப்படி, கோயில் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது. அவர் அதைக் கல்லறையாக மாற்றி தாஜ்மஹால் என்று பெயர் மாற்றினார்.

ஓக் "பாரத நாட்டின் உண்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீண்டும் நிலைநாட்ட" உச்ச நீதிமன்றத்தை நாடினார், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. 2000 ஆம் ஆண்டு இந்த மனுவை தவறான கருத்துடையது என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அலகாபாத்
அலகாபாத்Twitter

ஆனால் ஓக்கின் கோட்பாடு அழியவில்லை

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளைத் திறக்க வேண்டும் மனுதாரர் ரஜ்னீஷ் சிங் மனுத் தாக்கல் செய்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஓக் தாஜ்மஹாலின் "சீல் செய்யப்பட்ட அறைகளை" திறக்க வேண்டும் என்று கோரியிருந்தார். "அந்த சீல் செய்யப்பட்ட அறைகளில் சில தீர்க்கமான சான்றுகள் மறைந்துள்ளன என்பது எனது கருத்து. அவை சமஸ்கிருத கல்வெட்டுகள், இந்து சிலைகள், புனித நூல்கள் மற்றும் ஷாஜகானுக்கு முந்தைய கட்டிடத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் நாணயங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்,” என்று அவர் எழுதினார். இப்படிப் பூட்டிய அறையில் என்ன இருக்கும் என்பதைத் தெரியாமலே ஓக் அவர்கள் அடித்து விட்டார்.

உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த சிங்கின் மனு, வரலாற்றறிஞர் ஓக்கின் கோட்பாட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறது.

இந்த மனுவில் "கி.பி 1212 இல், ராஜா பரமர்தி தேவ் தேஜோ மஹாலயா கோவில் அரண்மனையை (தற்போது தாஜ்மஹால்) கட்டியதாகப் பல வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளது. இந்த கோவில் பின்னர் ஜெய்ப்பூரின் அப்போதைய மஹாராஜா ராஜா மான் சிங்கால் பெறப்பட்டது. அவருக்குப் பிறகு ராஜா ஜெய் சிங்கால் நிர்வகிக்கப்பட்டது. ஆனால் ஷாஜஹானால் (1632 இல்) இணைக்கப்பட்டு பின்னர் அது ஷாஜகான் மனைவியின் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது, ”என்று கூறப்பட்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டிலும் ஆக்ராவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் இதேபோன்ற ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தாஜ்மஹால் ஒரு இந்து கோவில் என்றும், எனவே இந்துக்கள் கோயிலில் "தரிசனம்" மற்றும் "ஆரத்தி" செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.

இந்துக் கோயில் பற்றிய ஓக்கின் கோட்பாடு எந்த வரலாற்று அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், சில வரலாற்றாசிரியர்கள் தாஜ்மஹால் இருக்கும் நிலம் உண்மையில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறியுள்ளனர். அக்பரால் (மற்றும் முகலாயர்களுக்கு முந்தைய பிற வம்சங்களால்) பயன்படுத்தப்பட்ட ஆக்ரா கோட்டையிலிருந்து ஆற்றின் குறுக்கே யமுனைக்கு அருகே இருந்த இந்த நிலம், ஷாஜஹானால் ஜெய் சிங்கிடம் இருந்து பெறப்பட்டது என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இதை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அரசன் ஜெய்சிங்கிடம் இருந்து நிலத்தைக் கைப்பற்றிய ஷாஜகான், அந்த நிலத்தில் தாஜ்மகாலைக் கட்டியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com