ஐஏஎஸ் தேர்வில் ஐபிஎஸ் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் அகாடமியில் பயிற்சி வழங்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தெலுங்கானா தலைநகரில் இந்த அகாடமி அமைந்துள்ளது.
தற்போது தேசிய போலீஸ் அகாடமியின் புதிய இயக்குநராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சேர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
சேர்மராஜனுக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம். அவரது தந்தை பெயர் எஸ்.கே.அய்யாசாமி. தாயார் பெயர் ரத்தினம்மாள். சேர்மராஜனது குடும்பம் ஒரு வணிகக் குடும்பமாகும்.
இக்குடும்பத்தில் மூத்த மகன் சேர்மராஜன் ஆவார். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பும், நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பையும் முடித்துள்ளார்.
உத்தம்பாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ரௌத்தர் ஹவுதியா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பட்டப்படிப்பில் இவர் வரலாற்றை முதன்மை பாடமாக எடுத்துள்ளார். பின்னர் மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் எம்.ஏ.பட்டம் படித்து முடித்தார்.
சேர்மராஜன் அவரது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். 1987 இல் தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். ஐபிஎஸ் அதிகாரியாகப் பீகார் மாநில கேடராக பொறுப்பேற்றார். அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்படாமல் பீகாரோடு இருந்தது. அம்மாநிலத்தில் ராஞ்சி மாநகரில் தனது ஐபிஎஸ் பணியை அவர் துவங்கினார்.
முதலில் சசாரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்து பின்னர் பதவி உயர்வு பெற்று ரோஹதாஸ் மாவட்டத்தின் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.
பீகார் மாநிலம் கொள்ளையர் ரவுடிகள் நிறைந்த மாநிலமாகும். இவர்களது ஆதிக்கம் நிறைந்த பல மாவட்டங்களில் சேர்மராஜன் தைரியத்துடன் பணியாற்றினார். பீகாரின் ரோஹ்தாஸ், பகல்பூர், முசாபர்பூர், ஜெகனாபாத் மற்றும் கிழக்கு சம்பாரான் போன்ற மாவட்டங்கள் வன்முறைக்கும், ரவுடியிசத்திற்கும் பெயர் பெற்ற மாவட்டங்களாகும்.
இங்கெல்லாம் சேர்மராஜன் பணியாற்றினார். என்கவுண்டர் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் கொள்ளையர்கள், ரவுடிகள் ஆதிக்கத்தை ஒடுக்கினார். இதனாலேயே பீகார் மாநிலம் முழுவதும் புகழ் பெற்றார்.
பீகாரில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின்னர் மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். 1990 இல் புலனாய்வுப் பணியகத்தில் சேர்ந்தார். ஐபி (IB) எனப்படும் உளவுப் பிரிவில் அதிகாரியாக டெல்லி, தமிழ்நாடு, குஜராத், லடாக், மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றினார்.
இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் சேர்மராஜன் மூன்றாண்டுக் காலம் பணியாற்றினார். இப்படி மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான இவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இதைத் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இப்படி ஒரு உயர் பதவிக்குப் பொறுப்பேற்றதன் மூலம் சேர்மராஜன் சாதனை படைத்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust