மத்திய அரசின் 2022-23 நிதி அண்டிற்கான பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பட்ஜெட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அமைந்திருக்கிறது. தனிநபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த உழவர்களுக்கு நலத் திட்டங்கள் இல்லை, தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவி இல்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்களும் இல்லை, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடும் இல்லை என்ற நிலையில் ஒரு நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பது தமிழ்நாட்டிற்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கோதாவரி – பெண்ணாறு - காவிரி நதிநீர் திட்டத்தின் விரிவான அறிக்கை மட்டுமே தயார் என்ற அறிவிப்பு இருப்பது ஆறுதல் அளித்தாலும், அறிவிப்பினை செயல்படுத்த முதல் கட்ட நிதி ஒதுக்கீட்டினைக் கூட நிதிநிலை அறிக்கையில் காண முடியவில்லை என்பது கவலையளிக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ராணுவ பெருவழித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால், இத்துறையிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை ரூ.25 ஆயிரம் கோடி அளவிற்குக் குறைத்திருப்பது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக மட்டும் தெரியவில்லை; அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக் கூடாது என்ற எண்ணவோட்டத்தையே வெளிப்படுத்துகிறது.
பருவநிலை மாற்றத்தைப் பற்றி பிரதமரே பன்னாட்டு கருத்தரங்குகளில் வாக்குறுதி அளித்து விட்டு அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்கு இதற்காக எவ்வித புதிய அறிவிப்புகளோ, போதிய நிதி ஒதுக்கீடோ இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்துள்ளது. அதேபோல் “One Nation One Registration” என்று மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்திருப்பது, எந்த அறிவிப்பினைச் செய்தாலும் மாநில உரிமைகளை எப்படிப் பறிப்பது என்பதை மட்டுமே ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு செயல்படுவதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் ஏற்பட்ட வாழ்வாதார, பொருளாதார இழப்பில் இருந்து மக்களை மீட்கும் நலத் திட்டங்களாக எதிர்பார்த்த நேரடி பண உதவி, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் திட்டங்கள், ஆக்கபூர்வமான மானியங்கள் போன்ற எதுவும் இல்லை. 2022-23ம் ஆண்டுக்கான மாநில அரசுகளுக்கு மொத்த நிதிப்பற்றாக்குறை வரம்பு 4 விழுக்காடு எனச் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை 30.6.2022 உடன் நிறைவடையும் சூழலில், இத்தொகை வழங்குவதை தொடர வேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கையை புறக்கணித்திருப்பது ஒன்றிய - மாநில அரசுகளின் நல்லுறவிற்குக் கை கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையையே காட்டுகிறது. சுருங்கச் சொன்னால், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் திட்டங்களை அளிக்க மறந்து, குறிப்பாக 5 மாநிலத் தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்கு ஏதாவது நல்ல அறிவிப்பு கிடைக்காதா என ஏங்கித்தவித்த மக்களின் எதிர்பார்ப்பைப் புறக்கணித்து, மக்களைப் பற்றி சிந்திக்காத இந்த நிதிநிலை அறிக்கையை 'மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை' என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது" என அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் 2022 பட்ஜெட்., "நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட்" என பாராட்டியிருக்கிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் `மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத் துறைக்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத்துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்று நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருக்கிறது. அ.தி.மு.க சார்பில் பிரதமர் மோடிக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட்டை வழங்கிய நிதியமைச்சருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.