ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. ஹைதராபாத்தைத் தலைநகராகக் கொண்ட தெலங்கானா மாநிலம் மொத்தம் 31 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அதேசமயம், ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 13 மாவட்டங்களே உள்ளன.
இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாக இருப்பதாலும், மாவட்ட தலைநகரங்கள் வெகு தொலைவில் உள்ளதாலும் அன்றாடம் அரசு சார்ந்த பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் விரயமாகி வருகின்றது. தேவையற்ற நேர, பண விரயத்தைத் தவிர்க்கும் பொருட்டு மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மாவட்டங்கள் ஒவ்வொன்றையும் தலா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ஆந்திர மாநில மக்கள் மத்தியிலிருந்து வருகிறது.
சித்தூர் மாவட்டம் சித்தூர், திருப்பதி என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சித்தூர் மாவட்டத்திற்கு சித்தூர் தலைநகரமாகவும், புதிய உருவாகியுள்ள ஶ்ரீ பாலாஜி மாவட்டத்துக்குத் திருப்பதி தலைமையிடமாகவும் இருக்கும். புதிய மாவட்டங்கள் உதயம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெலுங்கு வருடப் பிறப்பு நாளில் வெளியாகும் என்று ஆந்திர மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.