பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பெட்ரோல் உள்ளிட்டப் பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலைவாய்பின்மை போன்ற பிரச்னைகளை சரி செய்வதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இருக்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.
விவசாயம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் வளர்ச்சிக்கு எந்த அளவு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதையும் பட்ஜெட்டில் பார்க்க தெரிந்துகொள்ள பலர் காத்திருக்கின்றனர்.
பட்ஜெட் குறித்த தகவல்களை லைவாக தெரிந்துகொள்ள Newssense உடன் இணைந்திருங்கள்.
2023 - 24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 11 மணி அளவில் இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தொடங்குவார். இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்திய ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் இவரே.
இன்று காலை சுமார் 11 மணி அளவில் இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அது குறித்து சில சுவாரசிய தகவல்களை இங்கே பார்த்து விடுவோம்.
பொதுவாக ஜூலை 2019 க்கு முன் ஒரு நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாரோ அல்லது அடுத்த ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறாரோ, பட்ஜெட் ஆவணங்கள் மற்றும் தரவுகள் நிறைந்த ரகசிய காகிதங்களை தோளில் செய்யப்பட்ட ஒரு தரமான ப்ரீஃப்கேசில் தான் கொண்டு வருவார். ஆனால் கடந்த ஜூலை 2019 க்கு பிறகு இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வழக்கத்தை மாற்றி வட இந்தியாவில் பெரிய அளவில் வணிகர்கள் பின்பற்றும் பாகி கத்தாவில் பட்ஜெட் ஆவனங்களைக் கொண்டு வந்தார்.
காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு குறியீடாக அப்போது இது கூறப்பட்டது. இன்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவப்பு நிற பாகி கத்தா பையில் பட்ஜெட் விவரங்கள் அடங்கிய டேப்லெட் உடன் இந்திய நாடாளுமன்றத்திற்கு விரைந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அப்படி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுகள் பெரும்பாலும் 90 முதல் 120 நிமிடங்களுக்குள் நிறைவடைந்து விடும். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை கிட்டத்தட்ட 162 நிமிடங்களுக்கு நீடித்தது. இதுவே இந்திய வரலாற்றில் நிதியமைச்சர் ஒருவர் தாக்கல் செய்து நீண்ட நேர பட்ஜெட் உரை என கணக்கில் டெக்கன் ஹெரால்ட் பட்டியலிட்டிருக்கிறது. இதற்கு முன்பும் 137 நிமிடங்களுக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய சாதனையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடமே இருக்கிறது.
அதிக சொற்களைப் பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை இந்திய ஒன்றிய அரசின் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களையே சேரும். 1991 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டில் சுமார் 18,650 சொற்களைப் பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 - 22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காகிதம் இன்றி டிஜிட்டல் முறையில் இந்திய நாடாளுமன்றத்தில் வாசித்து பேப்பர் லெஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் இந்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை பெற்றார். இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டுக்கும் காகிதங்களில் பிரிண்ட் செய்யப்படவில்லை. டிஜிட்டல் முறையிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட விருப்பதாகவும் பல்வேறு வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
என்னதான் உலகில் அனைவரும் சமம் என பேசிக்கொண்டு இருந்தாலும், இன்றுவரை இந்திய அரசியலில் கணிசமான எண்ணிக்கையில் ஆண் தலைவர்களே கொலொச்சி இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் இதுவரை இரண்டு பெண்கள் மட்டுமே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி. அவரை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இதுவரை இவர் 4 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தால் இது அவருடைய ஐந்தாவது பட்ஜெட் ஆகும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா வலுவடைந்து 81.76 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 50 குறியீடு 147 புள்ளிகள் அதிகரித்து 17,809 புள்ளிகளிலும், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 516 புள்ளிகள் அதிகரித்து 60,066 புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேபினட் அமைச்சரவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகு இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்
அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளும் தேசிய பங்குச் சந்தையில் இன்று சரிவிலேயே வர்த்தகமாகி வருகின்றன.
இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் 2023 - 24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட், நரேந்திர மோதி அரசின் கடைசி முழு பட்ஜெட். அடுத்த ஆண்டு இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடைபெறும் என்பதால், பிப்ரவரி 2023ல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பட்ஜெட்டில் மக்கள் கொண்டாடும் வகையில், ஏழை எளிய வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஆதரவான பட்ஜெட்டாக இருக்கும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி இருப்பதாக சில நம்பத் தகுந்த தேசிய ஊடக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
கேபினட் அமைச்சரவை, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்து விட்டது. இன்னும் சில நிமிடங்களில் நிதியமைச்சர் இந்திய நாடாளுமன்ற அவையில் தன் பட்ஜெட் உரையைத் தொடங்குவார்
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மேல் வாசித்தார். இந்த முறை அப்படி ஒரு நீண்ட நெடிய உரையை ஆற்றாமல் ரத்தின சுருக்கமாக பேசி முடிப்பாரா நிதியமைச்சர்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து தன் உரையை தொடங்கினார்.
இந்திய பொருளாதாரம் சரியான பாதையிலும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி காணலாம் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
நிதியமைச்சர் தன் பட்ஜெட் உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சியினர் பாரத் ஜோடோ என முழக்கமிட்டு சற்றே சலசலப்பை ஏற்படுத்தினர்
அந்தியோதயா திட்டத்தின் கீழ் இணைந்திருக்கும் பயனர்களுக்கு டிசம்பர் 2023 வரை இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும். இதற்கு செலவாகும் 2 லட்சம் கோடி ரூபாயை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளும்.
இந்த பட்ஜெட் இந்திய குடிமக்களுக்கு குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது, வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் உத்வேகம் அளிப்பது, மேக்ரோ பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது ஆகிய 3 முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் வாழும் குடிமக்களின் சராசரி தனிநபர் வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்து 1.97 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. அதேபோல உலகின் 10ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, இன்று உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து இருக்கிறது. பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவை ஒரு நம்பகமான இடமாக பார்க்கின்றன.
இந்திய பொருளாதாரம் அமைப்புசாரா பொருளாதாரத்தில் இருந்து அமைப்பு சார்ந்த பொருளாதாரமாக மாறிக்கொண்டிருப்பதை இ பி எஃப் ஓ உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சுட்டிக்காட்டுகிறது
கடந்த 10 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் & டீசல் எரிபொருட்களின் விலை நிலையாக வைத்திருக்கிறோம். கடந்த 2022 நவம்பர் மாதத்தில் இருந்து 3 முறை (ATF) ஏர் டர்பைன் ஃப்யூயலின் விலை குறைக்கப்பட்ட பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சுமார் 4% விலை ஏற்றப்பட்டது
இந்த பட்ஜெட்டில் 7 விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
கடைக்கோடியில் இருப்பவரையும் சென்றடைவது
உட்கட்டமைப்பு மற்றும் முதலீடு
திறனை வெளிக்கொணர்தல்
பசுமை வளர்ச்சி
இளைஞர் வலிமை
நிதித்துறை
கிராமப்புறங்களில் விவசாயத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க agriculture accelerator fund என்கிற பெயரில் ஒரு தனி நிதி தொகுப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு புதுமையான முறையில் தீர்வுகள் கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும்.
PM Vishwa Karma Kaushal Samman என்கிற பெயரில் பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு உதவ, புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இது அவர்களுடைய திறனும் பொருட்களும் நிறைய பேருக்கு சென்று சேர உதவும்.
முதலீட்டு செலவீனங்களை (Capital Expenditure) 33 சதவீதம் வரை அதிகரிக்க அதாவது 10 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரிக்க முன்மொழிந்திருக்கிறார் நிதியமைச்சர். இது இந்தியாவின் ஜிடிபியில் 3.3 சதவீதம்
தேசிய டிஜிட்டல் நூலகத்தை அமைக்க இந்திய அரசு முன்மொழிந்திருக்கிறது. இதனால் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை குழந்தைகள் மற்றும் பதின்பருவ பிள்ளைகள் சரி செய்து கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.
2,516 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 63,000 முதன்மை விவசாய கடன் சொசைட்டிகளை கணினி மயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
740 பள்ளிகளில் படிக்கும் சுமார் 3.5 லட்சம் மலைவாழ் இன மாணவ மாணவிகள் தங்கி படிப்பதற்கான Eklavaya Model Residential Schools என்று அழைக்கப்படும் உண்டு உறைவிட பள்ளிக்கு, அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய ஒன்றிய அரசு சுமார் 38,000 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது.
பான் கார்டு மட்டுமே, டிஜிட்டல் அமைப்புகளில், அனைத்து வணிகம் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பொது அடையாளமாகப் பயன்படுத்தப்படும்
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு
ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு - ₹2,40,000 கோடி
தோட்டக்கலை துறைக்கு 2,200 கோடி நிதி ஒதுக்கீடு
விவசாய கடன் இலக்கு ₹20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்
கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துக்கு முன்னுரிமை அளித்து, விவசாய கடன் இலக்கு ₹20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
தேசிய ஹைட்ரஜன் திட்டத்திற்கு 19,700 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார் நிதி அமைச்சர். 2030 ஆம் ஆண்டுக்குள் 5 மெட்ரிக் மில்லியன் டன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது இலக்காக வைத்திருக்கிறார்கள்.
Pradhan Mantri Kaushal Vikas Yojana 4.0 திட்டத்தை இந்திய அரசு தொடங்கும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படும் திறனோடு இந்திய இளைஞர்கள் மேம்படுத்தப்பட, வெளிநாடுகளில் வரும் வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் பெற, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் நிறுவப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் 50 சுற்றுலாத்தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா பேக்கேஜ்களாக மேம்படுத்தப்படும்.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதுப்பிக்கப்பட்ட கடன் உத்திரவாத திட்டங்கள் அமலுக்கு வரும். இத்திட்டத்தின் கீழ் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இதனால் எம் எஸ் எம் இ தரப்பினருக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள், சுமார் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப போதுமான உதவிகள் வழங்கப்படும். இயற்கை விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில், இந்தியா முழுக்க சுமார் 10,000 மையங்கள் உருவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்
2023 - 24 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) 5.9 % ஆக இருக்கும் என நிதி அமைச்சர் நிர்ணயித்திருக்கிறார்.
இந்தியாவில் National Financial Information Registry என்கிற பெயரில் நிதி மற்றும் அது சார்ந்த விவரங்களை சேகரித்து வைக்கும் அமைப்பு உருவாக்கப்படும்.
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்
இந்தியாவில் புதுமையான கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் போன்றவைகளை முழுமையாக வெளிக்கொணர, தேசிய அளவிலான தரவு நிர்வாகக் கொள்கை (National Data Governance Policy) கொண்டுவரப்படும். இதன் மூலம் ஒருவரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத தரவுகளை, மற்றவர்கள் பயன்படுத்த முடியும்.
பட்ஜெட்டில் சிகரெட்டுகள் மீதான சுங்கவரி அதிகரிப்பு; விலை அதிகரிக்க வாய்ப்பு
இந்தியாவில் 5G அலைக்கற்றை சேவையைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் பொறியியல் நிறுவனங்களில் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்
சிகரெட்கள் மீது 16% பேரிடர் செஸ் கூடுதலாக விதிக்கப்பட உள்ளது. இறால்களுக்கான உணவு மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருக்கிறது. இது இறால் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறது இந்திய அரசு.
தங்கக் கட்டிகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்கள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சமையலறையில் பயன்படுத்தப்படும் மின்சார சிம்னி இயந்திரங்களின் மீதான சுங்கவரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் மீதான சுங்கவரி தொடர்பான சலுகைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. வெள்ளி மீதான சுங்க வரியை தங்கம் & பிளாட்டினத்துக்கு இணையாக அதிகரிக்க அரசு முன்மொழிந்திருக்கிறது.
ஒருவர் வருமான வரிப் படிவத்தை சமர்ப்பிக்கிறார் என்றால், தன்னிச்சையாகவே புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் தான் படிவங்கள் இருக்கும். ஆனால் வருமான வரிப் படிவத்தை சமர்ப்பிப்பவர் விருப்பப்பட்டால் பழைய வருமான வரி திட்டத்தின் கீழ் ITR நிரப்பி சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
எம் எஸ் எம் இ தொழில் முனைவோர்கள், பெரு நிறுவனங்கள், ட்ரஸ்ட்டுகள் பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய டிஜி லாக்கர் நிறுவனம் உருவாக்கப்படும். இணைய வழியில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள், நெறிமுறையாளர்கள், வங்கிகள், மற்ற வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்களோடு தேவையான போது பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள உதவும்.
புதிய வருமான வரி திட்டத்தின் (New Income tax Regime) கீழ் 5 லட்சம் ரூபாயாக இருக்கும் வருமான வரிக்கழிவு வரம்பு (Income Rebate Limit) 7 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
கீழ்காணும் விவரங்கள் அனைத்தும் புதிய வருமான வரித் திட்டத்துக்கு மட்டுமே பொருந்தும்
0-3 lakh- nil
3-6 lakh -5%
6-9 lakh - 10%
9-12 lakh-15%
12-15 lakh -20%
Above 15 lakh - 30%.
இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் குறித்த உடனடி அப்டேட்களுக்கு இந்த Live Blog உடன் இணைந்திருங்கள்!
This website uses cookies to ensure you get the best experience on our website.Learn more