பில்கிஸ் பானு: குஜராத் கலவரத்தில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான கர்ப்பிணி - யார் இவர்?

பில்கிஸ் பானுவை அப்போது ஒரு ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் சந்திக்கிறார். அவர், பானுவை லிம்கேடா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
பில்கிஸ் பானு
பில்கிஸ் பானுவிகடன்

2002ஆம் ஆண்டு, பிப்ரவரி 28 அன்று குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டது. அதில் அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள் மற்றும பயணிகள் 59 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கலவரம் வெடித்தது. குறிப்பாக முஸ்லீம் மக்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

பில்கிஸ் பானுவுக்கு என்ன நடந்தது?

இந்தக் கலவர காலத்தில் டஹோத் மாவட்டத்தில் உள்ள ராதிக்பூர் கிராமத்தில் பில்கிஸ் பானு வசித்து வந்தார். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கர்ப்பிணி. சில நாட்களுக்கு முன்பு பக்ரீத் பண்டிகையின் போது அவரது கிராமத்தில் நடந்த சூறையாடல் மற்றும் கலவரத்திற்கு பயந்து பில்கிஸ் பானுவின் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறியது. அப்போது அந்தக் குடும்பத்தில் 15 பேர் இருந்தனர்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையின் படி, மார்ச் 3, 2002 அன்று அந்தக் குடும்பம் சப்பர்வாட் கிராமத்தை அடைந்தது. அப்போது அவர்களை அரிவாள்கள், வாள்கள் மற்றம் தடிகளை வைத்திருந்த 20 – 30 பேர் அடங்கிய கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியது. பில்கிஸ் பானு அவரது தாயார் மற்றும் மூன்று பெண்கள் அந்த கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப் பட்டனர். தாக்கியவர்களில் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கும் 11 குற்றவாளிகளும் அடக்கம். ராதிக்பூர் கிராமத்தைச் சார்ந்த 17 முஸ்லீம்கள் அடங்கிய அந்தக் குழுவில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். ஆறு பேர்களைக் காணவில்லை. பில்கிஸ், அவரது ஆண் குழந்தை மற்றும் ஒரு ஆண் மட்டும் உயிர் தப்பினர்.

தாக்குதலுக்குப் பிறகு பில்கிஸ் பானு குறைந்தது மூன்று மணி நேரம் சுயநினைவின்றி இருந்தார். நினைவு திரும்பிய பிறகு அவர் ஒரு ஆதிவாசிப் பெண்ணிடம் துணிகளைப் பெற்று உடுத்திக் கொண்டார். பில்கிஸ் பானுவை அப்போது ஒரு ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் சந்திக்கிறார். அவர், பானுவை லிம்கேடா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

புகாரை திரித்து எழுதிய காவலர்

அங்கே அவர் தலைமைக் காவலர் சோமாபாய் கோரியிடம் தனது குடும்பம் கொடூரமாகத் தாக்கப்பட்டதை ஒரு புகாராக பதிவு செய்தார். சி.பி.ஐயின் கூற்றுப்படி அந்த தலைமைக் காவலர் உண்மைகளை மறைத்து, புகாரை திரித்து, தொடர்பே இல்லாமல் அந்த புகாரை எழுதினார்.

அதன்பிறகு பில்கிஸ் பானு கோத்ரா நிவாரண முகாமிற்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகே மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உச்சநீதிமன்றமும் எடுத்துக் கொண்டது. பின்னர் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்குமாறு சி.பி.ஐக்கு உத்திரவிட்டது.

பில்கிஸ் பானு வழக்கில் சி.பி.ஐ கண்டுபிடித்தது என்ன?

பில்கிஸ் பானு குடும்பத்தை தாக்கிய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வண்ணமே பிரதேப் பரிசோதனை நடந்திருப்பதாக சி.பி.ஐ. முடிவு செய்தது. மேலும் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து உடல்களை தோண்டி எடுத்த சி.பி.ஐ. புலனாய்வாளர்கள், ஏழு உடல்களில் மண்டை ஓடே இல்லை என தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சடலங்களின் தலை துண்டிக்கப்பட்டதால் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என சி.பி.ஐ. தெரிவித்தது.

வழக்கு விசாரணை எப்படி நடந்தது?

பில்கிஸ் பானுவுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து வழக்கு விசாரணை குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு மாற்றப்பட்டது. மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 6 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு அரசு மருத்துவர் உட்பட 19 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பில்கிஸ் பானு
அம்பேத்கரின் பெயர் வைத்ததால் கலவரம் - அமைச்சர் வீட்டில் தீ வைத்ததால் பரபரப்பு

ஜனவரி 2008 இல் சிறப்பு நீதிமன்றம், கர்ப்பிணிப் பெண்ணை வன்புணர்வு செய்ய சதி செய்தது, கொலை செய்தது, சட்டவிரோதமாக கூடியது மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் குற்றமிழைத்ததாக 11 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் விதமாக பில்கிஸ் பானுவின் புகாரை திரித்து பதிவு செய்ததற்காக தலைமைக் காவலர் தண்டிக்கப்பட்டார். போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி ஏழு பேரை நீதிமன்றம் விடுவித்தது. விசாரணையின் போது ஒருவர் உயிரிழந்தார்.

ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய் மற்றும் நரேஷ்குமார் மோர்தியா (இவர் விசாரணையின் போது இறந்து போனார்) ஆகியோர் பில்கிஸ் பானுவை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், ஷைலேஷ் பட் என்பவர் பில்கிஸ் பானுவின் மகளான மூன்று வயது சலேஹாவை தரையில் அடித்துக் கொடூரமாக கொன்றதாகவும் நீதிமன்றம் கூறியது.

ராதேஷ்யாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் வொஹானியா, பசுபாய் வோஹானியா, ராஜுபாய் சோனி, நித்தேஷ் பட், ரமேஷ் சந்தனா மற்றும் தலைமைக் காவலர் சோமாபாய் கோரி ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

கோரி என்பவரைத் தவிர மற்றவர்கள் இந்தக் குற்றத்தில் பார்வையாளர்களாக இருந்த போதிலும், இவர்கள் வன்புணர்வு, மற்றும் கொலைக்கு தண்டனை பெற்றனர். ஏனெனில் இவர்கள் சட்டவிரோதமாகக் கூடி கலவரம் செய்ததால் குற்றத்திற்கு பொறுப்பாகின்றனர் என்று நீதிமன்றம் கூறியது. குற்றவாளிகள் 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

அதன்பிறகு என்ன நடந்தது?

மே 2017 இல் மும்பை உயர்நீதிமன்றம் கும்பல் வன்புணர்வு வழக்கில் 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும் காவலர் மற்றும் மருத்துவர் உட்பட ஏழு பேரின் விடுதலையை ரத்து செய்தது.

குஜராத் அரசு வழங்கிய 5 இலட்ச ரூபாய் இழப்பீட்டை ஏற்க மறுத்த பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் 2019இல் உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானுவிற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு குஜராத் அரசிற்கு உத்திரவிட்டது.

குற்றவாளிகள் 11 பேரும் 2008 முதல் சிறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் தண்டனையை நீக்குவதற்கான மன்னிப்பு விண்ணப்பத்தை ஏற்ற குஜராத் அரசு அது குறித்து விசாரிப்பதற்கு குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் 11 குற்றவாளிகளும் கடந்த ஆகஸ்டு 15 அன்று கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

உள்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ் குமார் கூறுகையில் குற்றவாளிகள் 14 ஆண்டு சிறைவாசம் முடித்து விட்டதால் அவர்களின் வயது, குற்றத்தின் தன்மை, சிறையில் அவர்களது நடத்தை போன்ற பல காரணங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களது மன்னிப்பு விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக கூறினார்.

சிறையில் இருந்து விடுதலையான குற்றவாளிகளில் ஒன்பது பேர் தமது சிங்வாடா கிராமத்திற்கு திரும்பிய போது கிராம மக்கள் மாலை போட்டு, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

இப்படியாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணை வன்புணர்வு செய்து அவரது குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுதலை பெற்றிருப்பதோடு அவர்களது ஊரில் வரவேற்பும் பெற்றிருக்கின்றனர். இதெல்லாம் இந்தியாவைத் தவிர வேறு நாட்டில் நடைபெற வாயப்பிருக்கிறதா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பில்கிஸ் பானு
டெல்லி கலவரம் : இரு சமூகங்கள் இடையே வன்முறை - என்ன நடந்தது? | விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com