அமெரிக்காவின் மிகப்பெரிய (உலகின் மிகப்பெரிய என்று கூட சொல்லலாம்) நிதி சேவை நிறுவனங்களில் ஒன்றின் நிறுவனரான ஜார்ஜ் சோரஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் பேசியுள்ளார்.
அது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறது. யார் இந்த ஜார்ஜ் சோரஸ்? அவர் என்ன பேசினார்? அதற்கு இந்தியா தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பதில் என்ன?
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ஜார்ஜ் சோரஸ், உக்ரைன் ரஷ்யா போர், அமெரிக்காவில் நிலவும் ஒரு வித சமூகப் பதற்றம், துருக்கி நிலநடுக்கம், சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி, காலநிலை மாற்றம்… என பலவற்றைக் குறித்துப் பேசினார். அதில் இந்தியா குறித்தும், நரேந்திர மோடி குறித்தும் போகிற போக்கில் சில நிமிடங்கள் பேசியது, தற்போது இந்தியாவில், குறிப்பாக இந்திய ஒன்றிய அரசு, பாஜக கட்சி, பாஜக & மோடி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இனி அவர் இந்தியா குறித்து பேசியதின் சுருக்கத்தைப் பார்க்கலாம்
இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் அதன் தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஜனநாயகவாதி அல்ல. இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்டியது அவருடைய அரசியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். நரேந்திர மோடி தொடர்ந்து திறந்தவெளி சமூகத்தோடும், மூடிய சமூகத்தோடும் உறவு வைத்திருக்கிறார்.
இந்தியா குவாட் (Quad) அமைப்பில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உடன் உறுப்பினராக இருக்கிறது. அதே நேரம், ரஷ்யா உடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, விலை மலிவாக கச்சா எண்ணெய்யை வாங்கி நிறைய பணம் சம்பாதிக்கிறது.
நரேந்திர மோடி & கெளதம் அதானிக்கு இடையில் நெருங்கிய உறவு இருக்கிறது. அவர்கள் இருவருடைய வாழ்கை பிரிக்க முடியாதவை. ஒருபக்கம் அதானி பங்குச் சந்தையில் முறைகேடுகளைச் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன, மறுபக்கம் நரேந்திர மோடி அது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை கொடுத்தே ஆக வேண்டும். இந்த விஷயங்கள் எல்லாம், இந்திய ஒன்றிய அரசின் மீது நரேந்திர மோடிக்கு இருக்கும் வலுவான பிடியைத் தளர்த்தும்.
அவசியத் தேவையாக இருக்கும் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும். நான் சொல்வது உங்களுக்கு சிறுபிள்ளைத்தனமாகக் கூட இருக்கலாம், ஆனால் இந்தியாவில் ஒரு ஜனநாயக ரீதியிலான மறுமலர்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன் என பல காரசார, காத்திரமான கருத்துக்களை முன்வைத்திருந்தார் ஜார்ஜ் சோரஸ்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட, நரேந்திர மோடியையும், அவருடைய சி ஏ ஏ சட்டம் & காஷ்மீர் விவகாரத்தை கடுமையாக விமர்சித்தார் ஜார்ஜ் சோரஸ். ஒரு நல்ல திறந்தவெளி சமூகத்திற்கு (Open Society) இவை மிகப்பெரிய பின்னடைவு என்றும் கூறினார்.
மேலும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, ஓர் இந்துத்வ தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணி ஆகியோர் பதிலடி கொடுத்திருந்தனர்.
வயதான, தனக்கென ஒரு தனிப்பட்ட கருத்து கொண்ட ஜார்ஜ் சோரஸ் என்கிற பில்லியனரின் பார்வை, ஒட்டுமொத்த உலக இயக்கத்தையும் தீர்மானிக்க வேண்டுமென்று கருதுகிறார். இது போன்ற ஆட்கள், ஒரு விஷயம் எப்படிப் பார்க்கப் பட வேண்டும் என்பதற்கென தனியே முதலீடு செய்வர் என ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
György Schwartz என்கிற பெயரில், 1930ஆம் ஆண்டு ஹங்கேரி சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த புதபெஸ்டில் பிறந்தார் ஜார்ஜ் சோரஸ். அது ஹிட்லர் உயிரோடு இருந்த காலம். யூதர்களை வெறிகொண்டு வேட்டையாடி வந்த காலம் என்பதால் ஜார்ஜ் சோரஸ் தன் யூத மத அடையாளங்கள் & பின்புலங்களை எல்லாம் மறைத்துக் கொண்டு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
1947ஆம் ஆண்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தவர், தன் கல்விச் செலவுக்கு ரயில் நிலையத்தில் போர்டராகவும், ஓர் இரவு கிளப்பில் உதவியாளராகவும் பணியாற்றினார். மீண்டும் 1956ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றவர், ஐரோப்பிய பங்குச் சந்தைகளைக் குறித்து ஆராயும் பகுப்பாய்வாளராக (Analyst) நிதி உலகில் தன் வாழ்கையைத் தொடங்கினார்.
இப்படியாக பங்குச் சந்தை குறித்த தன் புரிதலை அதிகரித்துக் கொண்ட ஜார்ஜ் சோரஸ், அடுத்தடுத்து பல நிதி நிறுவனங்களில் வேலை செய்து தன்னை பட்டை தீட்டிக் கொண்டார்.
1963ஆம் ஆண்டு அர்னால்ட் & எஸ் பிளெய்ச்ரோடர் (Arnhold and S. Bleichroeder) நிறுவனத்தில் இணைந்தார். 1969ஆம் ஆண்டு டபுள் ஈகில் ஹெட்ஜ் ஃபண்டைத் தொடங்கினார்.
1970ஆம் ஆண்டு தன் சொந்தப் பணம் + முதலீட்டாளர்களின் பணத்தை எல்லாம் சேர்த்து சோரஸ் ஃப்ண்ட் மேனேஜ்மெண்ட் என்கிற பெயரில் தனி நிறுவனத்தைத் தொடங்கினார். இதில் உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸும் அடக்கம்.
சச்சின் டெண்டுல்கர் என்றால் எப்படி கிளாசிப் பவுண்டரிகளுக்கும், ஸ்கொயர் கட், ஸ்கொயர் டிரைவ் ஷாட்களுக்கு பெயர் எடுத்தவரோ, அப்படி ஜார்ஜ் சோரஸ் கரன்சி வர்த்தகத்தில் பெரிய அளவில் பெயர், புகழ், சொத்து, பத்து… என எல்லாவற்றையும் சம்பாதித்தவர்.
அதற்கு ஓர் ஆகச் சிறந்த உதாரணம், இவர் 1992ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் கரன்சிக்கு எதிராக ஷார்ட் பொசிஷன் (Short Position) எடுத்ததைக் கூறலாம்.
பொதுவாக பங்குச் சந்தையில் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதையே பலரும் குறிப்பிடுவர். இதை லாங் பொசிஷன் என்று கூறுவர். உதாரணத்திற்கு ஒரு பங்கின் விலை 100 ரூபாயாக இருக்கிறது அதை ஒரு முதலீட்டாளர் வாங்கி சில பல மாதங்களுக்கு பிறகு 120 ரூபாய்க்கு விற்கிறார் என்றால் அவருடைய லாபம் 20 ரூபாய். இது லாங் பொசிஷன். சுருக்கமாக முதலில் பங்குகளை வாங்கிவிட்டு, தாங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பும் விலைக்கு பிற்காலத்தில் விற்பது லாங் பொசிஷன்.
ஒரு நபர் இன்று பங்குச் சந்தையில் 150 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரும் பங்குகளைக் கையில் இல்லாமலேயே விற்று விடுகிறார். பிறகு, கையில் இல்லாத பங்கை வேறு விற்கிறார் என்றால் ஏதோ ஒரு காலகட்டத்தில் யாரிடமிருந்தாவது ஏதோ ஒரு விலைக்கு அந்த நிறுவனப் பங்குகளை வாங்கியே ஆக வேண்டும். ஒரு சில மாதங்களுக்கு பிறகு அவர் விற்ற பங்கின் விலை 100 ரூபாயாக இருக்கிறது, அதை அவர் வாங்கிக் கொள்கிறார் என வைத்துக் கொண்டால், இவருடைய லாபம் 50 ரூபாய். இதை ஷார்ட் செல்லிங் என்பர். சுருக்கமாக கையில் பங்குகளே இல்லாமல் முதலில் பங்குகளை விற்றுவிட்டு, காலப்போக்கில் பங்குகளை வாங்குவது ஷார்ட் செல்லிங். இதில் பங்கு விலை எவ்வளவு வீழ்ச்சி காண்கிறதோ, அவ்வளவு லாபம் பார்க்கலாம்.
அப்படி பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு எதிராக ஷார்ட் பொசிஷன் எடுத்து, கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் லாபம் பார்த்த புத்திசாலி. இன்று உலகில் இயங்கும் பல ஹெட்ஜ் ஃபண்ட்கள் மத்தியில் ஷார்ட் செல்லிங்கை பிரபலப்படுத்திய முன்னோடிகளில் ஜார்ஜ் சோரஸும் ஒருவர் என்றால் அது மிகையல்ல.
ஒரு கட்டத்தில், உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாக சோரஸ் ஃப்ண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் உருவெடுத்து விட்டது. பல பில்லியன் டாலர்களுக்கு அதிபதி ஆகிவிட்டார் ஜார்ஜ் சோரஸ்.
தன்னுடைய சொத்துபத்துகளில் சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான சொத்துக்களை ‘ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்ஸ்’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பெயரில் வைத்திருக்கிறார். இந்த அமைப்பு கிட்டத்தட்ட 100 நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் கூட 1999ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஓபன் சொசைட்டி மூலம் சுமார் 90 மில்லியன் அமெரிக்க டாலரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து அஸ்படா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் மிகப்பெரிய தொழிபதிபர்களில் ஒருவர். அக்கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளர். பாரக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஜோ பைடன் என பல வேட்பாளர்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
பணக்காரராக இருந்தும், அமெரிக்காவில் நிலவும் வருமான சமமற்றதன்மைக்கு (Income Inequality) எதிராகக் குரல் கொடுத்து வருபவர். இதைச் சரி செய்ய வேண்டும், அதற்கு ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று கோரி வருபவர்.
தான் பிறந்த ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பனையும், அவருடைய தேசியவாத அரசையும் கூட ஜார்ஜ் சோரஸ் விமர்சிக்கத் தவறியதில்லை. ஹங்கேரியில் வாழும் பல குழந்தைகளின் உணவு மற்றும் மனித மேம்பாட்டுக்கு மட்டும் பல மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கி வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust