இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் தங்கள் தரப்பில் நிறைவேற்ற வேண்டிய, விவாதிக்க வேண்டிய விஷயங்களைத் இரு அவைகளிலும் முன்வைத்து, விவாதித்து வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி மக்களவையில் கூடுதல் மானியம் வழங்குவது (supplementary demand of grants) தொடர்பாக விவாதம் எழுந்த போது, மேற்கு வங்கத்தின் மக்களவை உறுப்பினரான மஹுவா மொய்த்ரா, பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பாஜக அரசின் தவறான கொள்கை முடிவுகள், சொதப்பலான திட்டங்கள், பாரபட்சமாக முன்னுரிமை கொடுக்கப்படுவதையும் குறிப்பிட்டு விமர்சித்தார்.
இனி மஹுவா மொய்த்ராவின் பேச்சின் சுருக்கம்.
எங்கும் சரிவு... எதிலும் சரிவு விளக்கும் தரவுகள்
ஒவ்வொரு பிப்ரவரி மாதமும், இந்த நாடு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என நம்ப வைக்கப்படுகிறது. இந்தியா தான் உலகிலேயே வேகமாக வளரக்கூடிய, பிரமாதமான செயல்திறனோடு இயங்கும் பொருளாதாரம், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வேலை கிடைக்கிறது, கேஸ் சிலிண்டர் கிடைக்கிறது, மின்சாரம், பக்கா வீடுகள் எல்லாம் கிடைப்பதாக 8 - 10 மாதங்களுக்குச் சொல்கிறார்கள். இப்போது உண்மை வெளி வந்திருக்கிறது.
இப்போது 2022 - 23 நிதி ஆண்டில் டிசம்பர் மாதத்தில் இருக்கிறோம். இப்போது வந்து அரசுக்கு மேலும் 3.26 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவை என்கிறார்கள். அதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த பட்ஜெட் மதிப்பீட்டு (Budget Estimate) தொகையை விட கூடுதலாக இந்த நிதி தேவை என்கிறார்கள்.
அரசும், ஆளும் கட்சியும் பப்பு என்கிற சொல்லை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். பப்பு என்கிற சொல்லை செயல்திறன் இல்லாமல் இருப்பதை குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் யார் பப்பு என தரவுகள் தெளிவாகச் சொல்கிறது.
என் எஸ் ஓ தரவுகள் சமீபத்தில் வெளியானது. இந்திய தொழிற்துறை உற்பத்தி 4% சரிந்திருக்கிறது. இது கடந்த 26 மாதங்களில் இல்லாத சரிவு.
இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் உற்பத்தித் துறை 5.6% சரிந்திருக்கிறது. இந்திய தொழில்துறை உற்பத்தியில் உள்ள பல குறியீடுகள் வீழ்ச்சி கண்டிருக்கின்றன.
இந்தியாவின் அந்நிய செலாவணி கடந்த ஓராண்டு காலத்துக்குள் 72 பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்திருக்கிறது. வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகளில் சுமார் 50% முதலீடுகள் இந்தியாவுக்கு வருவதாக நிதி அமைச்சர் சமீபத்தில் கூறினார். பாராட்டுக்குரியது தான்.
ஆனால், இந்த 2022ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் 1.83 லட்சம் பேர் தங்களின் இந்திய குடியுரிமையை துறந்திருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சமீபத்தில் இதே அவையில் குறிப்பிட்டது.
இது கடந்த எந்த ஒரு குறிப்பிட்ட ஆண்டிலும் இல்லாத அளவுக்கு பெரிய எண்ணிக்கை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து (2014ஆம் ஆண்டில் இருந்து) 12.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.
பெரும் பணக்காரர்கள், கிட்டத்தட்ட 1 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவழித்து போர்ச்சுகல், கிரீஸ் போன்ற நாடுகளில் குடியுரிமையைப் பெற செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். இது தான் ஒரு நல்ல பொருளாதாரச் சூழலா? இது தான் ஆரோக்கியமான வரிச் சூழலா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?
இந்தியாவில் எதிர்கட்சியாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் இருக்கின்றனர். அமலாக்கத் துறையின் வேலை இந்திய மக்களை தொந்தரவு செய்வது தானா அல்லது நிதி சார் குற்றங்களைக் கண்டுபிடித்து, விசாரித்து தண்டனை வாங்கிக் கொடுப்பதா?
கடந்த 17 ஆண்டுகளில், பி எம் எல் ஏ (பணச் சலவை தடைச் சட்டம்) கீழ் 5,422 வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்தது அமலாக்கத் துறை. ஆனால் 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டனர். அதே போல கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அமலாக்கத் துறை 1,600க்கும் மேற்பட்ட விசாரணைகளைத் மேற்கொண்டது, 1,800க்கும் மேற்பட்ட ரெய்டுகளை நடத்தியது. ஆனால் 10 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த அரசோ, அமலாகக்த் துறைக்கு கூடுதலாக 2,900 கோடி ரூபாய் நிதி தேவை என supplementary demand of grants-ல் குறிப்பிட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட அமைப்புக்கு வரி செலுத்தும் இந்தியர்களின் பணத்தை செலவழிப்பதா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?
பாஜகவினர் பணமதிப்பிழப்பு குறித்து தொடர்ந்து பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் விஷயங்களுக்கு எந்த வித தரவுகளும் இல்லை. நீங்கள் ரொக்கப் பணம் இல்லாத டிஜிட்டல் பொருளாதாரத்தின் இலக்குகளையோ, போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து அகற்றும் இலக்குகளையோ எட்டிப் பிடிக்கவில்லை.
பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், இந்திய பொருளாதாரத்தில் புழங்கும் ரொக்கப் பணத்தின் அளவு கடந்த நவம்பர் 2016-ல் சுமார் 18 லட்சம் கோடியாக இருந்தது, இந்த நவம்பர் 2022 நிலவரப்படி 32 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இப்போதும் ரொக்கப் பணமே இந்திய பொருளாதாரத்தின் ராஜாவாக இருக்கிறது. உங்கள் டிமானிட்டைசேஷன் எதையும் சாதிக்கவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?
நம் உடல் நலத்தையும் மண் வளத்தையும் பாதிக்கும் யூரியா உரத்துக்கு மட்டும் கணிசமான அளவுக்கு கூடுதல் நிதி கோரப்பட்டிருக்கிறது. அதே போல பெரு நிறுவனங்கள் & பெரிய தொழில்துறைகளுக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதல் நிதியும், இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு 233 கோடி ரூபாயும் கோரபட்டிருக்கிறது.
சமீபத்தில் மூன்று இடங்களில் நடந்த முக்கிய தேர்தல்களில், குஜராத் தவிர இரு இடங்களில் நீங்கள் தோல்வி கண்டீர்கள். உங்கள் கட்சித் தலைவரின் சொந்த மாநிலத்திலேயே நீங்கள் தோற்றுப் போனீர்கள். இப்போது சொல்லுங்கள் யார் பப்பு? என பாரதிய ஜனதா கட்சியைத் துளைத்து எடுத்தார்.
கடைசியாக தன் உரையை நிறைவு செய்யும் போது "யார் நெருப்பைப் பற்ற வைத்தார்கள் என்பது கேள்வி அல்ல... யார் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் கையில் தீப்பெட்டியைக் கொடுத்தார்கள் என்பதே கேள்வி" என நிறைவு செய்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust