தேசாந்திரியின் தடங்கள் : சுவீடன்-நோர்வே வடதுருவ எல்லையில் நெடும்பயணம்! | பகுதி 4

இந்த நேரத்தில் E4 சாலையைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். E4சாலை ஐரோப்பிய நெடுஞ்சாலைகளின் பிரிவாகும். பல ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் தொடர்சாலைகளுக்கு ஐரோப்பிய சாலை எண்களை வழங்கியிருப்பார்கள்.
தேசாந்திரியின் தடங்கள்

தேசாந்திரியின் தடங்கள்

NewsSense

கோத்தென்பர்க் நகரில் இருந்து உப்சலா வரையிலான 453 கி.மீ பயணம் பகலில் அமைந்திருந்ததால், ஆங்காங்கே நிகழ்ந்த வெண்பனிப்பொழிவின் தருணங்களை தவிர்த்து பெரிய இடர்பாடுகளற்ற மகிழ்வான பயணங்களாகவே அமைந்திருந்தது.

முன்பே எழுதியிருந்தது போல, நானும், கீர்த்தி மற்றும் தணிகை மூவரும் மாறி மாறி வாகனம் ஓட்டிக்கொண்டு உப்சலா வரை வந்துவிட்டோம். இனிமேல், லூலியா வரை கடும் இருட்டு, மைனஸ் 10லிருந்து மைனஸ் 20 வரையிலான கடும் குளிர் இரவு நேரம் எனினும் E4 சாலை, சுவீடன்-ஃபின்லாந்து இடைப்பட்ட போத்தினியா வளைகுடாவின் (GULF OF BOTHNIA) சுவீடன் கரையோரம் நீண்டப் பயணம், 836 கி.மீ. அதுவும் குறைந்தது 9.30 மணி நேரம், நான் ஒருவன் மட்டுமே வாகனம் ஓட்டப்போகிறேன்.

Pexels

பாடல்களும் பயணங்களும்

மகிழ்ந்துப் பயணங்களில் பாடல்களை கேட்பது எல்லோருக்கும் பிடித்தமானது தானே! என் பாடல் பட்டியலில் எப்பொழுதும் 1950களில் இருந்து நடப்பாண்டு வரையிலான 1500 பாடல்கள் இருக்கும்.

வரிசைகளற்ற கலவையான பாடல்கள் ஒலிக்கப்படும்பொழுது, பெருங்கவி கண்ணதாசனின் தாழையாம் பூ முடிச்சு பாடலில் இருந்து இளங்கவி முத்துக்குமாரின் ஆனந்த யாழை மீட்டுவிட்டு, கவிப்பேரரசுவின் வைரமுத்துவின் 2020 பாடல்களையும் 1980 பாடல்களையும் கேட்பதில் ஒரு போதை. அதுவும் இசையரசர் இளையராஜாவின் 80களும் யுவன்சங்கர் ராஜாவின் 2000களின் இசைகளில் மூழ்கி முத்தெடுத்து, இமானின் கிராமத்து இசையில் நனைந்து தெளிந்து, 4 குத்துப்பாடல்களையும் திடீரென வரும் தெலுங்கு மலையாளப் பாடல்களையும் கேட்பது, மனதை இதமாக வைத்திருக்கும் எனக்கு!.

காலையில் இருந்து, எல்லோருக்கும் பொருத்தமான பாடல்களை மட்டும் கேட்க முடிந்தது.

இரவு 7 மணிக்கு மேலே, உப்சலாவில் இருந்து கிளம்ப வேண்டியதாக திட்டமிட்டிருந்தோம், ஆனால், வழியில் ஆங்காங்கே நிறுத்தி, வெகுநேரம் ஆகிவிட்டபடியால், கிட்டத்தட்ட 8.30 மணிக்கு மேல்தான் உப்சலாவில் இருந்து கிளம்பினோம்.

வழியில் மீண்டும் காவ்லே (GAVLE)வில் நிறுத்தி, அதே புளிச்சோறு, தக்காளிச்சோறு, தயிர்சோற்றினை கலந்தடித்துவிட்டு, குளம்பியினை குழப்பியடித்துவிட்டு, இரவெல்லாம் கண்விழித்து வாகனம் ஓட்ட, உடலாற்ற பெருக்கும் குளிர்பானங்களையும் அடுக்கிக்கொண்டு இனிதே பயணம் தொடங்கியது.

காலையில் இல்லாத சுதந்திரம், ஆம், எனக்கு பிடித்தப் பாடல்களை ரசிக்கலாம். நெடுநேர இரவுப் பயணங்களில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க நான் மட்டும் ஓட்டுவதே என வழக்கம். இம்முறை, ஜெய்ஸ்ரீ வாகனத்தில் முன் அமர்ந்துக்கொண்டு, ஊர்க்கதைகளையும் எங்கள் குடும்பக்கதைகளையும் பேசிக்கொண்டே வந்ததில், பயணம் சலிக்காமல் சென்றுக்கொண்டிருந்தது.

தேசாந்திரியின் தடங்கள்

தேசாந்திரியின் தடங்கள் : 1500 கி.மீ, 19 மணி நேரம் உலகின் வடமுனையில் ஒரு பயணம் - | பகுதி 3

NewsSense

காவ்லே முதல் லூலியா வரை:

ஊப்சலாவில் இருந்து காவ்லே சாலையினைப் பிடித்ததும், லூலியா செல்லும் E4 120 கி.மீ வேகத்திற்கான சாலையாக இருந்ததாலும், வாகனத்தில் பகுதித் தானியங்கி வசதி இருந்ததாலும், அதனை இயக்கிவிட்டு, இனி நெடுந்தூரம், ஆம், கிட்டத்தட்ட 500 கி.மீ தடையில்லா நேர் சாலை மட்டுமே என்பதால், காலை முடிக்கியில் இருந்து (accelerator) எடுத்துவிட்டு, ஒய்யாரமாக அமர்ந்துக்கொண்டு கதைப் பேசிக்கொண்டு வந்தேன். முன்னே ஏதேனும் வாகனத்திற்கு நெருக்கமாக நம் வாகனம் வந்துவிட்டால் கூட, தானாக, வேகத்தைக் குறைத்து, மீண்டும், எந்த வேகத்தில் வாகனம் அதுவரை ஓடிக்கொண்டிருந்ததோ, அதே வேகத்திற்கு வாகனம் வந்துவிடும் என்பதோடு இல்லாமல், இரு கோடுகளுக்கு இடையே தானாக, வளைவாக இருந்தாலுமே கூட, வாகனமே தன்னை இயக்கிக்கொள்ளும் என்பதால், இன்னும் கொஞ்சம் சுமையும் குறைந்திருந்தது.

ஆனால், எல்லா இடங்களிலும் 120 கி.மீ வேகச் சாலை இருக்காது, திடீரென்று 110 கி.மீ வேகச்சாலையும் சில இடங்களில் 100 அல்லது 90 என மாறும் இடங்களில், காலைப் பயன்படுத்தாமல் சக்கத்திருப்பி (steering) யில் பொருத்தப்பட்டுள்ள பொத்டானைப் பயன்படுத்தியே வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

அதேவேளை, தொடர்ந்து தடையில்லா வேகம், ஆபத்தினை வரவழைக்கும் என்பதால், ஆங்காங்கே 100 கி.மீ அல்லது 90 கி.மீ வேகச்சாலைகள் உள்நுழைத்து, அங்கே வேகக்கணிப்பு நிழற்படக்கருவியையும் பொருத்தி இருப்பார்கள், அங்கெல்லாம் கட்டாயமாக, மிகக்கவனமாக, நம் வேகத்தினை சரியான அளவீட்டில் குறைத்து ஓட்டியாக வேண்டும், இல்லையேல், கடும் தண்டனைப் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு, காவ்லே முதல் உமியா வரையிலான சாலையில் தொடர்ந்து , 500 கி.மீ நிறுத்தாமல் ஓட்டி வந்துவிட்டேன்.

உமியா முதல் பீட்டியா வழியாக லூலியா வரையிலான 266 கி.மீ சாலை ஆங்காங்கே சிறு கிராமங்களில் வெளிப்பகுதிகளைத் தொட்டுச் செல்வதாலும், சிறு சிறு ஊர்களில் மையங்களையும் தொட்டுச் செல்வதாலும், ஒரே சீரான வேகச்சாலை இல்லை.

தேசாந்திரியின் தடங்கள்

தேசாந்திரியின் தடங்கள் : பனிக்கட்டி படுக்கை – 24 மணி நேர இருட்டு – பதட்டமான பயணம்| பகுதி 2

NewsSense

E4 – சாலை

இந்த நேரத்தில் E4 சாலையைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். E4சாலை ஐரோப்பிய நெடுஞ்சாலைகளின் பிரிவாகும். பல ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் தொடர்சாலைகளுக்கு ஐரோப்பிய சாலை எண்களை வழங்கியிருப்பார்கள். ஐரோப்பியச் சாலையாக இடம்பெற, ஐரோப்பிய நாடுகளின் பொதுவான நடைமுறைகள், உட்கட்டமைப்புகள், சாலை வரைபாதை, கழிவிட வசதிகள் என எல்லாவும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல, கிறுஸ்துமஸ் முன்னிரவில், கடைகள் யாவும் மாலையே பூட்டப்பட்டிருக்கும் சூழலில், எரிபொருள் நிரப்பும் நிலையக் கடைகளுமே கூட இரவு 10 அல்லது 11 மணிக்கு பூட்டப்பட்டுவிடும் சூழலில் (தானியங்கியில் எரிபொருள் மட்டும் நிரப்பலாம்), வெவ்வேறு சாலைகளின் வழித்தடங்கள் கிருனா நோக்கிச் சென்றாலும், E4 ஐரோப்பிய நெடுஞ்சாலையினைத் தேர்ந்தெடுத்ததே, உட்கட்டமைபுகளின் வசதிக்காக மட்டுமில்லை, கழிவிட வசதிக்காகவும் தான்.

E4 சாலையின் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 1590 கி.மீ. சுவீடன்-டென்மார்க் எல்லையான ஹெல்சிங்க்போர்க் நகரத்தில் இருந்து சுவீடன் தலைநகரம் ஸ்டாக்கோம் வழியாக நாங்கள் பயணிக்கும் காவ்லே-சுண்ட்சுவால், உமியா, லூலியா வழியாக சுவீடன்-ஃபின்லாந்து நாட்டு எல்லையான டோர்னியோ வரையில் செல்லும் சாலை இது.

தேசாந்திரியின் தடங்கள்

தேசாந்திரியின் தடங்கள் : ஏன் சுவீடன், நார்வே சொர்க்கபுரியாக இருக்கிறது? | பகுதி 1

போத்தினியா வளைகுடாவின் சுவீடன் கரையினை முழுமையாகத் தொட்டுச்செல்லும் சாலை இது. 1992ஆம் ஆண்டு இதற்கு E4 எண் வழங்கப்பட்டது. சுவீடன் கரையின் ஹெல்சிங்க்போர்க் இருப்பது போல, டென்மார்க் நாட்டின் கரையில் ஹெல்சிகூர் உள்ளது. இரு நாட்டையும் மகிழ்ந்துவிலோ பேருந்துவிலோ பயணிக்க, இரு நாட்டின் இவ்விரு ஊர்களின் கரையையும் கப்பல்கள் வழி கடக்கலாம்.

ஹெல்சிங்கூரிலிருந்து டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பன்னகன் வீற்றிருக்கும் சிறுதீவின் கரையில் இருந்து ஜெர்மனி நாட்டின் ரோசுடோக் நகரினை இணைக்க மீண்டும் கப்பலில் பயணிக்க வேண்டும், அங்கிருந்து, ஜெர்மனியின் தலைநகர் பெர்லின், டிரெஸ்டென், செக் குடியரடின் பிராக் வழியாக, ஆஸ்திரிய நாட்டின் சால்ஸ்பர்க் வழியாக தொடர்ந்து இத்தாலியின் வெனிசு நகரத்தினைத் தொட்டு இத்தாலியின் பிரிண்டிசி வழியாக கப்பல் போக்குவரத்தில் பயணம் தொடர்ந்து, கிரேக்க நாட்டின் இகுவோமெனிட்சா வழியாக கலமாட்டா ஊரினை தொடும் (டென்மார்க்-ஜெர்மனி-செக் குடியரசு, ஆஸ்திரியா-இத்தாலி-கிரேக்க) சாலைக்கு E55 என்ற எண் வழங்கிருந்தார்கள்.

இந்த E55 சாலையையும் E4 சாலையை இணைத்து ஒரு சாலை எண்ணாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு, அது நடைமுறைக்கு வராமல் இன்னும் இழுத்தடிக்கிறது.

ஒரே சாலை எண் பெற வேண்டுமென்றால், பல புதியப் பொருட்செலவினை ஏற்படுத்தும் என்பதாலும், சாலை கடக்கும் அனைத்து நாட்டு சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலும் தேவைப்படுவதால், நடைமுறைக்கு வராமல் இரு சாலைகளும் தத்தமது பழைய பெயர்களிலேயே தாங்கி வாழ்கிறது எனலாம்.

உமீயா முதல் லூலியா வரை:

உமீயா முதல் லூலியா வரையிலான சாலை புணரமைப்புப் பணிகள் பல இடகளில் நடந்துவந்ததால், 266 கி.மீ சாலையினைக் கடக்க கடும் நேரம் எடுத்துக்கொண்டது. அதோடு, பல இடங்களில் வேகக்கட்டுப்பாட்டு கண்காணிப்புக் கருவி இருந்ததாலும், எதிர்ப்பார்த்ததை விட இன்னும் நேரத்தினை பயணம் திருடிக்கொண்டது.

வடதுருவத்தின் கடும் குளிர், கடும் இருட்டுச் சூழலில், வெள்ளைப் பனிகளின் ஒளிர் தன்மை கைக்கொடுக்க, இனிய பாடல்களுடனும், உமீயாவிற்கு பிறகு, நண்பன் கீர்த்தியின் பேச்சுத் துணையுடன் தூக்கமில்லாமல் அதேவேளை சோர்வில்லாமல் லூலியா வரை வந்தாகிவிட்டது.

காலை 5 மணிக்கு லூலியா செல்வதாகத் திட்டமிட்டு, இறுதியில் 7:15 மணிக்கு வந்தடைந்தோம். நல்லவேளையாக லூலியாவின் நகர்மையத்தில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையம் சிற்றுண்டி உணவகத்தோடு திறந்திருந்தது. காலைக் கடன்களை முடித்து, சிறு இளைப்பாறுதல், தேநீர், சிற்றுண்டிக்குப் பிறகு மீண்டும் கிருணா பயணம் தொடங்கியது.

நானே வாகனம் இயக்கலாம் என்றிருந்த வேளையில், நண்பர் கீர்த்தி தட்டிப்பறித்து, என்னை பின் இருக்கைக்கு அனுப்பி தூங்கச் சொல்லிவிட்டான்.

கிருணா நோக்கிய காட்டுவழி:

லூலியா முதலான கிருனா வரையிலான 345 கி.மீ சாலை, ஒரு குறிப்பிட்டப் பகுதிகளுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஆள் அரவமில்லா காட்டுச் சாலைப் போல இருக்கும். வடதுருவத்தில், டிசம்பர் மாதம் கடும் இருட்டு மட்டுமே நிழவும், பகலே மிக தாமதமாக 10-11 மணிக்கு மேலே சிறு ஒளியோடு மட்டுமே வரும் சூழலில், தொடர், நெடும், நெருக்கமான மரங்களிலும் சாலை முழுவதும் படர்ந்திருந்த வெள்ளைப்பனியினால், உலகின் அழகிய சாலை இதுதான் என அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது.

விழித்து இருந்தவர்கள், அதன் அழகினை ரசித்து, உணர்வினைத் தாங்காமல், மகிழ்ச்சியைக் கத்திக் கூச்சலிட்டுக் கொண்டாடிக்கொண்டு வந்ததால், என் தூக்கம் முழுமையாக இல்லாமல், அதேவேளை கண்ணைத் திறக்கவும் முடியாமல், காதுகளில் ஒலி வழியே அழகினை மனக்காட்சியின் வழியாக ரசித்துக்கொண்டு வந்தேன்.

இடையிடையே, திடீரென்று குதித்து ஓடிய வடதுருவ மான்களினால் (ஆர்டிக் மான் – Reindeer) திகிலூட்டு செய்திகளும் காதுக்கு வர, எழுந்து அமர்ந்து நானும் கண்களின் வழியாக ரசிக்கத் தொடங்கிவிட்டேன்.

NewsSense

கிருனா பயணத்தின் மையநோக்கு!:

கிருனாவினை அடைந்ததும், பனிக்கட்டி தங்குமிடத்தினைப் பார்ப்பது, அடுத்து நேரம் இருப்பின், ஆர்டிக் மான்களின் வனப்பூங்காவைக் காண்பது, பிறகு கிருனாவின் நகர் மையத்தில் நாங்கள் பதிவு செய்திருந்த தங்குமிடத்தில் தூங்கி ஓய்வெடுத்துவிட்டு, இரவெல்லாம் மீண்டும் கண்விழித்து, வடதுருவ ஒளியினைத் தேடிப் பயணிப்பது. இதுவே திட்டம்.

காலை லூலியாவில் கிளம்பி, சாலையிம் கடும்போக்கினால், பயண நேர அதிகமாகியதால், மதியம் 1 மணிக்கு மேலேதான் கிருனாவின் பனிக்கட்டித் தங்குமிடம் வர நேர்ந்தது. ஆகவே, முதலில் பனிக்கட்டித் தங்குமிடத்தினை காண்பதே நோக்கம். முழுமையாக வெண்பனிக்கட்டியால் ஆன கட்டிடம், கதவு, மெத்தை, படுக்கை, நாற்காலி, அழகிய உட்கட்டமைப்பு, அறைகளின் சுவர்கள், அதில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள், தண்ணீர் குடிக்கும் குவளைகள் என எல்லாமுமே பனிக்கட்டி!

எப்படித்தான் கட்டினார்களோ!.

எஸ்கிமோக்களின் வாழ்விடம் இப்படித்தான் இருந்திருக்குமோ!

எப்படி உருகாமல் பார்த்துக்கொள்வார்கள்?

உலகின் பல்லாயிரப் பயணிகளை ஈர்க்க என்ன செய்துள்ளார்கள்? அடுத்தப் பகுதியில் பார்ப்போம் வாருங்கள்!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com