வரலாறு நெடுக மனிதர்கள் போர் தொடுத்து தங்கள் ஆளுகையை விரிவாக்கிக் கொண்டதற்குப் பல்லாயிரம் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. எப்போதுமே மனிதர்கள், தங்களிடம் இருக்கும் நிலப்பரப்பு போதும் என நிறைவோடு வாழ்ந்ததில்லை.
புதிய நிலப்பரப்பை ஆள விரும்பவில்லை என்றாலும், அதில் உள்ள இயற்கை வளங்களை அபகரிக்கும் பொருட்டாவது பெரிய நாடுகள், சிறிய நாடுகள் மீது போர் தொடுத்து வருகின்றன.
இன்று ஒட்டுமொத்த பூமியையும் மனிதன் தன் உள்ளங் கைக்குள் கொண்டு வந்துவிட்டான். அடுத்தகட்டமாக, விண்வெளியில் குடித்தனம் நடத்துவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறான். அது குறித்து எலான் மஸ்க் போன்ற உலக பணக்காரர்கள் தொடங்கி, விஞ்ஞானிகள் வரை ஆராய்ந்து வருகிறார்கள்.
மனிதர்கள் விண்வெளியில் குடியேறுவது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அவன் விண்வெளிக்குச் சென்றால் தங்குவதற்கான இடம் தான் முதல் பிரச்சனை. ஆக பூமியில் இருப்பது போல உறுதியான கட்டுமான அமைப்புகள் தேவைப்படுகின்றன. பூமியிலிருந்து செங்கல், சிமென்ட் போன்ற பொருட்களை விண்வெளிக்கு அனுப்பி கட்டுமானங்களை உருவாக்குவது அதிக செலவு பிடித்த வேலை.
இந்த பிரச்சனைக்கு விஞ்ஞானிகள் ஒரு தீர்வை முன்வைத்துள்ளனர். நிலவு, செவ்வாய் போன்ற கோள்களில் இருக்கும் தூசியைப் பயன்படுத்தி செங்கல் போன்ற ஒரு பொருளை உருவாக்க முடியும் என ஒரு சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கோள்களில் இருக்கும் தூசி, உப்புத் தண்ணீர் இருந்தால் போதும் கட்டுமான பொருளைத் தயாரித்துவிடலாம். ஆனால் இதை உருவாக்க அதிக வெப்பநிலையில் அந்த இரு பொருளையும் கலக்க வேண்டும். அப்போது தான் ஒரு உறுதியான வீடு கட்டும் கல் போன்ற பொருள் உருவாகும் என மத்திய ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரனஜாய் கோஷ் மற்றும் அவரது அணியினர் ஓர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
நிலவின் பாறைகளில் இருக்கும் தூசியை ரிகோலித் (Regolith) என்கிறார்கள். இதைப் பயன்படுத்தி ஓர் உறுதியான கட்டுமானப் பொருளை உருவாக்க முடியும் என்பது எந்த அளவுக்கு மகிழ்ச்சியான விஷயமோ, விண்வெளியில் இந்த கட்டுமான பொருளை வேக வைத்து உருவாக்கத் தேவையான வெப்ப ஆற்றல் கிடைப்பது சிரமமான காரியம் என்பது சோகமான விஷயம்.
விண்வெளியில் கட்டுமான பொருளாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பான ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன. ரத்தத்தைக் கூட விண்வெளியில் கட்டமைப்புகளை உருவாக்க ஒரு ஒருங்கிணைக்கும் (Binding Agent) விஷயமாகப் பயன்படுத்தலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
ஒருவேளை எதிர்காலத்தில் விண்வெளியில் கட்டுமான அமைப்புகளை உருவாக்கும் சாத்தியக் கூறுகள் ஏற்பட்டால், பூமியிலிருந்து கட்டுமான பொருட்களை விண்வெளிக்கு அனுப்பி வைப்பது கிட்டத்தட்டச் சாத்தியமில்லாத விஷயம்.
அப்போது இது போன்ற புதிய கண்டுபிடிப்புகள், விண்வெளியில் புதிய மனித நாகரிகத்தை உருவாக்க முக்கிய பங்காற்றும் என்கிறது அறிவியல் உலகம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust