
வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? அதைப் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அது உண்மைதானா என்று நம்புமளவுக்கு யதார்த்த உலகில் சில விசயங்கள் வெளியாகியிருக்கின்றன. நம்மை விட பல மடங்கு முன்னேறிய வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்து நம்மை அழிக்க நினைத்தால் பூமியின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடும் என்கிறார் பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறையில் பணியாற்றிய வேற்றுக்கிரக ஆலோசகர் ஒருவர்.
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி சீனாவில் அமைந்துள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியின் தொலைதூரத்திலிருந்து சில சந்தேகத்திற்குரிய ஒலிகளை கண்டறிந்ததாக சீனா அறிவித்தது. ஏற்கனவே வேற்றுக்கிரவாசிகள் குறித்து உலகில் பல்வேறு அளவுகளில் நடக்கும் விவாதத்தை இச்செய்தி மேலும் பரபரப்பாகி விட்டது. மேலும் சமீபத்தில் அமெரிக்க பாராளுமன்றம் வேற்றுக்கிரவாசிகள் குறித்து பகிரங்க பொது விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் புதிய செய்தி அமெரிக்க பாராளுமன்றம் இது குறித்து விவாதிப்பது சரி என நிரூபித்துவிட்டது. கூடவே ஆர்வத்தையும் கிளப்பி விட்டிருக்கிறது.
சமீபத்தில் பூமிக்கு வெளியே அறிவார்ந்த உயிர்கள் இருக்கலாம் என்று ஒரு முன்னாள் விண்வெளி வீரர் கூறினார். இது பிரிட்டிஷ் மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரிட்டீஷ் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றிய முன்னாள் வேற்றுக்கிரவாசிகள் குறித்த ஆலோசகர் நிக் போப், புதிய உயிர்கள் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டால் அது நம் கிரகமான பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என ஒப்புக் கொண்டார்.
நிக் போப்பிடம் இது குறித்து ஜிபி நியூஸ் தொலைக்காட்சியின் நெறியாளர் பேட்ரிக் கிறிஸ்டிஸ் உரையாடினார். வேற்றுக்கிரவாசிகளுக்கு நாம் பதிலளிக்கும் பட்சத்தில் அவர்கள் நம்மை அழிக்கமாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா என்று பேட்ரிக் கிறிஸ்டின் கேட்டார்
அதற்கு பதிலளித்த முன்னாள் வேற்றுக்கிரவாசி ஆலோசகரான நிக் போப், அது குறித்து தெரியவில்லை என ஒப்புக் கொண்டார். மேலும் நாம் வேற்றுக்கிரவாசிகளோடு இன்னும் பேசவில்லை என்றாலும் நமது வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு கடந்த பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அவற்றின் ஒலி, ஒளி அலைகள் மூலம் இதற்கு முன்னரே வேற்றுக்கிரவாசிகள் நம்மை அறியக்கூடியவரையில் நாம் இருக்கிறோம். எனவே வேற்றுக்கிரவாசிகள் நம்மை அறிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன அறிந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இது குறித்து இன்று மக்கள் பலர் கவலைப்படுவதை தான் புரிந்து கொள்வதாக கூறிய நிக் போப், மறைந்த உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூட வேற்றுக்கிரவாசிகள் குறித்து மிகவும் கவலைப்பட்டதை நினைவுப்படுத்தினார்.
நம்மை விட பல மடங்கு நாகரீக முன்னேற்றம் கொண்ட ஒரு வேற்றுக்கிரவாசிகளது நாகரீகத்தை நாம் எதிர்கொண்டால் என்ன நடக்கும்? அவர்கள் நம்மை விரோதிகளாக பார்த்தால் அத்துடன் பூமியில் மனிதர்களது வாழ்க்கை முடிவுக்கு வந்து விடலாம் என்கிறார் நிக் போப்.
அதே நேரம் இந்த பயத்தின் மூலம் வேற்றுக்கிரவாசிகளை அறிந்து கொள்ளும் முயற்சியிலிருந்து நாம் பின்வாங்க கூடாது என்றும் இந்த முன்னாள் ஆலோசகர் கூறினார். நமது வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் என்று கருதியிருந்தால் நாம் ஒருபோதும் பெருங்கடல்களைக் கடந்து புதிய நாடுகள், இடங்களை கண்டுபிடித்திருக்க மாட்டோம்.
அதே போன்று நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் சோதனை நிமித்தம் விண்கலங்களை அனுப்பியிருக்க மாட்டோம். நாம் ஒளிந்து கொள்ள முடியாது, நமக்கு வெளியே என்ன நடக்கிறது, என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையூட்டுகிறார் இந்த முன்னாள் வேற்றுக்கிரவாசி ஆலோசகர் நிக் போப்.
ஜூன் 15 அன்று தனது தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட சீன அரசு நிறுவனம் பின்னர் அதை மக்கள் பார்வையிலிருந்து நீக்கிவிட்டது. இது குறித்து மக்களிடையே அச்சம் கலந்த விவாதங்கள் நடைபெறவேண்டாம் என சீன அரசு நினைத்திருக்கலாம்.
ஆனால் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து ஒரு வேற்றுக்கிரவாசிகள் உலகிலிருந்து நமக்கு தகவல்கள் வருமென்றால் அது பெரும் மதிப்புடையது. அதில் உள்ள தகவல்களை நாம் ஆராய வேண்டும் என்கிறார் நிக் போப். அந்த வகையில் அவர் சீன தொலைக்குக் கண்டுபிடித்த தகவல்கள் முக்கியமானது என்று கருதுகிறார்.
இப்படி அமெரிக்கா, பிரிட்டன், சீனா என பல முன்னணி நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு வேற்றுக்கிரவாசிகள் குறித்த ஆய்வை முடுக்கி விட்டிருக்கின்றன. இது குறித்த அறுதி உண்மை நம் காலத்திலேயே கிடைக்காமல் போனாலும் விரைவில் தெரிய வரும் என்பதையே சமீபத்திய ஆய்வுகள், அறிக்கைகள் கூறுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust