சமீபத்தில் சவுதி விண்வெளி ஆணையத்திற்கும் பிரிட்டனின் விண்வெளி ஏஜென்சிக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது மத்திய கிழக்கில் அமைதியான முறையில் விண்வெளித்துறையை பயன்படுத்துவதில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் கட்டமைப்பை உருவாக்கும். இது மத்திய கிழக்கின் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய நகர்வாகும்.
இந்த ஒப்பந்தத்தை ஒட்டி தொழில்நுட்பத்தை அளிக்கும் ஸ்பேஸ்செயின் நிறுவனம் தனது அலுவலகத்தை அபுதாபியில் மார்ச் மாதம் திறந்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே பிரிட்டனிலும் ஆசியாவிலும் செயல்பட்டு வருகிறது.
ஸ்பேஸ்செயின் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிக் ட்ரூட்ஜென் கூறும் போது, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளித்துறை ஆர்வம்தான் தங்களது கம்பெனியை அபுதாபிக்குக் கொண்டு வந்தது என்றார்.
கடந்த ஆண்டு நடந்த செவ்வாய் கிரக பயணம் அனைவரது கவனத்தையம் ஈர்த்தது. அத்தகைய ஆர்வமும், இலட்சியமும் ஐக்கி அரபு எமிரேட்ஸிலும் இருக்கிறது என்று அவர் பாராட்டினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்துடன் இந்நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது தானும் சவுதியிலிருந்ததாக அவர் கூறினார். இந்த ஒப்பந்தம் இரு தரப்பு நாடுகளோடு தங்களைப் போன்ற தனியார் நிறுவனங்களும் சேர்ந்து செயல்படும் வாய்ப்பை அளிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் விண்வெளித்துறையில் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன என மேலும் கூறினார்.
இங்கிலாந்திலும், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சியிலும் தமது நிறுவனம் பல திட்டங்களில் பணியாற்றுவதாக அவர் கூறினார். ஐரோப்பிய நாடுகளிடம் அதிக திறமையும், முன்னேறிய தொழில் நுட்பமும் இருக்கின்றன. ஆனால், மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பாவை விட அதிக இலட்சிய திட்டங்களை வைத்திருப்பதாக அவர் கூறினார்.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் விண்வெளியின் கிரகங்களிலிருந்து கற்களைக் கனிமவளங்களைக் கொண்டு வரும் திட்டம் ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்குச் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது. இத்தகைய திட்டத்தில் அமெரிக்கா, லக்சம்பர்க் நாடுகளுக்குப் பிறகு மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் நுழைந்துள்ளது.
விண்வெளியில் உள்ள சிறுகோள்களில் சுரங்கம் அமைப்பது என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்கால திட்டங்களின் ஒரு பகுதியாகும் என அமீரகத்தின் விண்வெளிக் கவுன்சிலுக்கான செய்தித் தொடர்பாளர் சாஹித் ரெட்டி மதரா கூறுகிறார். மேலும் விண்வெளித்துறை திட்டங்களில் விரிவான, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை உருவாக்கியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
விண்வெளி கோள்களில் சுரங்கம் அமைப்பது என்பது 20 ஆண்டுகள் காலமெடுக்கும் திட்டமாகும். அதற்கு முன் செயற்கைக் கோள் ஏவுதல், ஆராய்ச்சிப் பணிகளை தாங்கள் திட்டமிடுவதாக மதரா கூறினார்.
தற்போதே அமீரகத்தின் விண்வெளித் திட்டம் வீனஸ் மற்றும் மார்ஸ் - ஜூப்பிட்டருக்கு இடையில் இருக்கும் சிறுகோள்களில் கற்கள் எடுக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான விண்வெளி செயற்கைக்கோள்கள் 2028 ஆம் ஆண்டில் ஏவப்படும் என்றும் அவர் கூறினார்.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியராக பணியாற்றும் ரே ஹாரிஸ் இதிலிருந்து சற்று மாறுபடுகிறார். விண்வெளித் திட்டங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தேவையான உடனடி பலன்களைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
மத்திய கிழக்கு தற்போது உலகளவிலான கலாச்சார நிகழ்வுகளையும் நடத்துகிறது. சான்றாக கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்க இருக்கிறது. இதற்கான ஆராய்ச்சி, திட்டமிடல், பயிற்சி போன்றவை இருக்கின்றன. விண்வெளித் திட்டம் என்பது இதனுடைய தர்க்க ரீதியான தொடர்ச்சிதான். உலகில் பல நாடுகள் விண்வெளித் துறையில் கால்பதித்திருக்கின்றன. பல செயற்கைக் கோள் திட்டங்களை அமல்படுத்தியிருக்கின்றன. இதுநாள் வரை இந்தத் துறையை இழந்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் தற்போதுதான் விழித்துக் கொண்டிருக்கின்றன என்கிறார் ஹாரிஸ்.
அதே நேரம் விண்வெளித் துறை திட்டங்கள் பூமியை வணிக ரீதியாகக் கண்காணிப்பது குறித்த கேள்விகளை அவர் எழுப்புகிறார். ஒரு சவுதி கம்பெனி ஹாரிஸை நாடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அதிக நேர்த்தியுடன் நடத்துவதற்குச் செயற்கைக் கோள்கள் பயன்படுமா என்று கேட்டிருக்கிறது.
இது போன்ற பணிகள் மண்ணிலிருந்து செய்வதை விட விண்ணிலிருந்து எளிதாகச் செய்து விடலாம் என்கிறார் ஹாரிஸ். ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குப் பயன்படும் வண்ணம் விண்வெளித்திட்டம் முதிர்ச்சியாக ஏன் நடந்துகொள்ளக் கூடாது என்கிறார் அவர். சில செயற்கைக் கோள்கள் வணிக நோக்கத்திற்காக இருக்கட்டும். சில செயற்கைக்கோள்கள் 31 செமீ பிக்சல் தெளிவுடன், காடு அழிப்பு, ஆறு மாசுபடுதல், மண்ணியல் அமைப்புகள் போன்றவற்றையும் கண்காணிக்கலாமே என்கிறார். மேலும் எங்கே கச்சா எண்ணெய் இருக்கிறது, கட்டுமானத்திட்டங்களை வணிகப்படுத்துவது கூட இதன் மூலம் செய்யலாம் என்கிறார். அவரைப் பொறுத்த வரை வணிக திட்டங்களோடு, சுற்றுச்சூழல் திட்டங்களும் சேர்ந்தே இருப்பது மத்திய கிழக்கிற்கும், உலகிற்கும் நல்லது.
மத்திய கிழக்கின் நிதி செல்வாக்கு, பரந்த அளவிலான சுற்றுச்சூழல் திட்டங்கள், செயற்கைக் கோள்கள் கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஏவுகணை செலவுகளில் காணப்படும் வீழ்ச்சி ஆகியவற்றை கருதிக் கொண்டு மேற்கண்ட திட்டங்களை மத்திய கிழக்கில் செய்ய முடியும் என்கிறார் ஹாரிஸ்.
அவர்கள் சுற்றுச்சூழலில் கவனம் பதித்தால் அவர்களது அரசாங்கங்களின் நோக்கங்கள் உலகின் நன்மைக்காகப் பாடுபடும் நாடுகளாக அங்கீகரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஸ்பேஸ்செயினின் ட்ரட்ஜன் இதை ஒப்புக்கொள்கிறார். இந்நிறுவனம் ஏற்கனவே அமீரகத்தில் ஒரு நிறுவனத்தோடு இணைந்து நீர் பாதுகாப்பு, புவி பகுப்பாய்வு, துறைமுகங்கள் மற்றும் சதுப்புநிலங்களை கண்காணிப்பது மூலம் இப்பிராந்தியத்திற்குப் பலனளிக்கும் நன்மைகளை மண்ணியல் தரவுகள் மூலம் ஆய்வு செய்வதாக அவர் கூறுகிறார்.
மத்திய கிழக்கு நாடுகள் விண்வெளித்துறையில் வளர்வதற்கு வேகமான அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம். அதனால் அதற்கான உள்நாட்டுத் திறமைகள் மற்றும் கல்வி பற்றாக்குறையாக உள்ளது என்கிறார்.
விண்வெளித்துறைக்கு தேவையான உயர்தர பல்கலைக்கழகங்கள் மேற்குலக நாடுகளில் உள்ளதைப் போல மத்திய கிழக்கில் இல்லை. இருப்பினும் மத்திய கிழக்கு நாடுகள் பொறியாளர்களையும், இதர பணியாளர்களையும் மேம்படுத்தவும், உருவாக்கவும் செய்கின்றன. ஆனால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதை உணர்ந்த சவுதி அரேபியா தனது மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து விண்வெளித்துறை அறிவியல், விண்வெளி பொறியியல் படிப்புகளுக்கான உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களில் படிக்க வைக்கிறது. அமெரிக்க விண்வெளித்துறையான நாசாவும் இதற்கு உதவுகிறது.
எனினும் விண்வெளித்துறையில் மத்திய கிழக்கு எப்படிச் செயல்படும் என்பது சவுதி அரேபியா இன்னும் ஒரு வருடத்திற்குள் அளிக்க இருக்கும் செயல் திட்டத்தின் மூலம்தான் தெரிய வரும். ஓமன் நாடும் அதே போன்று வெளியிட இருக்கிறது.
கச்சா எண்ணெய்க்கு எதிர்காலமில்லை என்பது தெரிந்த மத்திய கிழக்கு நாடுகள் மாற்றுப் பொருளாதாரத்திற்கு மாறும் எதிர்காலம் குறித்து யோசித்து வருகின்றன. விண்வெளித்துறையில் கால் பதிப்பதும் அதனுடைய ஒரு அங்கம்தான். ஆனால் விண்வெளித்துறையில் கோலோச்சும் நாடுகள் அளவுக்கு மத்திய கிழக்கு முன்னேறுவதற்கு பெரும் முயற்சி வேண்டும். அதற்குப் பணம் மட்டுமே போதுமானதல்ல.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust