மனிதர்களுக்கிடையே நல்லிணக்கம் கொண்டு, அன்பாகவும் ஒற்றுமையாக இருப்பதையே எல்லா மதங்களும் விரும்புகின்றன. பலதரப்பட்ட மதங்கள் நம் இந்தியாவில் இருந்தாலும், பலருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், “ நாம் அனைவரும் சக மனிதர்களே, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ்வோம் “ என்ற உயர் நோக்கத்தோடு வாழ்கிறவர்கள். மதங்களை வைத்து என்னதான் செய்து பிரிவினைகளை ஏற்படுத்த முயன்றாலும், மனிதமும் மனித நேயமும்தான் இறுதியில் வெல்கிறது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம், புகழ்பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம் நண்பர்கள் கொடை அளித்ததுதான்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு நாளை 6/02/2022 அன்று காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்திற்காக விருத்தாசலம் நவாப் பள்ளிவாசல் முத்தவல்லி முகமது முஸ்தபா தலைமையில் பொருளாளர் சோழன் சம்சுதீன், ஜங்ஷன் ரோடு முஸ்லிம் வியாபாரிகள் சார்பில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தைக் கும்பாபிஷேக கமிட்டி குழு தலைவர் அகர்சந்திடம் வழங்கினர். சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு நிதி வழங்கிய முஸ்லிம் வியாபாரிகளைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
2017ம் ஆண்டுமுதல் குடமுழுக்கிற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றது. கொரோனா பெறுந்தொற்று போன்ற காரணமாகவும் வேலைகளின் வேகம் குறைந்தது. 20 ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் இந்த புகழ்பெற்ற ஆலயத்தின் குடமுழுக்கு நாளை நடப்பெற உள்ளது. கடந்த மாதம் 27ம் தேதியன்று யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நாளை காலை ஆறாம் நாள் யாக சாலை பூஜைகள் காலை 4 மணிக்கு தொடங்குகிறது. 5 மணியளவில் பரிவார யாகங்கள், பூர்ணாஹதி, பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. காலை 7 மணியளவில் பிரதான மூர்த்திகளுக்கு மகா பூர்ணாஹதி நடைபெறும். காலை 7.15 மணிக்கு கடம் வேதகோஷங்கள், சிவகயிலாய வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெறுகிறது. 8.15 மணியளவில் கோபுரங்கள், விமானங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்மோட்டர், நீர் தூவும் எந்திரங்கள் மூலம், புனித நீர் மக்கள் மீது தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8.30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வெளிப்பகுதியில் 53 கண்காணிப்பு கேமராக்களும், உட்பகுதியில் 42 கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் பகுதியே விழாக்கோலமாகக் காட்சியளிக்கிறது.
விருத்தாசலம் பெயர்க்காரணம் : “விருத்த’ என்றால் “முதுமை’ என்றும் “அசலம்’ என்றால் “மலை’ என்றும் பொருள்படும். எனவே “விருத்தாசலம்’ என்றால் “பழயமலை’ என்பது பொருள். தேவார திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது.இந்த விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில். 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் 5 எண்ணிக்கையில் இருப்பது கோவிலின் சிறப்பம்சமாகும்.
காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் “விருத்த காசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் “காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி’ என்ற பழமொழி கூட உண்டு. முருகன் சிவனைப் பூஜித்த தலம் இது. இறைவனது அருளால் சுந்தரர் பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளைக் கள்வருக்குப் பயந்து இந்நதி(மணிமுத்தா)யில்போடப் பெற்று பின்னர் திருவாரூர் குளத்தில் கிடைக்கப் பெற்றாராம். விபச்சித்து முனிவரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில் முதுகுன்றத் திருக்கோயில் ஆகும். முத்தா நதியில் பொன் : ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார்.
விருத்தாசலத்தில், இந்த தலத்திற்கு வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்குப் பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தா நதியில் போட்டு விட்டுடார் சுந்தரர். பிறகு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படை யாகக் கொண்டே, “ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்’ என்ற பழமொழி தோன்றியது. இறைவன் தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்தது. இதை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காகத் தும்பிக்கை நாயகனைச் சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். அதனைத் திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவேதான் இத்தலத்தில் உள் சுற்றுப் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு அருள்பாலித்து வருகிறார்.
இவ்வூர் ஆலயத்திற்குப் பலமன்னர்கள் வழிவழியாய் தான தர்மங்கள், கொடைகள் என பலவும் கொடுத்ததற்கான கல்வெட்டுகளைக் காணமுடிகிறது. மக்கள் அதை நன்முறையில் பாதுகாத்தும் ஒத்துழைப்பு நல்கியும் வருவது சிறப்பு. பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அவன் மனைவி செம்பியன் மாதேவி, உத்தம சோழன், ராஜராஜச் சோழன், ராஜேந்திர சோழன், இராஜாதி ராஜ சோழன், விக்கிரம சோழன், 2-ம் இராஜராஜ சோழன், 3-ம் குலோத்துங்க சோழன், ஏழிசை மோகனான குலோத்துங்க சோழ காடவராதித்தன், வீரசேகர காடவராயன், அரச நாராயணன் கச்சிராயன், கோப்பெருஞ்சிங்கன், கச்சிராயன் எனும் அரச நாராயணன் ஏழிசை மோகன், விக்கிரம பாண்டியன் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், மாவர்ம பாண்டியன், கோனேரின்மை கொண்டான், அரியண்ணா உடையார், பொக்கண உடையார், கம்பண உடையார், வீரவிஜயராயர், முப்பிடி கிருஷ்ண பதி போன்ற மன்னர்களின் பெயர்களில் கல்வெட்டுகளில் உள்ளன.
கோப்பெருஞ்சிங்க மன்னன் இவ்வாலயத்து ஸ்வாமிக்கு, ஒரு மாங்காய் மாலையும், விளிக்குப்பொன்னும், பசுக்களும் ஆடுகளும் அளித்துள்ளான். பரகேசரி வர்மன், குலோத்துங்கன் இவர்களும் பசுக்கள், பொன், நிலம் என பல நிவந்தங்களை அளித்துள்ளனர்.
பல சிறப்புகள் கொண்ட பழமலை நாதருக்கு நாளை கும்பாபிஷேகம். விழாக்கோலம் கொண்ட விருத்தாசலத்து ஈசனை வாழ்வில் ஒரு முறையேனும் தரிசித்து அருள்பெற்றிடுவோம்.