IPL 2022 PBKS vs CSK: விசில் போட முடியாது; சங்குதான் ஊதனும் போல - மரண பீதியில் ரசிகர்கள் 

ஆந்திர ஹீரோக்களை போல போட்டியில் மரண பீதியை காட்டினாலும், ரசிகனை பிபி மாத்திரையுடனே உட்கார வைத்தாலும் கிளைமாக்சில் பாலையா பாணியில் சாகச வெற்றி பெறுவது சிஎஸ்கேவின் வழக்கம்.
IPL 2022
IPL 2022NewsSense

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது சிஎஸ்கே. இந்த ஹாட்ரிக் தோல்வி சென்னை ரசிகர்களுக்கு 2020 Vibes-ஐ தந்திருக்கிறது. 

ஆந்திர ஹீரோக்களை போல போட்டியில் மரண பீதியை காட்டினாலும், ரசிகனை பிபி மாத்திரையுடனே உட்கார வைத்தாலும் கிளைமாக்சில் பாலையா பாணியில் சாகச வெற்றி பெறுவது சிஎஸ்கேவின் வழக்கம். 

ஆனால் இந்த சீசனிலோ 1.2..3... என சென்னை ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்னடான்னு கேட்டா எம்ஜிஆர் ஸ்டைலில் மூணு அடி வாங்கிட்டு சிஎஸ்கே திருப்பி அடிக்கும்னு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது மஞ்சள் ஆர்மியின் ரசிகர் படை. 

IPL 2022
இலங்கை : மகிந்த ராஜபக்சே ராஜிநாமா- இவர்தான் இலங்கையின் புதிய பிரதமர்?

ஞாயிறு இரவு, பஞ்சாப்போட மேட்ச், அடிச்சு துவம்சம் பண்ணி சிஎஸ்கே வெற்றி கணக்கை தொடங்கிட்டா, பீஸ்ட் Vibes உடன் CSK-க்கும் விசில் அடிச்சு வீக் எண்டை வெற்றிகரமாக முடிச்சிடலாம்னு டிவி முன்னாடி உட்கார்ந்தால் பஞ்சாப் எகிறி அடித்து, சென்னையை புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்துக்கு தள்ளிவிட்டது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்றது சென்னை அணி. முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் 200-க்கு மேல அடிச்சாலும் பௌலர்கள் சாரி பாஸ், நாங்க எங்க போட்டாலும் அவங்க பொளக்குறாங்கனு கதறியது ஞாபகம் வந்ததோ என்னவவோ சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா இந்த முறை சேஸிங் செய்கிறோம் என்றார்.

பஞ்சாப் அணி வெள்ளிக்கிழமை இரவு கொல்கத்தா இரவு ரசலிடம் வாங்கிக் கட்டிகட்டியது. அதனால், இந்த மேட்ச் சென்னை ஈஸியா ஜெயிச்சுரும்னுனு தெம்புடன் இருந்தேன்.

முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பஞ்சாப் கேப்டனை வெளியேற்றியது சென்னை. இரண்டாவது ஓவரிலேயே பானுக ராஜபக்ஸவை காலி செய்தது. அட எங்காளுங்க பின்ரானுங்கல்ல என நீல சட்டை ரசிகர்களையும், சிவப்பு சட்டை ரசிக பட்டாளத்தையும் ஓரண்டை இழுக்கத் தொடங்கினேன்.

ஆனால் அதன் பின்னர் வந்த லயம் லிவிங்ஸ்டன் சென்னை ரசிகர்களுக்கு தலையில் வைத்த கொட்டு ஓவ்வொன்றும் இடி போல இறங்கியது.

ஐந்து பௌண்டரி, ஐந்து சிக்ஸர்னு அவர் ஆடிய சரவெடிய பார்க்கையில் ஸ்கோர் 230 தாண்டிரும் போலயே என பீதி கிளம்பியது. அப்போது ஜடேஜா பந்தில் லிவிங்ஸ்டன் கொடுத்த கேட்சை ராயுடு பத்திரமாய் பிடிக்க, வவுத்துல பாலை வார்த்தப்பா அங்குசாமினு கோடான கோடி நன்றி சொன்னேன்.

IPL 2022
எரியும் இலங்கை : ராஜபக்‌ஷ வீட்டிற்கு முன்பாக ஒருவர் தற்கொலை - என்ன நடந்தது?

அதன் பிறகு சென்னை பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் எல்லாம் திடீரென சிறப்பாக விளையாட தொடங்கினர். பஞ்சாப் அணியின் ரன்ரேட் வேகமாய் சரிந்தது, இறுதியில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

ஆட்டத்தில் பனிப்பொழிவு இருக்கும்; பந்தை கிரிப்ல வைக்கிறது கஷ்டம், அவுட் ஃபீல்டு வேகமா இருக்கும்; சென்னைக்கு பத்தாவதா களமிறங்குபவர் கூட சிக்ஸர் அடிப்பார்; வெற்றி நிச்சயம் - 16 ஓவரில் மேட்சை முடிப்பது லட்சியம்னு மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் கிரிக்கெட் அனலிஸ்ட்டாக மாறிக் கொண்டிருந்தார்கள்.

சென்னை தனது இன்னிங்ஸை தொடங்கியது. 2வது ஓவரில் ருதுராஜ் அவுட் ஆனார். அவர் அப்படித்தான்பா முதல் மூன்று மேட்ச் போன இரண்டு சீசன்லயும் சொதப்பினார், இதெல்லாம் Mandatory சொதப்பல்கள். இதுக்கப்பறம் இருக்கு கச்சேரி என புள்ளிவிவரங்களோடு ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் சக மஞ்சள் படை கன்னிகள்.

சரி, விடுப்பா மேட்ச பாப்போம்னு உட்கார்ந்தால், இரண்டாவது ஓவரில் உத்தப்பா அவுட் ஆனார். ஐந்தாவது ஓவரில் மொயின் அலி அவுட் ஆனார். என்னாடா லைட்டா கவ்வுதுனு பார்த்துக் கொண்டிருந்த போதே பவர்பிளேவிலேயே ஜடேஜா களமிறங்கினார்.

இதென்ன சோதனை; இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ என கலங்கும் வேளையிலேயே பவர்பிளே முடிவதற்குள் ஜடேஜாவும் பெவிலியனும் போய் உட்கார்ந்திருந்தார்.

ஆறு ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி. பிறகு ராயுடுவும் அவுட் ஆக 36-க்கு ஐந்து விக்கெட்டுகள்.

ஆர்சிபியின் 49 ரன்களையாவது தாண்டுமா என சோகமாய் குத்தவைத்து உட்கார்ந்தபோது தூதுவன் வருவான், சென்னை அணியை மீட்பான் என நம்பிக்கை தரும்விதமாக ஷிவம் துபே ஆடினார்.

அவர் அடித்த ஒரு பௌண்டரி, சிக்ஸர் உதவியால் ஐம்பது ரன்களை கடந்தது சென்னை அணி. ஆர்சிபி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

தோனி ஒருபுறம் பந்துகளை வீணடித்தாலும் விக்கெட்டை கொடுக்காமல் துபேவுக்கு பக்க பலமாய் நிற்க, ஷிவம் துபே பட்டா பாக்கியம், இல்லைனா லேகியம் கணக்கா பேட்டை சுழற்றி சுழற்றி வீசினார்.

IPL
IPLfacebook

ரபாடா ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களும் அடித்து மிரளவைத்தார். சென்னை ரசிகர்களுக்கு தூரத்தில் ஒரு வெளிச்சம் தெளிந்தது.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில், சிஎஸ்கேவுக்கு சரசம் பண்ணும் வகையிலேயே லயம் லிவிங்ஸ்டன் விளையாடினார். தட்டுத்தடுமாறி சிஎஸ்கே எழுந்திருக்க முயன்ற வேளையில், பதினைந்தாவது ஓவரை வீசிய லிவிங்ஸ்டன் கடைசி இரண்டு பந்துகளில் துபே மற்றும் பிராவோ என இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிஎஸ்கேவை வச்சு செய்த லிவிங்ஸ்டன் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்து சற்றே ஆறுதல் தந்தார் தோனி.

ஆனால் சென்னை அணி 18வது ஓவர் முடியும்போதே 10 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 126 ரன்கள் மட்டுமே சென்னையால் எடுக்க முடிந்தது.

ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் சென்னைக்கு இரண்டாவது அதிமோசமான தோல்வி. இந்த ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஜடேஜா படை.

இன்றைய ஆட்டத்தில் துபே 30 பந்துகளில் 57 ரன்கள் அடித்தது மட்டும்தான் ஒரே ஆறுதல் அம்சம்.

புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியும் வரும் சனிக்கிழமை மோதுகின்றன.

எப்பயா பாயிண்ட் எடுப்பீங்க எனும் கேள்விக்கு அப்போதாவது சென்னை பதில் சொல்கிறதா என பார்ப்போம்.

IPL 2022
உலகை நடுங்க வைத்த செங்கிஸ்கான் கல்லறை - ஒரு மர்ம வரலாறு!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com