1,2,3,4 என தோல்விகளை மட்டுமே வரிசையாக எண்ணிக் கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸை புரட்டி எடுத்தது. 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடைசி இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி இருக்கிறது.
நேற்றைய தினம் டாஸ் போட ஃபாப் டு பிளசிஸ், ரவீந்திர ஜடேஜா களம் புகுந்ததும் சென்னை ரசிகர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள்.
முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும் இந்நாள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான டு பிளசிஸ் டாஸ் வென்று சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
பவர்பிளேவில் சொதப்பிய சென்னை அதற்கடுத்த ஓவரிலேயே மொயின் அலி விக்கெட்டையும் இழந்தது. அப்போது ஸ்கோர் 37/2.
ம்ஹூம் இவங்க திருந்தல மாமா என நட்புகளிடம் கலாய்த்துக் கொண்டிருக்கும்போது துபே மற்றும் உத்தப்பா ஜோடி மெல்ல மெல்ல இன்னிங்க்ஸை நகர்த்திக் கொண்டு சென்றது.
10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள். 20 ஓவர்கள் பேட்டிங் செய்து 160 ரன்களையாவது கடக்குமா என சந்தேகம் எழுந்த நிலையில், மிடில் ஓவர்களில் இந்த இரு பேட்ஸ்மேன்கள் ஆடிய ஆட்டம் வெறித்தனம் வெறித்தனம்...
அதுவும் துபே பேட்டில் பட்ட பந்துகள் சிக்ஸருக்கு தெறித்தன.
யார் பௌலிங் போட்டாலும் உதை தான் என்ற ரீதியில் நாலாபுறமும் பந்துகளை விரட்டியடித்தது உத்தப்பா - துபே ஜோடி.
சென்னை அணியின் மந்தமான ஆட்டத்தை பார்த்துவிட்டு போரடிக்கிறது என 20 -25 நிமிடம் ஒரு சிறிய பிரேக் எடுத்த நபர்களுக்கு நேற்றைய தினம் அதிர்ச்சிகரமாகத் தான் இருந்திருக்கும்.
ஆம், 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 133 ரன்களாக தடாலடியாக உயர்ந்தது. 10 - 15 மிடில் ஓவர்களில் மட்டும் 73 ரன்கள் விரட்டி கெத்து காண்பித்தது சென்னை.
'புயல் வேகத்துல போயிக்கிட்டு இருக்கானுங்க பரமா, குறுக்க மண் லாரி ஏதும் விட்றாதீங்க' என சிஎஸ்கே ரசிகர் வேண்டிக் கொண்டிருக்கச் சென்னையின் துபே, உத்தப்பா இணை கியரை மாற்றாமல் பந்துகளை நொறுக்கியது. இதனால் இறுதி ஓவர்களிலும் ஆட்டம் சரவெடியாய் அமைந்தது.
சிராஜ் வீசிய 17வது ஓவரில் 18 ரன்கள், அகஷ் தீப் வீசிய பதினெட்டாவது ஓவரில் 24 ரன்கள் எனப் பட்டாசாய் வெடித்தது சிஎஸ்கே.
குறிப்பாக 18வது ஓவரை வீசிய அகஷ் சிஎஸ்கே மிரட்டல் ஆட்டத்தால், ஆட்டத்தில் தடுமாறி தொடர்ச்சியாக மூன்று வைடு எல்லாம் வீசினார்.
ஹஸரங்காவின் 19வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் உத்தப்பா மற்றும் ஜடேஜா வீழ்ந்தனர். உத்தப்பா 50 பந்துகளில் 88 ரன்கள் அடித்து வீழ்ந்தார்.
கடைசி ஓவரை ஹேசில்வுட் வீசினார், துபே இந்த ஓவரில் இரு சிக்ஸர்கள் வைத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் துபே கொடுத்த கேட்சை டு பிளசிஸ் அரிதாக தவறவிட்டார்.
துபே 46 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்காக 217 ரன்களை நிர்ணயித்தது.
என்னதான் சென்னை அணி பேட்டிங்கில் மாஸ் காட்டினாலும், பௌலிங்கில் சென்னை வீரர்களை நினைத்து கெதக்னு தான் இருந்தது. ஏனெனில் சென்னையின் வரலாறு அப்படி.
பெங்களூரு அணியின் சேஸிங்கின்போது பவர்பிளேவுக்குள் தொடக்க வீரர்கள் இருவர் மற்றும் விராட் கோலியை இழந்தது.
பவர்பிளே முடிந்த கையோடு மேக்ஸ்வெல்லுக்கும் டாடா பாய் சொல்லி அனுப்பிவைத்தார் ஜடேஜா.
அப்போது பெங்களூரு அணியின் ஸ்கோர் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள். அதன்பின்னர் சில வீரர்கள் ஓரிரு சிக்ஸர்கள் வைத்தாலும் ஆட்டத்தில் நிலைக்காமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஆனால் தினேஷ் கார்த்திக் தனி ஒரு நபராக மேட்சின் போக்கையே மாற்ற முயற்சித்தார். குறிப்பாக முகேஷ் வீசிய 17வது ஓவரில் இரு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி உட்பட 23 ரன்கள் எடுத்தார்.
அப்போது தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது.
அபாயகரமாக விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கை டுவைன் பிராவோ பதினெட்டாவது ஓவரிலேயே வீழ்த்தினார். அதன்பின்னர் ஆட்டம் சென்னை வசம் வந்தது.
இறுதியில் 193 ரன்களை மட்டுமே பெங்களூரால் எடுக்க முடிந்தது.
துபேவின் சரவெடி, உத்தப்பாவின் அதிரடி, கோலியை வீழ்த்த தோனி வகுத்த வியூகம், நேர்த்தியாக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா, சிறுத்தை போல பாய்ந்து கேட்ச் பிடித்த ராயுடு என இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு ஏகப்பட்ட உற்சாக அம்சங்கள் நிறைந்திருந்தது.
இந்த ஐபிஎல் சீசனில் கணக்கை தொடங்கியுள்ள சிஎஸ்கே பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் வெகு தூரம்.