இந்திய அணி தென் ஆப்ரிக்காவுடன் விளையாடவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு, விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம், இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம் தான்.
ஒரு புறம் ராயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தூணாக இருந்த ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இனி அவரது இடத்தை நிரப்ப யாருமே இல்லை என்ற விரக்தியில் இருந்தவர்களுக்கு சர்பிரைஸ் எலிமென்ட்டாக வந்தமைந்தார் தினேஷ் கார்த்திக். சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சோகத்தினால், தன் விளையாட்டில் சரியாக கவனம் செலுத்தாமல் வந்த டிகே, கடைசியாக 2018ல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் விளாசி நிதாஸ் கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
அதன் பின் அவரை இந்திய கிரிக்கெட் ஜெர்சியில் காண்பது ரசிகர்களுக்கு ஒரு அரிதான ஒன்றாக இருந்தது. நல்ல பேட்டிங் திறமையுடன் சிறந்த விக்கெட் கீப்பராகவும் இருக்கும் டிகே வுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவாகவே கதவைத் தட்டின. மேலும் தன் சிறந்த திறன் வெளிப்பாட்டால் ரிஷப் பன்ட்டும் இந்திய அணியில் நீங்கா இடம் பெற்றுவிட, தினேஷ் கார்த்திக் -ன் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என்றே பலரும் நினைத்து வந்தனர். இதை நிரூபிக்கும் விதமாக டிகே கிரிக்கெட் வர்ணனையாளராகவும் அவதாரம் எடுக்க, அவர் விரைவில் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறப்பட்டது.
ஐபிஎலில் முதலில் மும்பை, பின் நீண்ட காலமாகக் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த டிகே, கொல்கத்தா அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார். இந்நிலையில், நடப்பாண்டு தொடருக்கு ஏலத்தில் ஆர்சிபி அணி தினேஷ் கார்த்திக்கை எடுத்தது. டிவில்லியர்ஸுக்கு பிறகு, பெங்களூரு அணியின் விக்கேட் கீப்பராக களமிறங்கிய டிகே, பேட்டிங்கில் 6, 7 போன்ற இடங்களில் இறக்கிவிடப்பட்டார். இதை ஏதோ கண் துடைப்புக்கான வாய்ப்பாக அனைவரும் கருதி வந்த நேரத்தில், மாபெரும் ட்விஸ்ட்டாக வந்தமைந்தது இவரது வெறியாட்டம்.
எதிரணிகளுக்குப் பெறும் தலைவலியாக அமைந்தார் டிகே. 6வது, 7வது இடத்தில் இறங்கி, தன் அனுபவம், பொறுமை, மற்றும் சிறந்த செயல்திறனால், ஆர்சிபி அணியை வெற்றி வாகை சூடவைத்தார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணியுடன் மோதும் அணிகள், விக்கெட் வீழாமல் இருந்தால் தான் இவர் களமிறங்கமாட்டர் என நினைக்கும் நிலைக்கே தள்ளப்பட்டன. தான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையினால் தான் தன் முழு திறனையும் வெளிப்படுத்துவதாக மனம் திறந்தார் டிகே. இது ரசிகர்களைக் கண்கலங்கச் செய்தது.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவுடன் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் தினேஷ் கார்த்திக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த சந்தோஷமான செய்தியை தன் ட்விட்டரில் பகிர்ந்த டிகே, "நீங்கள் உங்களை நம்பினால், எல்லாம் சரியாக நடக்கும்!" என்று பதிவிட்டிருந்தார். ரசிகர்களும் இதை கொண்டாடிவருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust