IPL 2022 : ஒத்த ஓவரில் மாறிய மேட்ச்; சென்னைக்கு சாவு மணி அடித்த மில்லர் 'தி கில்லர்'

ஒரே ஊரு பேட்ஸ்மேன் மட்டுமே மீதம் இருக்க, ஆல்ரவுண்டர் தீவாத்யா, பௌலர் ரஷீத் கான் உள்ளிட்டவர்களை வைத்து தான் ஆட்டத்தை அந்த பேட்ஸ்மேன் நகர்த்த வேண்டும் எனும் சூழல்.
IPL 2022
IPL 2022Facebook
Published on

திரை தீப்பிடிக்கும்; வெடி வெடிக்கும், ஒருத்தன் வந்தால் படை நடுங்கும் - இது டேவிட் மில்லருக்கு பொருந்தும் வார்த்தைகள்.

வெற்றிக்கு தேவையான ரன்கள் 170. அணியில் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா இல்லை; ஸ்கோர் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.

ஒரே ஊரு பேட்ஸ்மேன் மட்டுமே மீதம் இருக்க, ஆல்ரவுண்டர் தீவாத்யா, பௌலர் ரஷீத் கான் உள்ளிட்டவர்களை வைத்து தான் ஆட்டத்தை அந்த பேட்ஸ்மேன் நகர்த்த வேண்டும் எனும் சூழல்.

மில்லர் வந்தார்; கடைசி வரை நின்றார்; தனது இருத்தலை வைத்தே எதிரணியை நடுங்க வைத்தார்; இறுதியில் ஆட்டத்தை வென்று முடித்து சென்னையின் பிளே ஆஃப் கனவுக்கே வேட்டு வைத்துவிட்டார்.

அப்படி என்ன நடந்தது?

நேற்றைய தினம் நடந்த மேட்ச்சில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. உத்தப்பாவும் ருதுராஜும் களமிறங்கினர். குஜராத் அணியின் ஹர்டிக் பாண்ட்யா காயம் காரணமாக அவதிப்பட ரஷீத் கான் கேப்டன் பொறுப்பேற்றார்.

ரஷீத் vs ஜடேஜா என இரு சுழற்பந்து வீச்சாளர்கள் கேப்டன் பொறுப்பேற்று விளையாடும் மேட்ச் என்பதால், ஆட்டதில் சுவாரஸ்யம் கூடியது.

மூன்றாவது ஓவரில் உத்தப்பாவை பார்சல் செய்து அனுப்பினார் ஷமி. பவர்பிளேவுக்குள் மொயின் அலியையும் அனுப்பி வைத்தார் அல்ஜாரி ஜோசப். வழக்கமாக 10 ரன்கள் எடுப்பதற்குள் அவுட்டாகி வந்த ருதுராஜ் நேற்றைய தினம் தெம்புடன் விளையாடினார். ஆனால் அவருக்கு பக்கபலமாக பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாததால் பவர்பிளேவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சென்னை.

அதன் பின்னர் ருதுராஜ் - ராயுடு ஜோடி இணைந்தது. மேற்கொண்டு விக்கெட் விழ அனுமதிக்கக் கூடாது என கவனமாக விளையாடியது.

10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது சென்னை.

11வது ஓவரை அல்ஜாரியும், 12 வது ஓவரை யாஷும் வீச இதுதான் உனக்கான நேரம்; போட்டுத்தாக்கு என ருதுராஜ் மற்றும் ராயுடு ஜோடி வெளுத்துவங்கியது. இந்த இரு ஓவர்களில் மட்டும் 34 ரன்கள் கிடைக்க சென்னை அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

ருதுராஜ் அப்போதே அரை சதமடித்து விட்டார். வா மச்சான் வா மச்சான், எவ்வளவு நாள் ஆச்சு உன்னை இந்த மாறி பாத்து என சென்னை ரசிகர்கள் மீம்ஸில் கொண்டாடித் தீர்த்தார்கள்.

14 ஓவர்கள் முடிவில் 124 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி. அப்போது ஸ்கோர் 180 நிச்சயம், 200 லட்சியம் என சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆசை பிறந்தது.

அந்த சமயத்தில் பந்தை மீண்டும் அல்ஜாரி கையில் கொடுத்தார் ரஷீத். 15 வது ஓவரில் ராயுடு விக்கெட்டை வீழ்த்தி ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஷாக் தந்தார் அல்ஜாரி.

16வது ஓவரை ஷமி வீசினார் - 4 ரன்கள் தான்.

IPL 2022
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

17வது ஓவரை வீசிய யாஷ் தயாள் ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தி ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்தார். 48 பந்துகளில் ஐந்து பௌண்டரிகள், ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறினார்.

மூன்று ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை. இதனால் ரன்ரேட் சராமரியாக குறைந்ததது. 19வது ஓவரை தைரியமாக சுழற்பந்து வீச்சாளரும் கேப்டனுமான ரஷீத் கான் வீசினார். வெறும் ஆறு ரன்கள் மட்டும் கொடுத்தார்.

கடைசி ஓவரில் ஜடேஜா அடித்த அட்டகாசமான இரு சிக்ஸர்களால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்ச்சியாக இரு போட்டிகளில் விக்கெட்டுகள் ஏதுமின்றி வெறுங்கையோடு திரும்பினார் ரஷீத் கான்.

சென்னை அணி நம்பிக்கையுடன் பந்து வீச தொடங்கியது. முதல் ஓவரிலேயே சுப்மன் கில்லை வீழ்த்தி மாஸ் ஓபனிங் கொடுத்தார் முகேஷ் சவுதரி. தான் சந்தித்த முதல் பந்தியிலே கோல்டன் டக் அவுட் ஆனார் சுப்மன் கில்.

இரண்டாவது ஓவரிலேயே சென்னைக்கு அதிர்ச்சி தந்துவிட்டார் சென்னை பந்து வீச்சாளர் மஹேஷ் தீக்ஷண. அவசரப்பட்டு விஜய் சங்கரின் கதையை இரண்டே பந்துகளில் முடித்துவிட்டார்.

தோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார் 3டி பிளேயர் விஜய் சங்கர்.

அப்போது இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது குஜராத். தீக்ஷண தனது அடுத்த ஓவரில் அபினவ் மனோகர் கதையை முடிக்க; பவர்பிளேவுக்கு பின்னர் பந்து வீச வந்த ஜடேஜாவோ விருத்திமான் சாஹா கதையை முடித்து வைத்தார்.

இப்படித்தான் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது குஜராத்.

11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது, அடுத்த 9 ஓவர்களில் 102 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலை.

12வது ஓவரை ஜடேஜா வீசினார். இரண்டு சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி வைத்தார் மில்லர். 28 பந்துகளில் அரை சதம் கடந்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுத்தார். குஜராத் மெல்ல மீளத் துவங்கியது.

ஆனால் அடுத்த ஓவரை வீசிய டுவைன் பிராவோ ராகுல் தீவாத்யாவை அலேக்காக தூக்கி வெளியே போட்டது மட்டுமின்றி விக்கெட் மெய்டனாகவும் வீசினார். அப்போது 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்து குஜராத்.

மில்லருடன் ரஷீத் கான் ஜோடி சேர்ந்தார். கவனமாக விளையாடியது இந்த ஜோடி. கடைசி மூன்று ஓவர்களில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைபப்ட்டது.

IPL 2022
கௌதம் அதானி வெற்றிக் கதை : கடத்தப்பட்ட பணையக் கைதி அம்பானியை முந்திய வரலாறு

அப்போது 18வது ஓவரை வீச ஜோர்டான் வந்தார். அந்த ஒத்த ஓவரில் மொத்த ஆட்டமும் தலைகீழானது.

மூன்று சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி வைத்து வெறியாட்டம் ஆடினார் குஜராத் கேப்டன் ரஷீத் கான். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் எடுத்து குஜராத். ஆறே பந்துகளில் குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு எகிறியது. கிட்டத்தட்ட 37 ஓவர்கள் இந்த ஆட்டத்தை கையில் வைத்திருந்த சென்னை அணி ஆறே பந்துகளில் சடாரென சரிந்தது.

எனினும் 19வது ஓவரை வீசிய பிராவோ 10 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவை 13 ரன்கள். ஜடேஜா மீண்டும் ஜோர்டான் கையில் பந்தை கொடுத்தார். முதல் இரு பந்துகளில் ரன்கள் ஏதும் இல்லை. மூன்றாவது பந்தில் சிக்ஸர் வைத்தார் மில்லர். நான்காவது பந்து நோபால், ஃப்ரீ ஹிட்டில் ஒரு பௌண்டரி வைத்தார் மில்லர்.

ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் ஓடி எடுத்தார்.

51 பந்துகளில் எட்டு பௌண்டரி, ஆறு சிக்ஸர்களுடன் 94 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறவைத்தார் மில்லர்.

ஐபிஎல் வரலாற்றிலேயே ஐந்து அல்லது அதற்கு கீழ் வரிசையில் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்த ஆட்டத்தின் மூலம் நான்காவது இடத்தையும் தனதாக்கியிருக்கிறார் மில்லர்.

ஏற்கனவே ஒருமுறை கீழ் வரிசையில் களமிறங்கி 2013-ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக சதமடித்திருந்தார் மில்லர். இப்படி கீழ் மிடில் ஆர்டரில் இறங்கி கலக்கல் ஆட்டம் ஆடுவதால் தான் அவர் மில்லர் - தி கில்லர்.

நேற்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது குஜராத், இது ஆறு போட்டிகளில் அந்த அணிக்கு கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.

சென்னை அணிக்கு ஆறு போட்டிகளில் ஐந்தாவது தோல்வி. இப்போதைய சூழலில் சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பே கிடைக்காமல் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

நேற்றைய தினம் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தியது ஹைதரபாத். சில நாட்களுக்கு முன் கடைசி இடத்தில் இருந்த ஹைதரபாத் சுதாரித்துக் கொண்டதால் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வென்று பாயின்ட்ஸ் டேபிளில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறு போட்டிகளில் 10 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது குஜராத். அந்த அணியின் பிளே வாய்ப்பு உறுதியாக இன்னும் 3,4 வெற்றிகளே தேவை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com