அப்போது 88 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்திருந்தது ஆர்சிபி. வெற்றிக்கு இன்னும் 81 ரன்கள் எடுக்க வேண்டும். அதுவும் வெறும் ஏழு ஓவர்களில்.
அது அவ்வளவுதான்பா முடிஞ்சது. அணுவா அணுவா ஃபீல்டிங்ல இறுக்கிப் பிடிச்சு 120 -130 ரன்லயே சுருட்டப்போறாங்க. போல்ட், அஷ்வின், சாஹல்னு டாப் இன்டர்நெஷனல் பௌலர்ஸ் எல்லாம் பெங்களூரு அணியின் லோயர் ஆர்டரை வச்சு செய்யப்போறாங்க, மேட்சை ஆஃப் பண்ணிட்டு பரோட்டா சாப்பிட போலாம் என நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
இருப்பா, பெங்களூர் இன்னா கதியாவதுனு பார்த்துட்டு போவோம்னு நண்பன் சொல்ல, அதுவும் சரிதான் பார்ப்போம்னு மீண்டும் குத்தவைத்து உட்கார்ந்தேன்.
விராட் கோலி, டு பிளசிஸ், ரூதர்ஃபோர்டு என முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாருமே பெவிலியனில் உட்கார்ந்து மேட்ச்சில் எதாவது தேறுமா என பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆர்சிபி அணிக்காக களத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஷபாஸ் அஹமட் இருந்தனர். மூன்று ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கன பந்துவீச்சை கடைபிடித்த ராஜஸ்தான் பந்துவீச்சாளர் அஷ்வின் ஆட்டத்தின் 14வது ஓவரை வீச வந்தார்.
முதல் இரு பந்துகளில் இரண்டு ரன்கள். மூன்றாவது பந்தை கார்த்திக்குக்கு வீசினார் அஷ்வின். அந்த பந்தை பௌண்டரிக்கு விரட்டினார் தினேஷ் கார்த்திக். தவிர, அது ஒரு நோ பாலும் கூட.
கண்ணா லட்டு திண்ண ஆசையானு, கிடைத்த ஃப்ரீஹிட்டில் ஒரு சிக்ஸர் வைத்தார் கார்த்திக். அஷ்வின் சுதரிப்பதற்குள் அடுத்த் பந்தையும் பௌண்டரிக்கு விரட்டினார்.
அதாவது கண்ணை மூடி திறப்பதற்குள் 2 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தது பெங்களூரு. இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அஷ்வின் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தையும் பௌண்டரிக்கு விளாசினார் கார்த்திக்.
அஷ்வினின் அந்த ஒரு ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுத்தது பெங்களூரு. ஆட்டம் இப்போ பெங்களூரு கைக்கு திரும்பியது. அதன் பின்னர் நேர்த்தியாக விளையாடிய நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பிளே ஆஃப் வாய்ப்புக்கு நானும் ரெடி என கூவியது.
23 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக்குக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
நேற்றைய போட்டி முழுக்க முழுக்க ஒரு ரோலர் ஹோஸ்டர் போல அமைந்தது. டாஸ் வென்று பெங்களூரு பௌலிங்கை தேர்ந்தெடுத்தது.
கச்சிதமான பந்துவீச்சால் ராஜஸ்தான் வீரர்களுக்கு குடைச்சல் கொடுத்தது பெங்களூரு. ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் மந்தமாகவே இருந்தது. 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.
ஆனால் அதன் பின்னர் டாப் கியர் போட்டு வேகமாக ரன்களை குவிக்க தொடங்கியது. கடைசி இரு ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் எடுத்து மிரட்டியது.
அதன் பின்னர் சேஸிங்கை தொடங்கிய பெங்களூரு பவர்பிளேவில் சிறப்பாக விளையாடியது. 55 ரன்களுக்குத் தான் முதல் விக்கெட் விழுந்தது. ஆனால் அதன்பின்னர் சுமார் 33 ரன்கள் சேர்ப்பதற்குள் மேலும் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் ஐந்து பந்துகள் மீதம் வைத்து வென்றது ஆர்சிபி.
ஆட்டத்தின்போது வெற்றி வாய்ப்பு மாறி மாறிவந்த நிலையில் பெங்களூரு அணி ராஜஸ்தானுக்கு இந்த ஐபிஎல் சீசனில் முதல் தோல்வியை பரிசாக தந்துள்ளது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே இன்னும் தோல்வியடையாமல் இருக்கும் ஒரே அணி என்பது தெளிவு.