சன் ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்ட்டத்தில்
ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் பாயின்டஸ் டேபிளில் கடைசி இடத்தில் இருந்த ஹைதரபாத் அணி தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.
ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணிக்கு ஒவ்வொரு வீரர் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார்.
நேற்றைய மேட்சை பொறுத்தவரையில் டாஸ் வென்று சேஸிங்கை கையில் எடுத்தது ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா.
ஆரோன் பின்ச் மற்றும் வெங்கடேஷ் அய்யர் தொடக்கவீரார்களாக களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அதில் ஒரு சிக்ஸ்ர் வைத்த ஃபின்ச் மார்கோ ஜென்சன் வீசிய இரண்டாவது ஓவரிலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை நடராஜன் வீசினார். இது மிகவும் திருப்புமுனை வாய்ந்த ஓவராக அமைந்தது, தான் வீசிய முதல் பந்திலேயே வெங்கடேஷ் அய்யரின் ஸ்டம்புகளை பதம்பார்த்தார் நடராஜன்.
இதையடுத்து களத்தில் புகுந்த சுனில் நரேன், எடுத்த எடுப்பிலேயே ஒரு சிக்ஸர் வைத்தார், ஆனால் அவரை தனது அடுத்த பந்திலேயே வீழ்த்தினார் நடராஜன்.
மூன்றே பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் கொல்கத்தா சிக்கலில் மாட்டியது. தவிர, அந்த ஓவரில் சுனில் நரைன் அடித்த ஒரு சிக்ஸரை தவிர வேறு ரன்கள் எதையும் கொல்கத்தா வீரர்கள் எடுக்கவில்லை.
பவர்பிலேயே முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் கேப்டன் ஷ்ரேயாஸ் மற்றும் நிதீஷ் ராணா அணியை மீட்டெடுக்கும் விதமாக விளையாடினர். ஆனால் பத்தாவது ஓவரின் கடைசி பந்தின் உம்ரான் மாலிக் வீசிய பந்தில் காலியானார் கேப்டன் ஷ்ரேயாஸ். அப்போது 70 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது கொல்கத்தா.
13-வது ஓவரில் உம்ரான் மாலிக் வீசிய பந்தில் ஷெல்டன் ஜாக்சன் கொடுத்த கேட்சை ஃபைன் லெக் திசையில் இருந்த நடராஜன் கச்சிதமாக பிடித்தார்.
16 ஓவர்கள் முடிவில் 122 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது புவனேஷ்வர் குமார் 17வது ஓவரை வீச வந்தார். இரண்டு பௌண்டரி ஒரு சிக்ஸர் என 16 ரன்களை விளாசினார் ரஸ்ஸல்.
18வது ஓவரை வீசிய நடராஜன் நிதீஷ் ராணா விக்கெட்டை வீழ்த்தி 12 ரன்களை கொடுத்தார். கடைசி ஓவரில் ரஸ்ஸல் ஆடிய அதிரடி ஆட்டத்தால் 175 ரன்கள் குவித்தது கொல்கத்தா. 25 பந்துகளில் 4 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள் உதவியுடன் 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ரஸ்ஸல்.
ஹைதரபாத் அணி சேஸிங்கில் பவர்பிளேவில் தொடக்க வீரர்கள் இருவரையும் இழந்தது, ஆனால் ராகுல் திரிபாதி தனி ஒரு ஆளாக சிக்கிய பௌலர்களை எல்லாம் சிதைத்தார். அவருக்கு உறுதுணையாக மர்க்ரம் விளையாடினார்.
10 ஓவர்களில் ஸ்கோர் 95; 15 ஓவர்களில் 140 என எகிறியது, 37 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள், நான்கு பௌண்டரிகள் என பேயாட்டம் ஆடிய திரிபாதி 71 ரன்களில் அவுட் ஆனார்.
அவர் கொஞ்சம் விட்டுவைத்த வேலையை மர்க்ரம் முடித்துவைத்தார், கம்மின்ஸ் வீசிய 18 வது ஓவரில் ஒரு பௌண்டரி, அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் விளாசி ஹைதராபாத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஆட்டநாயகனாக ராகுல் திரிபாதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹாட்ரிக் வெற்றிபெற்ற ஹைதரபாத் பாயின்டஸ் டேபிளில் ஏழாமிடத்துக்கு முன்னேறியது. செம அடி வாங்கிய கொல்கத்தா ரன்ரேட் சரிந்து தற்போது நான்காமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது,
வரும் ஞாயிற்றுக் கிழமை ஆட்டத்தில் பஞ்சாபை ஹைதரபாத் வீழ்த்தினால் பாயின்டஸ் டேபிளில் முதல் நான்கு இடத்துக்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது.
ஐபிஎல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த சீசனில் அதற்கான திரியை கொளுத்திப் போட்டிருக்கிறது சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com