மூன்று பந்தில் எதிரணி 13 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் சூழலில் பஞ்சாப் அணியின் ஒடியன் ஸ்மித் குஜராத் அணியின் மில்லருக்கு பந்து வீசினார்.
மில்லர் அடித்த பந்து ஓடியன் ஸ்மித் கைக்கு வந்தது. பந்தை பத்திரமாக தேக்கினார் ஸ்மித். அந்த மைக்ரோ நொடியில் குஜராத் அணியின் வெற்றி கிட்டத்தட்ட கானல் நீரானது. ஏனெனில் கடைசி இரு பந்துகளில் 13 ரன்கள் அடிப்பது, பௌலர் தவறு செய்யவில்லை எனில் சாத்தியமில்லை.
ஆனால், அங்கே ஒரு ட்விஸ்ட்.
ஓடியன் ஸ்மித் மில்லர் அடித்த பந்தை தேக்கினாலும், பௌலர் முனையில் இருந்த ராகுல் தீவாத்யா கிரீஸை விட்டு சற்று தள்ளி இருந்ததை கண்டு, அவரை ரன் அவுட் செய்யும் முனைப்பில் பந்தை எறிந்தார் ஸ்மித்.
ஆனால் பந்து ஓவர் த்ரோ ஆக, மில்லரும் தீவாத்யாவும் ஓடி ஒரு ரன் எடுத்தனர்.
அதன் பின்னர் கடைசி இரு பந்துகளில் இரு சிக்ஸர்கள் வைத்தால் மட்டுமே வெற்றி எனும் நிலையில், இரு அட்டகாசமான சிக்ஸர்களை விளாசி குஜராத் அணியை வெற்றி பெறவைத்தார் தீவாத்யா.
ஐபிஎல் வரலாற்றில் கடைசி இரு பந்துகளில் எதிரணியை 12 ரன்கள் அடிக்கவிட்டு தோற்றது பஞ்சாப் மட்டும் தான் . அதுவும் ஒரு முறையல்ல இரு முறை.
முன்னதாக தோனி மட்டுமே கடைசி இரு பந்துகளில் இரு சிக்ஸர்கள் வைத்து அணியை வெற்றி பெறவைத்த ஒரே நபராக இருந்தார். தற்போது அவருடன் தீவாத்யா இணைந்துகொண்டார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸிங்கில் 20வது ஓவரின் கடைசி பந்தில் ஐந்து அல்லது ஆறு ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் எனும் சூழலில், சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தவர்கள் - பிராவோ, தோனி, கே.எஸ்.பரத் மற்றும் ராகுல் தீவாத்யா என இந்த நான்கு பேர் மட்டும்தான்.
முன்னதாக நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. வழக்கம்போல பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் சொதப்ப, பேர்ஸ்டோவும் பெரிய ரன்கள் ஏதும் அடிக்காமல் பவர்பிளேவிலேயே நடையை கட்டினார்.
முதல் ஏழு ஓவர்கள் முடிவில் இரு விக்கெட்டுகள் இழப்புக்கு 49 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப். ஆனால் அதன் பின்னர் தவான் உடன் இணைந்த லயம் லிவிங்ஸ்டன் பந்தை நாலாபுறமும் விளாசினார்.
தவான் 35 ரன்களில் வீழ்ந்தாலும் ரன்கள் மளமளவென உயர்ந்தன. குறிப்பாக ராகுல் தீவாத்யா வீசிய 13 வது ஓவரை லிவிங்ஸ்டன் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஜோடி பிரித்து மேய்ந்தது. அந்த ஒரு ஓவரில் மட்டும் 24 ரன்கள் எடுத்தனர். 21 பந்தில் லீவிங்ஸ்டன் அரைசதம் விளாசினார்.
ஷமி வீசிய ஓவரில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் வைத்து அசத்தினார்.
15 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். ஷாருக் கான் மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் யாரா இருந்தாலும் வெளுப்பேன் எனும் மூடில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
200 நிச்சயம், 225 லட்சியம் என டார்கெட் குறித்து கணக்கு போட ஆரம்பித்தான் பஞ்சாப் ரசிகன்.
ஆனால் 16வது ஓவரை வீசிய ரஷீத் கான் Surprise என இந்த இருவரின் விக்கெட்டையை வாரித் தின்றுவிட்டு சென்றார்.
கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.
குஜராத் அணி சேஸிங்கில் ஆரம்பம் முதலே நேர்த்தியாக பக்கா பிளானுடன் விளையாடியது.
இரண்டாவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் இணை மற்றும் ஷுப்மன் கில் இணை அருமையாக விளையாடியது. குறிப்பாக தொடக்க வீரர் கில் மாஸ் காட்டினார்.
எந்த ஒரு புள்ளியிலும் ஆட்டம் பஞ்சாப் பக்கம் சாயாமல் இந்த இணை பார்த்துக்கொண்டது. ஆட்டத்தின் 15-வது ஓவரில் தமிழ் பையன் சுதர்சன் அவுட் ஆனார்.
எனினும் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா, ஷுப்மன் கில் உடன் இணைந்து நொறுக்கினார். கில் சதத்தை நோக்கி நெருங்கிய வேளையில் ரபாடா பந்தில் வீழ்ந்தார். அவர் 59 பந்துகளில் 96 ரன்கள் எடுத்திருந்தார்.
கடைசி ஓவரில் 19 ரன்கள் அடிக்க வேண்டும் எனும் நிலையில் இருந்தது குஜராத். முதல் பந்து வைடு, மற்றும் ரன் அவுட், இரண்டாவது பந்தில் ஒரு ரன், மூன்றாவது பந்தில் பௌண்டரி என வெற்றிவாய்ப்பு ரோலர் கோஸ்டராய் இரு அணிகளுக்கும் இருந்த நிலையில், கடைசி இரு பந்துகளில் மேட்சை கச்சிதமாக முடித்தார் ராகுல் தீவாத்யா.
ராகுல் தீவாத்யா ஆட்டத்துக்கு ஹாட்ஸ் ஆஃப் சொன்னார் குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக்.
இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஒரு தோல்வி கூட சந்திக்காத ஒரே அணி குஜராத் லயன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.