மூவர் அரைசதம் கடந்தும், 212 ரன்கள் இலக்கு வைத்தும், கடைசி பந்து வரை போராடி நேற்றைய போட்டியில் தோற்றது பெங்களூரு அணி.
ஐபிஎல் போட்டிகளுக்கே உரித்தான பரபரப்பும் சுவாரஸ்யமும் நேற்றைய ஆட்டத்தில் சற்று கூடுதலாகவே இருந்தது. யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற நிலை தான் கடைசி ஆறு பந்துகளில்...
சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஹிட் விக்கெட் ஆன பதோனி, கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்கள் என இயற்கை கூட ஆர் சி பி பக்கம் வெற்றி காற்றை திருப்பி விட, ஒரு நொடியில் வெற்றியை தட்டி பறித்துவிட்டது லக்னோ.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் எட்டியுள்ளது.
ஐபிஎல் 2023ன் 15வது போட்டியில், நேற்று பெங்களூரு லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பவுலிங்கை தேர்வு செய்ய, களமிறங்கிய கேப்டன் டுப்ளெசி - கோலி கூட்டணி, ஆர்சிபி அணிக்கு மிக வலுவான தொடக்கத்தை கொடுத்தது.
பவுண்டரிகளும் சிக்சர்களும், ஒரு பக்கம் பறக்க, சிங்கிள்களுக்கும் இரட்டைகளுக்கும் கூட பஞ்சம் இல்லை. 20 ஓவர்கள் முடிவில், 212 ரன்கள் எடுத்திருந்த ஆர்சிபி, 2 விக்கெட்களே இழந்திருந்தது. கோலி 61 ரன்கள், டுப்ளெசி, மேக்ஸ்வெல் முறையே 79, 59 ரன்கள் எடுத்திருந்தனர்.
ஐபிஎல்லில் 200க்கும் அதிகமான ரன் இலக்கு தற்போது இயல்பென்றே ஆகிவிட்டாலும், இரண்டாவதாக களமிறங்கும் அணிகளுக்கு அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது.
அந்த அழுத்தத்தின் காரணமாகவே முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார் லக்னோ தொடக்க வீரர் மேயர்ஸ். உடன் களமிறங்கிய கே எல் ராகுலும் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்த, மறுப்பக்கம் விக்கெட்கள் சரிந்தன.
தீபக் ஹுட்டா 9 ரன்கள், குருனால் பாண்டியா பூஜ்ஜியம், கேப்டன் ராகுல் 18 என சொற்ப ரன்களில் வெளியேறினர். 23-3 என்றிருந்த நேரத்தில் வந்த ஸ்டோயினிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 30 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.
கரண் சர்மா ஸ்டோயினிஸ் விக்கெட்டை எடுக்க, போட்டியை தன் வசப்படுத்தியது ஆர் சி பி.
அல்லது அப்படித்தான் நாமும் பெங்களூரு அணி போல நினைத்துக்கொண்டிருந்தோம்.
பின்னர் இணைந்தது நிகோலஸ் பூரன், மற்றும் இம்பாக்ட் பிளேயர் பதோனி ஜோடி.
7 சிக்சர்கள் 4 பவுண்டரிகளை விளாசிய பூரன், தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்கேற்றவாறு ஸ்ட்ரைக் ரொடேட் செய்தார் பதோனி. 15 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அதிவேக அரைசதம் கடந்தார்.
மறுப்பக்கம் பதோபியும் தனது பங்கை சரிவரச் செய்ய, 18 பந்துகளில் 24 ரன்கள் என, எளிதானது இலக்கு. பூரன் விக்கெட்டை எடுத்த ஆர் சி பிக்கு, பதோனி தானாக ஹிட் விக்கெட் ஆகி வெற்றி நம்பிக்கையை அளித்தார்.
கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தபோது, ஹர்ஷல் படேலின் சிறப்பான பந்துவீச்சில், லக்னோ இரண்டு விக்கெட்களை பறிக்கொடுத்தது. 1 பந்தில் 1 ரன் வேண்டும் என்ற நிலையில், மேன்கேட் செய்ய கிடைத்த வாய்ப்பையும் இழந்தார் ஹர்ஷல் படேல்.
நடுவர் அந்த பந்தை டெட் பால் என அறிவிக்க, மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில் ஒரு ரன்னை எடுத்து வென்றது லக்னோ.
பேட்டிங்கிற்கு ஏதுவான சின்னசாமி மைதானத்தில், வலுவான நிலையில் இருந்த கோலி டுப்ளெசி இணை, இடையில் மந்தமடையாமல், இன்னும் சில ரன்களை குவித்திருக்கலாம் என்கிறது வல்லுநர்கள் வட்டாரம்.
ஸ்டோயினிஸ் களமிறங்கிய சில நிமிடங்களிலேயே, அவர் தூக்கி கொடுத்த கேட்சை தவறவிட்டார் பெங்களூரு வீரர் சிராஜ்.
ஆர் சி பியின் சுழற்பந்து வீச்சை சர்வ சாதாரணமாக கையாண்டனர் லக்னோ பேட்டர்கள். கடைசி நேரத்தில், எப்படியாவது வெற்றி பெற வேண்டுமே என்ற பதற்றத்தில், மூத்த வீரர்கள் தலையில் ஏற்றிக்கொண்ட அழுத்தம், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல் ஆகியோர் ரன் அவுட்டை தவற விட காரணமாக அமைந்தது.
இப்படியாக, கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டாமல் போனது ஆர் சி பிக்கு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust