நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, யூடியூபர்கள் கோபி & சுதாகர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சமீபத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், இவை போலியானது என்றும் இந்த பட்டத்திற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது.
ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்ட இந்த விழாவில் இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி - சுதாகர் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் வடிவேலு வராத நிலையில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் அவரின் வீட்டிற்கே சென்று கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, யூடியூபர் கோபி & சுதாகர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்ததாவது:
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
கடந்த நவம்பர் மாதம் அந்த அமைப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை வாடகைக்கு கேட்டது.
ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பரிந்துரைத்தது போன்ற கடிதத்துடன் அந்த அமைப்பு மீண்டும் அணுகியது.
விருது நிகழ்ச்சி என்று தான் கூறினார்களே தவிர கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா என்று எங்கும் குறிப்பிடவில்லை.
எனவே, அவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
“இனி மிக முக்கியமான தனியார் நிகழ்ச்சியை தவிர பிற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம், இதுபோன்ற கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கும் நிகழ்வை இதற்கு முன்பும் நடத்தியுள்ளது.
நடிகர்கள் ராகவா லாரன்ஸ், யோகிபாபு, இசையமைப்பாளர் டி. இமான் போன்ற பிரபலங்களுக்கு இந்த ஆணையம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இது தற்போது சர்ச்சையில் சிக்கியதற்கு முக்கிய காரணம், அண்ணா பல்கலைக்கழகத்தில் விருது வழங்கப்பட்டதுதான்.
அண்ணா பல்கலைக்கழகமே இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியதுபோன்ற பிம்பத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது. இந்நிலையில், தங்களுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அந்த நபர்கள் இதற்கு முன்பு இது போன்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தனக்கும் அந்த நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஆடிட்டோரியத்திற்கு அனுமதி கேட்டு தான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எந்த பரிந்துரை கடிதமும் வழங்கவில்லை எனவும் தனது பெயரில் போலியாக கடிதத்தை வழங்கியிருந்தால் சட்ட ரீதியாக பார்த்துக்கொள்வேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இப்படி போலியான பட்டத்தை வழங்க ஏன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பணத்தை வசூலித்து கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியிருக்கலாமோ என்ற சந்தேகம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறியிருந்தார்.
ஆனால் விருது பெற்றவர்களில் ஒருவரான ஈரோடு மகேஷ் பிபிசிக்கு அளித்த விளக்கத்தில்,
அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக விருது கொடுப்பதாக கூறவில்லை, மாறாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று மட்டும்தான் கூறியிருந்தனர்.
கௌரவ டாக்டர் பட்டத்திற்காக தன்னிடம் எந்த தொகையையும் அவர்கள் கேட்கவில்லை என்று ஈரோடு மகேஷ் கூறியிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust