தமிழக கோயில்களில் கடந்த காலங்களில் சாமி சிலைகள் திருடப்பட்டது குறித்துக் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சிலை தடுப்பு பிரிவினரால் இதற்கான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாயமான சிலைகளை வெளிநாடுகளிலிருந்து மீட்பதற்கான முயற்சி எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு உத்தரவிட்டார். சிலைகளை மீட்பதற்கான தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. திருடப்பட்ட பல சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலும், கலைப்பொருள் சேகரிப்பாளர்களிடமும் இருக்கும் தகவல்கள் காவல்துறைக்குத் தெரியவந்தது. அந்த சிலைகள் தமிழக கோயில்களிலிருந்து திருடப்பட்டவை என்பதை சட்டப்படி நிரூபித்து சிலைகளை இந்தியாவிற்கு மீட்டு வர தமிழக சிலை திருட்டு மற்றும் தடுப்பு பிரிவு முயற்சி செய்து வந்தது. 10 புராதன உலோக மற்றும் கற்சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் அருங்காட்சியகங்களிலிருந்து மீட்கப்பட்டு அவை டெல்லியில் உள்ள இந்திய தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் சிலைகளை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் எல்.முருகன், சிலை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தென்மேற்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது. இதில் உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கைக்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு. " வெள்ள காலத்தில் மக்களை வெளியேற்றும்போது தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மீட்புப் பணி நடவடிக்கைகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கக் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை மற்றும் வெள்ளக்கால்களில் ஏற்படும் தொற்று நோய் குறித்து சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். வெள்ள நீரை வெளியேற்றும் பம்பு செட்டுகள் மற்றும் பிற உபகரணங்களின் செயல்பாடுகள் முன்னரே பரிசோதித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதலாக நீரைத் தேக்கி வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்கி, வெள்ள அபாயத்தைத் தடுக்க வேண்டும். அணைக்கட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். பேரிடர்களின் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்." என்றார்.
கர்நாடக மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. 4-வது உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. 4-வது உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் 3 கட்சிகளின் வேட்பாளர்களில் யார் தங்களது மனுக்களைத் திரும்பப் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 4-வது உறுப்பினா் வெற்றி பெற பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் பலம் இல்லை. இந்நிலையில், நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவை, ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.சி.க்களான பி.எம்.பாரூக், டி.ஏ.ஷரவணா மற்றும் பிரமுகர்கள் சந்தித்துப் பேசினர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ம் தேதி பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில், ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆளும் தாராளவாதக் கட்சியை, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வென்றது. தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராகப் பதவியேற்றார். இந்நிலையில் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றனர். 30 பதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான அமைச்சரவையில் 30 பேரில் 13 பேர் பெண்கள். ஆஸ்திரேலிய வரலாற்றில் அமைச்சரவையில் பெண்கள் அதிக அளவில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. மேலும், முதல் முறையாக 2 முஸ்லிம்களும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் 7 பெண்கள் மட்டுமே மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust