நித்யானந்தா : சூரியனையே உதிக்க விடாமல் காக்க வைத்த இவருக்கு இப்போது என்ன ஆனது?

ஒருகட்டத்தில் ராஜசேகரன் தன் பெயரை 'நித்யானந்தா' என மாற்றிக் கொண்டு ஆன்மிகத்தில் மேலும் தீவிரம் காட்டினார். காலப் போக்கில் நித்யானந்த தியான பீடம் என்கிற பெயரில் தனக்கென சொந்தமாக ஆசிரமங்களைத் தொடங்கினார்.
நித்யானந்தா
நித்யானந்தாTwitter
Published on

ஆன்மிகம் ஒரு வரையறைக்குள் அடங்காத விஷயம். ஒவ்வொரு தனி மனிதருக்கும் அது வேறுபடலாம். சிலர் உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், சிலரோ அருவத்திலும், சிலர் நன்னெறிகளிலும், சிலர் சாஸ்திர சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை வைத்து தங்கள் போக்கில் இறைவனை வழிபடுகிறார்கள். மற்றொரு தரப்பினரோ கடவுளே இல்லை என வாதிடுகிறார்கள்.

இப்படிப் பல வழிகள் இருப்பது நல்லது தான், ஆனால் இந்த சலசலப்புகளைப் பயன்படுத்தி சிலர் 'நான் கடவுள்' என்கிறார்கள். அப்படிக் கூறியவர்களையும் இந்த உலகம் கொண்டாடியுள்ளது. அதில் சிலர் பல தவறான காரியங்களில் ஈடுபட்டு பிற்காலத்தில் அம்பலப்பட்டுப் போனதையும் நாம் பார்த்திருக்கிறோம். படித்திருக்கிறோம்.

அப்படி ஒரு காலத்தில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க சாமியார்களில் ஒருவராக ஜிகு ஜிகுவென வலம் வந்த நித்யானந்தா, இன்று இந்திய அரசு மற்றும் காவல்துறைக்கு பயந்து இருக்கும் இடம் தெரியாமல் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

நித்யானந்தா
நித்யானந்தாTwitter

யார் இந்த நித்யானந்தா?

மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் நித்யானந்தா, தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவர்.

1978 ஜனவரி 1ஆம் தேதியன்று (இந்த தேதியிலேயே சில சர்ச்சைகள் இருக்கின்றன) அருணாசலம் - லோகநாயகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண மடத்தில் கல்வி கற்கத் துவங்கி, 1992ம் ஆண்டில் தன் பள்ளிப் படிப்பை நித்யானந்தா நிறைவு செய்ததாக பிபிசி வலைதளம் கூறுகிறது.

தனக்கு 10 வயது இருக்கும் போதே, திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமுலையம்மன் சந்நிதியில், அவருக்கு ஶ்ரீ எந்திரத்தின் தரிசனம் கிடைத்ததாகவும், அதை வீட்டில் வந்து வரைந்த போது தன் குரு குப்பம்மாள் பார்த்து வியந்து, ஶ்ரீ எந்திரத்தின் நுணுக்கங்களை விளக்கியதாகவும் காணொளி ஒன்றில் அவரே கூறியுள்ளார் நித்யானந்தா.

இளம் வயதிலேயே ஆன்மிகத்தின் மீது நாட்டம் கொண்ட ராஜசேகரன், 12 வயதுக்குள்ளேயே ஞானமடைந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நித்யானந்தா
தாய்லாந்து விநோதம்: இவரது சிறுநீர் நோய்களை குணமாக்குமென மக்கள் நம்புகின்றனர் - யார் இவர்?

ஒருகட்டத்தில் ராஜசேகரன் தன் பெயரை 'நித்யானந்தா' என மாற்றிக் கொண்டு ஆன்மிகத்தில் மேலும் தீவிரம் காட்டினார். காலப் போக்கில் நித்யானந்த தியான பீடம் என்கிற பெயரில் தனக்கென சொந்தமாக ஆசிரமங்களைத் தொடங்கினார்.

கர்நாடகா மாநிலத்தில் பிடதியில் உள்ள அவரது ஆசிரமம், தலைமையகமாகச் செயல்பட்டு வந்தது. இந்தியாவைத் தாண்டி பல்வேறு உலக நாடுகளிலும் தன் ஆசிரமங்களைத் தொடங்கி லட்சக் கணக்கில் பக்தர்களை ஈர்த்தார் நித்யானந்தா.

அன்றைய தேதிக்கு சந்தையில் இருக்கும் அப்டேடட் டெக்னாலஜிகளைக் கொண்டு, தன் ஆசிரமத்தில் பிரசங்கம் செய்வார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு டெக்னாலஜி பிரியர்.

நித்யானந்தா
நித்யானந்தாTwitter

இணைய பிரபலம்

குரங்குகள் உட்பட பல விலங்கினங்களுக்குச் சமஸ்கிருத, தமிழ் மொழிகளைக் கற்றுக்கொடுக்க முடியும் என்று இவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆராய்ச்சியும் செய்வதாகக் கூறி இணைய உலகை தன் பக்கம் திருப்பினார்.

உலகப் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் E = MC2 சமன்பாட்டை எதிர்த்து தன் இஷ்டத்துக்கு எதை எதையோ ஒப்பிட்டு அது தவறான கோட்பாடு என்றார். ஆன்மிக குரு தன் போக்கில் அறிவியல் பேசுவதைப் பார்த்து இணையவாசிகள் கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கினர்.

பெங்களூருவில் சூரியனை நாற்பது நிமிடங்கள் உதிக்கவிடாமல் செய்ததாக அவர் பேசியது சமூக வலைத்தளங்களில், அவரை ஒரு டிரோல் மெட்டீரியலாகவே காட்டியது.

இதுபோக, ஆவிகளோடு நட்பாக இருப்பதாகவும், பல கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததாகவும், கல்வி கற்கவே அவர்கள் பூமிக்கு வந்ததாகவும் நித்யானந்தா கூறியது எல்லாம் அவரை இணைய உலகில் பிரபலமாக்கியது. தீவிர ஆன்மிக உலகில் அவரை கோமாளியாக்கியது.

நித்யானந்தா
பீகார்: 60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள் - ஓர் ஆச்சர்ய திருட்டு
நித்யானந்தா
நித்யானந்தாTwitter

படுக்கையறை காட்சிகள்

2010ஆம் ஆண்டில் நித்தியானந்தா ஒரு பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி வெளியானது. இந்திய அரசின் தடயவியல் ஆய்வகத்தில் அந்த சிடி உண்மையானது எனக் கண்டறியப்பட்டது. ஆனால் நித்யானந்தாவின் ஆசிரமம் இந்தியாவில் நடத்தப்பட்ட விசாரணை தவறானது என்றும் அமெரிக்க ஆய்வகத்தில் நடத்தப்பட்ட விசாரணையைக் குறிப்பிட்டு, அந்த சிடி சித்தரிக்கப்பட்டதெனவும் வாதிட்டது. இந்த அந்தரங்க காட்சி விவகாரத்தில் கைதான நித்யானந்தா சிறையில் வைக்கப்பட்டு, பிறகு பிணையில் வெளிவந்தார்.

இது தவிர, பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் நடத்தச் சோதனையில், ஏகப்பட்ட ஆணுறைகள், கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மீண்டும் நித்யானந்தா ஊடகங்களால் சூழப்பட்டார்.

2012ல், நித்யானந்தா மீது பாலியல் வல்லுறவு வழக்கும் தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு எழுந்த பிறகு கொஞ்சக் காலம் தலைமறைவாக வாழ்ந்தார். அவர் தலைமறைவாக இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணையில் நித்யானந்தா தனது பெண் சிஷ்யையை பாலியல் வல்லுறவு செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது. பிறகு நித்யானந்தாவே முன்வந்து காவல் துறையிடம் சரணடைந்தார்.

குழந்தைகளைக் கடத்திய வழக்கு

தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் குழந்தைகளை அஹமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைத்திருப்பதாக 2019 காலத்தில் கொடுத்த புகாரின் பெயரில், குஜராத் காவல்துறை நித்யானந்தா மீதும், அவரது ஆசிரமத்தின் மீதும் வழக்குத் தொடுத்தது.

குழந்தை தொழிலாளர் பிரச்சனை, குழந்தை கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 365, 344, 323, 504, 506, 114 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

அரசு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, திடீரென இந்தியாவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக குஜராத் காவல்துறை கூறியது. நித்தியானந்தாவைப் பிடிக்க, முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியது.

2019ஆம் ஆண்டிலேயே, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாஸ்போர்ட்டுக்கு அவர் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

நித்யானந்தா பல வழக்குகளில் தேடப்படுவதால், வெளிநாடுகளிடமும், தூதரகங்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறோம் என்றும் அப்போதைய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார்.

கைலாசா - ஓர் ஆன்மிக தேசம்

இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற மனிதர் கொஞ்ச நாட்களிலேயே தனக்கென ஓர் ஆன்மிக தேசத்தை உருவாக்கிக் கொண்டார்.

https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைப்பிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரம் கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது என்றும் இந்து ஆதி சைவர் சிறுபான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தங்கள் நாட்டின் மொழிகள் என்றும், சனாதன இந்து தர்மமே தங்கள் மதம் என்றும், தெற்காசியாவில் உள்ள 56 வேதாந்த தேசங்களைச் சேர்ந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் இனக்குழுவினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நித்தியானந்தர் அமர்ந்த நிலையில் இருக்க, அருகே நத்தி இடம் பெற்றிருக்கிற ரிஷப கொடியே தங்கள் நாட்டின் கொடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர் துறைகள் அமிச்சகங்கள் எல்லாம் கூட அறிவிக்கப்பட்டன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கைலாசாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் காணொளிகள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

நித்தியானந்தாவின் 'கைலாசா' எங்கு உள்ளது?

தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்திருந்தாலும் சில கேள்விகளுக்கு எப்போதுமே விடை கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு எம் ஹெச் 370 விமானம் என்ன ஆனது என எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை அல்லவா? அப்படி, கைலாசாவையும் எந்த உலக வல்லரசாலும் இன்று வரை உறுதியாக கண்டுபிடிக்கப்பட முடியாமலேயே தொடர்கிறது.

உலகிலேயே மிகவும் தூய்மையான இந்து தேசம் என்று நித்தியானந்தா கூறும் கைலாசா தென்னமெரிக்க நாடான ஈக்குவெடாரின் கடல் எல்லையில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் அதை உறுதி செய்து நித்யானந்தாவை இன்னும் விரட்டிப் பிடிக்க முடியாமல் திண்டாடி வருகிறது இந்திய அரசு.

நித்யானந்தா
விண்கல்லில் இருந்து தோன்றியதா பூமியின் முதல் உயிர்? - ஆய்வுகள் கூறும் ஆச்சர்ய தகவல்

தனி நாணயம்

கைலாசா நாட்டின் நாணயங்கள் கடந்த 2020ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது. உள்நாட்டு புழக்கத்துக்கு என்று ஒரு தனி நாணயமும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு என்று வேறொரு தனி நாணயமும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுருக்கமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா தொடங்கப்பட்டது.

வெளியுலகத் தொடர்பு

வெளியுலக மக்களுக்கும் அவருக்குமான தொடர்பே இணையம் மட்டும்தான். ஃபேஸ்புக், யூட்யூப் ஆகியவற்றில் உள்ள KAILASA's SPH Nithyananda என்ற பக்கத்தில் தினமும் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் சில மணி நேரம் பேசி வந்தார். தற்போது அதுவும் தொடர்ச்சியாக வருவதில்லை.

இதைத்தாண்டி நித்யானந்தா உண்மையில் எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார், அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும் அவரை ஏன் இந்திய அரசோ, மாநில காவல்துறையோ விரட்டிப் பிடிக்காமல் இருக்கிறது என்கிற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில், தமிழ்நாட்டின் பழம்பெரும் மதுரை ஆதீனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு வழிவகுத்தார். சமீபத்தில் மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட காணொளிகாட்சி மூலம் கலந்து கொண்டு மக்களுக்கு ஆசி வழங்கி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நித்யானந்தா.

நித்யானந்தா
ஆஸ்திரேலியா : பண்டைய மொழியை வடிவமைத்த சுறா மீன்கள் - ஓர் ஆச்சரிய வரலாறு

மரண சர்ச்சை

சமீபத்தில் நித்யானந்தா உடல் நலமின்ரி இறந்துவிட்டதாக ஒரு செய்தி வெளியானது. நான் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறேன், ஆனால் சமாதி நிலையில் இருக்கிறேன் என நித்யானந்தாவே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்கள் மூலம் பதிவு செய்துள்லார் நித்யானந்தா.

திருவண்ணாமலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த நித்யானந்தா, இன்று இந்திய அரசின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டும் சூப்பர் ஸ்டார் ஆனது எந்த சாமியின் அருளோ, விதியோ தெரியவில்லை.

நித்யானந்தா
Pablo Escobar : உலகை மிரள வைத்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபர் வரலாறு! | News Sense

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com