காலப்போக்கில் ஏராளமான கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் இருக்கின்றன. மனிதர்கள் யாருமே வாழாமல் கைவிடப்பட்ட இத்தகைய நகரங்களைத்தான் பேய் நகரம் ( ghost town) என்று அழைக்கின்றனர்.
இந்தியாவில் இப்படி சில பேய் நகரங்கள் என்ற கைவிடப்பட்ட நகரங்கள் இருக்கின்றன. அவற்றை மக்கள் சுற்றுலா தலமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
உலகின் மிகச்சிறிய கடற்கரை நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி தற்போது அமைதியாக இருக்கிறது. ஒருபுறம் வங்காள விரிகுடா மற்றும் மறுபுறம் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றால் சூழப்பட்ட இந்த நகரத்தின் கடற்கரை 15 கிலோமீட்டர்கள் வரை நீண்டுள்ளது.
1964ஆம் ஆண்டு வீசிய பெரும்புயலில் இந்த நகரமே ஒட்டுமொத்தமாக சிதைந்து போய் ‘கைவிடப்பட்ட பேய் நகராகி'ப் போனது. அப்போதைய மதராஸ் அரசாங்கத்தால் மக்கள் வசிக்கத் தகுதியற்றதாக இந்த நகரம் அறிவிக்கப்பட்டது.
ஒரு தேவாலயம் உள்ளிட்ட பழங்கால இடிபாடுகளை இங்கே காணலாம். கடற்கரையின் குறுக்கே நீங்கள் நடந்து செல்லும்போது, வீசும் காற்று மற்றும் பரந்த வெள்ளை மணல் உங்களைத் தாக்கும்.
இங்குதான் ராமர் இலங்கைக்கு பாலம் உருவாக்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. தனுஷ்கோடியை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.
அழகிய வெள்ளை மணல் பாலைவனத்திற்கு பெயர் பெற்ற கட்ச், அதன் வடமேற்கு மூலையில் கைவிடப்பட்ட லக்பத் நகரத்தையும் கொண்டுள்ளது.
முன்னர் ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்த லக்பத் இப்போது கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக கைவிடப்பட்டுள்ளது, 1819 இல் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு, நகரம் அதன் தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிந்து நதியின் போக்கை மாற்றிய நிலநடுக்கம், நகரம் வறண்டுபோக வழிவகுத்தது. இதனால் மக்கள் அதை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நகரின் வடதிசையில் பாக்கிஸ்தானை நோக்கி 7 கிலோமீட்டர் நீளமுள்ள கோட்டை சுவர் உள்ளது. மக்கள் வசிக்காத பரந்த நிலப்பரப்புகளை இங்கே காணலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் தங்க நகரின் அருகே இருக்கும் கிராமம்தான் குல்தாரா. ஒரு காலத்தில் சிறிய கிராமமாக இருந்தாலும் மகிழ்ச்சியான வசிப்பிடமாக இருந்தது. இக்கிராமம் இன்று வெறிச்சோடிக் கிடப்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
அந்த கிராமத்திற்கு வந்த ராஜா ஒருவன், கிராமவாசி ஒருவரின் மகளது அழகில் மயங்கி திருமணம் செய்ய விரும்புகிறான். இது பற்றி கிராம மக்கள் முடிவு செய்வதற்கு ஒரு இரவு அவகாசம் கொடுக்கிறான். அந்த இரவில்தான் 80 குடும்பங்களை உள்ளடக்கிய கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். அந்த ராஜா மீது சாபமும் இட்டனர்.
அதன் பிறகு இங்கு யாரும் வாழ முடியவில்லை. இன்று குல்தாரா ராஜஸ்தானில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். உலகெங்கிலும் இருந்து மக்கள் ஒரு த்ரில்லான பேய் அனுபவத்திற்காக இந்த கிராமத்திற்குப் படை எடுக்கிறார்கள்.
நூற்றுக்கணக்கான பாறையில் வெட்டப்பட்ட சிற்பங்கள் மற்றும் பழங்கால கோயில்களின் சிதறிய இடிபாடுகள் ஆகியவற்றின் தாயகமான உனகோடி தொல்லியல் ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷமாகும்.
பசுமையான காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த சிற்பங்கள் மணற்கற்களால் செய்யப்பட்டவை. பெரிய பகுதிகள் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன, மேலும் அவை ஒருபோதும் தோண்டப்படவில்லை. இங்கு ஒரு கோடி சிற்பங்கள் இருக்கும் என்று உள்ளூர் பழங்குடி மக்களால் நம்பப்படுகிறது. இன்றுவரை, இந்த வெட்டப்படாத பாறை சிலைகள் எப்படி, எப்போது செய்யப்பட்டன என்று யாரும் கண்டுபிடிக்கவில்லை.
ஆக்ரா நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது ஃபதேபூர் சிக்ரி. இந்த நகரம் முகலாயப் பேரரசர் அக்பரால் 1569ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
இந்த நகரம் பார்ப்பதற்கு அழகாகவும், கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் நிறைந்ததாகவும் இருந்தது. இங்கு வாழ்வதற்கு போதுமான தண்ணீர் இல்லை என்பதால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினர்.
மக்கள் வெளியேறிய சிறிது காலத்திலேயே ஃபதேபூர் சிக்ரி ஒரு பேய் நகரமாக மாறியது. பல பேய்க்கதைகளுக்கு இந்நகரம் பிரபலமானது. இன்றும் நகரில் பிரம்மாண்டமான நுழைவாயில்கள் மற்றும் மொகலாய கட்டிடக்கலைக்குச் சான்று பகரும் கட்டிடங்கள் உள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust