பள்ளி மாணவர்களிடையில் மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு காணப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சமூக வலைதங்களில் பேச்சு பொருளாக இருக்கும் இந்த வீடியோ குறித்துப் பெற்றோரும், சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ், “படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில் மாணவிகள் நின்று கொண்டு ஒரு பாட்டில் மதுவைப் பகிர்ந்து குடிக்கின்றனர். அவர்களுடன் மாணவர்களும் இருக்கின்றனர். அந்த காணொலியைப் பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்குச் செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்” எனத் தனது சமூகவலைத்தள பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அதில் அவர், “மாணவ, மாணவியர் மது அருந்தி அநாகரிகமாக நடந்து கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த 2015-ஆம் ஆண்டு திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த 7 மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியதும், அவர்களில் இருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். தனியார்ப் பள்ளிகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்ததாகப் பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாவது தான் சோகமாகும்.
பொது வெளியில், அரசு பேருந்தில், பயணிகளுக்கு மத்தியில் மாணவர்களும், மாணவிகளும் இணைந்து, எந்தவித அச்சமும், நாணமும் இன்றி மது அருந்துவது சாதாரணமான ஒன்றல்ல. இது ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும் வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும். அதேநேரத்தில் இதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. இத்தகைய தவறுகளை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்பட காட்சிகளும், தெரு தோறும் மதுக்கடைகளைத் திறந்து வைத்த அரசும் தான் முதன்மைக் காரணமாகும்” எனவும், இது போன்ற சீர் கேடுகளைத் தடுக்க மது ஒழிப்பை உடனடியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.