பக்கத்து வீட்டிலிருந்த மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார் மருத்துவரும் வலதுசாரி மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் நிர்வாகியுமான சண்முகம் சுப்பையா.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் மருத்துவர் சண்முகம் சுப்பையா. இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் அவரது பக்கத்து வீட்டில் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. பல அரசியல் தலைவர்களும், சமூகத்தின் பலதரப்பைச் சேர்ந்தவர்களும் சண்முகத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர்மீது ஆதம்பாக்கம் போலிசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
மூதாட்டியின் கார் நிறுத்தும் இடத்தில் சுப்பையா தனது காரை நிறுத்தி வந்தது பிரச்சனைக்கு வழி வகுத்ததும் இது தொடர்பாகப் பல நாட்கள் மூதாட்டியைத் தொந்தரவு செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. எனினும் சுப்பையா கைது செய்யப்படாமல் இருந்தார்.
கடந்த மாதம் தஞ்சை மாணவி விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அகில பாரத வித்தியார்த்தி பரிசத் தலைவர் நித்தி திரிப்பாதியை சிறைக்குச் சென்று சந்தித்ததற்காகக் கீழ் பாக்கம் அரசு மருத்துவமனை பணியிலிருந்து சுகாதாரத் துறையால் இடை நீக்கம் செய்யப்பட்டார் சுப்பையா.
தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஆதம்பாக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் சுப்பையா சண்முகம்.