தமிழகத்தின் தலைநகரம் சென்னைக்கு முதலிலிருந்த பெயர் மெட்ராஸ் அல்லது மதராஸ். வந்தாரை வாழ வைக்கும் நகரமான சென்னையில் பல வகைப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். பல மாநில மக்களும் கூட இங்கே வசிக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் மாநிலத்தின் தலைநகரமாகச் சென்னை விளங்கியது. அப்போது மெட்ராஸ் மாநிலம் என்பது கிட்டத்தட்ட இன்றைய தென்னிந்தியாவை உள்ளடக்கியது.
வரலாற்று ஆய்வாளர் முத்தையா, பத்திரிகையாளர் வின்சென்ட் டி சோஸா உள்ளிட்ட சென்னை வரலாற்றின் ஆர்வலர்கள் 2004ஆம் ஆண்டில் "மெட்ராஸ் டே" நாளைக் கொண்டாட ஆரம்பித்தனர். அதன் பிறகு இன்று வரை இந்தக் கொண்டாட்டம் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 22ஆம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்ட படுகிறது. தற்போது மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறிவிட்டதால் இதைச் சென்னை தினம் என்று அழைக்கிறார்கள்.
எப்படி இந்த தினத்தைத் தெரிவு செய்தார்கள்? தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தின் சிறு பகுதியை அன்றைய விஜய நகர அரசர்களிடமிருந்து ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. வாங்கிய நாள் 1639ஆம் ஆண்டு, ஆகஸ்டு 22. எனவே மேற்கண்ட ஆர்வலர்கள் இந்த தினத்தையே சென்னை தினமாக கொண்டாடத் தெரிவு செய்தனர். ஆங்கிலேயர்கள் வாங்கிய கிராமம் மதராஸப் பட்டினம் அல்லது சென்ன பட்டினம் என்று அழைக்கப்படுகிறது.
கிழக்கிந்தியக் கம்பெனி சார்பில் ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ் டே ஆகியோர் தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து மேற்கண்ட கிராமத்தை வாங்கினர். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்க டப்பா நாயக்கர் மற்றும் பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.
2004ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட முதல் சென்னை தினத்தில் அந்தக் கால சென்னையின் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை ஒரு கண்காட்சியாக வைத்தார்கள். இன்று அது வளர்ச்சி அடைந்து உணவுத் திருவிழா, மரத்தான் ஓட்டம், நாட்டுப்புறக் கலைகள் என்று பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் சென்னை தினம் இதற்கு முன்பே இரு தருணங்களில் கொண்டாடப்பட்டிருக்கிறது. 1939 ஆம் ஆண்டு சென்னை அதன் 300வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததை அன்றைய பிரிட்டிஷ் அரசு கொண்டாடியது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது சென்னை பற்றிய ஆவணங்கள், கட்டுரை அடங்கிய ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும் ஒரு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை மாநகரத்தின் 350வது ஆண்டு பிறந்த தினம் 1989ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது கட்டிடம் கட்டும் நிறுவனத்தை நடத்தி வந்த பிராங்பெட் ஃபெர்ணான்டஸ் செவ்வியல் பாணியிலான ஒரு நினைவுச் சின்னத்தை பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் புதிய ஆவடி சாலையின் சந்திப்பில் திறந்து வைத்தார். அந்த நினைவுச் சின்னம் மெட்ராஸ் 350 என்று அழைக்கப்பட்டது.
தற்போதைய சென்னை மாநகரம் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் தொகையை நெருங்குகிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து போகிறார்கள். விமான நிலையம், துறைமுகம், தேசிய நெடுஞ்சாலைகள் எனும் அனைத்து கட்டமைப்புகளையும் சென்னை மாநகரம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே சென்னையைச் சுற்றி நிறையத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதே போன்று தமிழகத்தின் வர்த்தக நகரமாகவும் சென்னையே திகழ்கிறது. இப்படி சென்னப் பட்டினம் எனும் ஒரு கிராமம் வரலாற்றில் இப்படி ஒரு மாநகரமாக மாறியதைக் குறிக்கும் வகையில் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
முதலில் ஜார்ஜ் கோட்டை பகுதி கிராமத்தை மட்டும் வாங்கிய ஆங்கிலேயர்கள் பின்னர் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களை இணைத்து தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றினர். சென்னை தின ஆர்வலர்களின் கருத்துப்படி 2022 ஆம் ஆண்டில் சென்னை மாநகரத்தின் வயது 383 வருடங்கள் ஆகும்.
அதே நேரம் சென்னையின் வயதை கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகையை வைத்து மதிப்பிடக் கூடாது என வேறு சில வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய கருத்துப்படி ஆங்கிலேயருக்கு முன்பே தமிழர்கள் இந்த நகரத்தில் வளமோடு வாழ்ந்திருக்கின்றனர்.
சென்னை நகரத்தின் பழமையான கோவில்கள் என்று திருவெற்றியூர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருமுல்லைவாயில் கோவில்கள் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றனர். இக்கோவில்கள் பாடல் பெற்ற தலங்கள் என்பதால் சென்னையின் வயது ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டுகிறது என்பது அந்த ஆர்வலர்களின் கருத்து.
இதற்கு ஆதாரமாகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள். அதில் கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து மதராசபட்டினம், நீலங்கரையன் பட்டினம், ராயபுர பட்டினம் போன்ற துறைமுக பகுதிகளுக்குப் பொருட்கள் கொண்டு சேர்க்க விதிக்கப்படும் வரி விவரங்கள் விரிவாகக் காணப்படுகிறது. இதிலிருந்தே சென்னை நகரம் ஆங்கிலேயருக்கு முன்பே செழிப்புடன் இருந்தாகத் தெரிகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும் தற்போது ஆகஸ்டு 22 என்பது சென்னை நகரத்தின் பிறந்த தினமாக பொதுவில் ஏற்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுநாள் வரை இந்த கொண்டாட்டத்தைச் சென்னை ஆர்வலர்கள் மட்டுமே கொண்டாடி வருகின்றனர். அரசு சார்பில் கொண்டாடப்படும் தினமாக அது மாறவில்லை. எனினும் வருடா வருடம் சென்னை தினத்தைக் கொண்டாடும் மக்களின் எண்ணிக்கையும், நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust