ஆடி பெருக்கு : பொன்னியின் செல்வனில் ஆடிப்பதினெட்டு - இந்த வரலாறு தெரியுமா?

“ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம், வெள்ளம் இருகரையையும் தொட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். நீர்வள சிறப்பினைக்கொண்டாடி, நன்றி கூறும் பொருட்டு வணங்கி மகிழ்ந்த நாள் பதினெட்டாம் பெருக்கு எனும் ஆடி பதினெட்டு.
ஆடிப்பதினெட்டு
ஆடிப்பதினெட்டு Twitter
Published on

“ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம்.

அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.

அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தெளியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள்” - என்ற வரிகளைக்கண்டதுமே பலரும் யூகித்திருப்பார்கள், கரைகண்ட காவிரி கரை கண்ட அழகினை விவரிக்கும் , காலம் போற்றும் காவியமான பொன்னியின் செல்வன் வரிகள் என்று.

ஆறுகளும் நதிகளும் ஏரிகளும் தற்போது பெயரளவிலேயே. ’முன்னொரு காலத்தில் ஏரி இருந்ததாம், அதனால் பொன்னேரி, பொத்தேரி, வேளச்சேரி என்று பெயர் வந்ததாம்’ என சொல்லி கடந்து போகும் காலம் வந்துவிட்டது. நீர்வள சிறப்பினைக்கொண்டாடி, நன்றி கூறும் பொருட்டு வணங்கி மகிழ்ந்த நாள் பதினெட்டாம் பெருக்கு எனும் ஆடி பதினெட்டு.

“ அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள்.

பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள்”

என்ற வரிகளைப்படிக்கும் போதே அந்த இடத்திற்கே, அந்த காலத்திற்கே போய்விட்டு வந்தவர்கள் தான் அதிகம்.

ஒரு வேளை நாமும் அந்த விழாவில் இருந்திருப்போமோ? நாமும் பழுவேட்டையரோடு பயணித்திருப்போமோ என்ற எண்ணங்கள் நிச்சயம் மேலேங்கும். ஆனால் இக்கால பிள்ளைகளுக்கோ, கூட்டாஞ்சோறு மட்டும் ஏதேதோ வீடியோக்களில் வந்ததால் அறிகிறார்கள். சித்ராண்ணமோ கமுகு மட்டைகள் என்றாலோ என்னவென்றே தெரியாது. ஆனால் வரலாற்றில் வந்த இடங்களை தேடிப்பார்ப்பதிலும், அதன் பொருளுணர்ந்து கேட்டு விவரங்கள் பெறுவதிலும் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடவாறு பொங்கி வரும் நிகழ்வை மிக அழகாக கண் முன்னே காட்டியிருப்பார் கல்கி.

ஆடிப்பதினெட்டு
பொன்னியின் செல்வன் : கல்கி எழுதிய 7 புத்தகங்கள்

“இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள்.

ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்”

“வடவாறு பொங்கி வருது

வந்து பாருங்கள், பள்ளியரே!

வெள்ளாறு விரைந்து வருது

வேடிக்கை பாருங்கள், தோழியரே!

காவேரி புரண்டு வருது

காண வாருங்கள், பாங்கியரே!” என்று அழகுற சொல்லப்பட்டிருக்கும். படிக்கும் போதே நதியெங்கே என தேடிடும் கண்களும் அலைகளை வருடிடும் கால்களும் நிச்சயம் அந்த இடத்திற்கே நம்மை அழைத்துச்சென்றுவிடும். வல்லவராயன் வந்தியத்தேவனும், மற்ற முக்கிய கதாபாத்திரங்களான பெரிய பழுவேட்டரையர், நந்தினி தேவி போன்றோரின் அறிமுகங்கள் ஆடிப்பெருக்கின் பின்புலத்திலேயே இருக்கும்.

ஆடிப்பதினெட்டின் சப்பரம்

“ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம், வெள்ளம் இருகரையையும் தொட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக்கொண்டு அலைமோதிக்கொண்டிருப்பது வழக்கம்.

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்துகொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும்கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருந்தார்கள்” என்று எழில்மிகு காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்திடும் வரிகள் அவை.

இன்றும் சப்பரம் இழுத்து செல்லும் வழக்கம் பல இடங்களில் உள்ளது. குறிப்பாக தென்கரை பகுதிகளில் இன்றும் சப்பரம் இழுத்துச்செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. தேர் போன்று மரத்தால் செய்யப்பட்ட சப்பரத்தில் விருப்பமான இறைவனின் படத்தை வைத்து, கயிற்றில் கட்டி இழுத்துச்சென்று, ஆற்றின் கரையோரம் நிறுத்தி, தலை வாழை இலை போட்டு, பச்சரிசி, தேங்காய், பழம், பூ, விளாம்பழம், நாகப்பழம், பேரிக்காய், மஞ்சள், குங்குமம் என வைத்து, காப்பரிசியுடன் வைத்து காவிரித்தாய்க்கு நன்றி கூறி, மகிழ்வுடன் மீண்டும் வீட்டிற்கே அந்த சப்பரத்தை இழுத்து வருவது வழக்கம்.

குழந்தைகள், வீதிகளில் தன் தேரை தானே இழுத்து வந்து, இறைவனைக் கொண்டாடும் நிகழ்வில் அத்தனை பேரின்பத்துடன் ஒற்றுமையாய் இருப்பதைக் காணலாம். அதில் நன்றி உணர்வுடன் கூடிய வெற்றிக்களிப்பையும் காணமுடியும்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்Twitter

பொன்னியின் செல்வனில் வீராணம் ஏரியும் ஆடி பதினெட்டும்

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.

நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெல்ல மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது. ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.

வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தெளியும் நடவும் நடந்து கொண்டிருந்தன “

ஆடிப்பதினெட்டு
பொன்னியின் செல்வன் : பழையாறை கோவிலின் சிறப்புகள் என்ன?

எத்தனை கண்கொள்ளாக்காட்சிகளை வரிகளாக வடித்திருக்கிறார். செல்லும் இடங்களெல்லாம் செல்ஃபிகளோடும் வீடியோக்களோடுமே கழிந்திடும் இன்றைய நாட்களில், சற்று தூர வைத்துவிட்டு ரசிக்க வேண்டும். எடுத்த படங்களை இன்னொரு முறை பார்ப்பது கூட கிடையாது. ஆனால் புகைப்படமெடுக்க வேண்டும் என்ற உத்வேகம் மட்டுமே கண்களில் அலைபாயும். நிஜக்கண்களால் மன நிறைவோடு காணும் போதே அவை வெவ்வேறு வடிவங்களாகப் பரிணமிக்கும்.

இயற்கை நமக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் கொடைகள் ஏராளம். அதை எங்ஙனம் நாம் அனுபவிக்கிறோம் பயன்படுத்துகிறோம் பாதுகாக்கிறோம் என்பதில்தான் அழகிய வாழ்வியல் அமைந்துள்ளது. விழாக்களும் பண்டிகைகளும் உற்சாகமான ஒற்றுமையை, அழகான அன்பினை, ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அமைத்துக்கொண்டால் அதுவே சிறப்பு. அடுத்த தலைமுறையினருக்கும் அதை கொண்டு சேர்த்தல் அதனினும் சிறப்பு. அனைவருக்கும் ஆடிபதினெட்டு வாழ்த்துக்கள். பதினெட்டாம் பெருக்கில் பல இன்பங்கள் பெருகட்டும். !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com