கடலூர் ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு மனுவில், “பலதரப்பட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்குத் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. தாய் மொழி வழிக் கொள்கையை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத திணிப்பு எனக் காரணம் காட்டி அரசியலுக்காக எதிர்ப்பது நியாயமற்றது. தேசிய கல்விக் கொள்கை இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ திணிக்கவில்லை. தாய் மொழியுடன் கூடுதல் மொழியைக் கற்றுத்தரும் வகையில் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது. அந்நிய மொழியான ஆங்கிலத்தை அனுமதிக்கும் போது நாட்டின் அலுவல் மொழியான ஹிந்தியை மறுப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. கல்வித்தரத்தை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது மாநிலத்தின் கல்வித்தரத்தைக் குறைத்துவிடும் அபாயம் உள்ளது” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரியுடன் மற்றொரு நீதிபதியும் இருந்த அமர்வு முன் விசாரணைக்கு வந்தது “எந்த மொழியினை கற்கலாம் என்பதை மாநில அரசு முடிவெடுக்கலாம். ஆனாலும் மக்கள் இந்தி படிக்கும் வாய்ப்பைத் தடுப்பது தமிழக மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதாலும், வேறு மாநிலங்களில் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் மக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், “மும்மொழிக் கொள்கை கற்பதில் என்ன சிரமம் உள்ளது? கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருப்பதைப் போல மும்மொழிக்கொள்கை இருந்தால் என்ன சிக்கல் ஏற்படும்?” என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்
இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், “இந்தி படிப்பதனை யாரும் தடுக்கவில்லை, மாநிலத்தில் இரு மொழிக்கொள்கையை பின் பற்றுவது எனக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இந்த மனுவிற்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கவேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.