கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன

கேரளா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இதே போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. சுருக்கமாக பாஜக அரசு இல்லாத மாநிலங்கள் அனைத்தும் ஆளுநரோடு போரிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன
கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன twitter

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பிப்ரவரி 7ஆம் தேதி திமுகவின் தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்னுடைய உரையில், வரும் 2047 ஆம் ஆண்டுக்குள், நம்முடைய பழைய வரலாற்றுப் பெருமைகளை மட்டுமே பேசாமல், நவீனத்தின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

"எல்லா நாடுகளுக்கும் வெவ்வேறு மாதிரியான வரலாற்றுப் பின்புலங்கள் இருக்கும். அது ஒவ்வொருவரின் பார்வைக்கும் மாறுபடும். வரலாறுகள் பல வகைகளில் விவரிக்கப்பட்டிருக்கும், எழுதப்பட்டிருக்கும். ஆக பெருமை மிகுந்த கடந்த காலம் என்று நாம் சொல்வது யாருடைய கடந்த காலத்தை சொல்கிறோம் என்கிற கேள்வி எழுகிறது."

”நாம் இந்த நாட்டின் பெருமிதத்தை குறித்தும், இந்த நாட்டின் கலை கலாச்சார பாரம்பரியங்களை குறித்தும், கோவில்கள், தத்துவங்களை குறித்தும் பேசுகிறோம். இதே நாட்டில் ஒரு பிரிவு மக்களுக்கு சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்கப்படாமல் இருந்தது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, கௌரவம் என்கிற பெயரில் பெண்களை தீயில் தள்ளியதையும் இங்கு நாம் மறந்து விடக்கூடாது. இன்றும் நாம் உடன்கட்டை ஏறுதலை கொண்டாடுகிறோம். அதற்கு இந்த அவையில் நான் வெட்கித் தலைகுனிகிறேன்” என்றார்

தொடர்ந்து பேசியவர், ”சர்வாதிகாரத்தை நோக்கி ஒன்றிய பாஜக அரசு இந்தியாவை இட்டுச் செல்கிறது. ஒரே நாடு, ஒரே வரி. ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே தேர்தல். ஒரே நாடு, ஒரே மதம். ஒரே நாடு, ஒரே கட்சி போன்ற விஷயங்களை முன்னெடுக்க விரும்புகிறது. இந்த திட்டம் எப்போதுமே பலிக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடு எத்தனையோ விஷயங்களை பார்த்து விட்டது, எத்தனையோ விஷயங்களை எதிர்கொண்டு இருக்கிறது. இந்த நாட்டின் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்" என்றார்

கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன
அதானி விவகாரம் : மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - ராகுல் காந்தி உரை தமிழில்

”நீங்கள் தொடர்ந்து மாநில அரசுகளின் வலிமையை குறைத்து மதிப்பிட்டு கொண்டிருங்கள், நீங்கள் தொடர்ந்து நாங்கள் செய்து வரும் பணிகளை கொச்சைப்படுத்துங்கள். நலன் சார்ந்த அரசாங்கம் என்றால் என்ன? இலவசங்கள் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை? நீங்கள் இதற்கு ஏதேனும் ஒரு பெயரை வைத்து அழைத்துக்கொண்டு இருங்கள், ஆனால் நாங்கள் தான் முன்மாதிரிகளை உருவாக்கி இருக்கிறோம். சமூக நீதி & அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என பல மாதிரிகளை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இது போன்ற விஷயங்களை உருவாக்க நீங்கள் மிக மோசமாக தவரியுள்ளீர்கள்.

1967 ஆம் ஆண்டு, பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தபோது, ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு எதிரான ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.

தற்போது தமிழ்நாடு அரசின் ஆளுநராக இருப்பவர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்திருக்கும் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுவையில் வைத்திருக்கிறார். இதில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கும் மசோதாக்களும் அடக்கம்.

இந்த பிரச்னையில் தமிழகம் மட்டும் தனித்து இல்லை. கேரளா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இதே போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. சுருக்கமாக பாஜக அரசு இல்லாத மாநிலங்கள் அனைத்தும் ஆளுநரோடு போரிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு எந்த ஒரு தனிப்பட்ட அதிகாரங்களும் கிடையாது. அவர் அம்மாநில அரசாங்கத்தின் அமைச்சரவை கூறும் ஆலோசனைகளின் படி நடந்து கொள்ள வேண்டும் என சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசாங்கங்களுக்கு, குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநில அரசாங்கங்களுக்கு ஆளுநர்களை நியமித்து அனுப்பும்போது, இதைப் படிக்குமாறு அறிவுறுத்துங்கள். குறைந்தபட்சம் இது சம்பந்தமாக அறிவுரைகளை வழங்கியாவது அனுப்பி வையுங்கள். இப்படி நாங்கள் சொல்வது எதையுமே நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆகையால் தான் இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொடர்ந்து இடை மறித்தீர்கள்.

இந்த ஆண்டு தமிழகத்தில் எந்த தேர்தல்களும் இல்லை என்பதால் நீங்கள் திருவள்ளுவரை மறந்து விட்டீர்கள் என்று கருதுகிறேன்.

கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன
கனிமொழி : 'குழந்தைகளை கூட வஞ்சித்துவிட்டீர்கள் மோடி' - நாடாளுமன்றத்தில் அனல் பறந்த பேச்சு

நேர்மையான, செரிவான அமைச்சரவையோ, அறிவுரையோ இல்லாத அரசன் வீழ்ந்து போக எதிரிகள் தேவையில்லை. ஆக, எதிர்க்கட்சிக்காரர்கள் என்ன சொல்கிறார்கள், மக்கள் என்ன சொல்கிறார்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பதை எல்லாம் நீங்கள் காதில் வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்றால், நீங்களும் வீழ்ந்து போக எதிரிகள் யாரும் தேவையில்லை.

இந்த அரசு தன்னை எதிர்த்து கருத்து சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் இடம் கொடுப்பதில்லை. குரலற்ற மனிதர்கள் நீண்ட நாட்களுக்கு இதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுக்குள் உங்கள் மீதான அதிருப்தி வளர்ந்து கொண்டிருக்கும், ஒருநாள் அது தீயாக வெடித்து, பதிலடி கொடுப்பார்கள். அது என்று எப்போது என்பது உங்களுக்கு தெரியாது. நீங்கள் பயத்தை மட்டுமே பரப்பி இந்த நாட்டை ஆட்சி செய்து விட முடியாது.

இன்று இந்தியாவில் நிறைவேற்றப்படும் பெரும்பாலான சட்டங்களின் வரைவுகள் கூட அவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதால், அவை உறுப்பினர்கள் எப்படி அந்த சட்டம் தொடர்பாக ஆழ்ந்த படித்து, புரிந்து கொண்டு அவையில் விவாதிக்க முடியும். காரணம் நீங்கள் சட்டங்களை விவாதித்து நிறைவேற்றாமல், திணிக்க விரும்புகிறீர்கள்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் போது, இந்தியாவால் கோடிக்கணக்கான மக்கள் வறுமை நிலைக்கு போகாமல் காப்பாற்ற முடிந்தது என, உலக வங்கியின் அறிக்கை குறிப்பிட்டதாக குடியரசுத் தலைவர் தன் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதே உலக வங்கி தான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படாமல் மீண்டு வர உதவியது என தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததும் இங்கு நினைவுகூறத்தக்கது. அத்திட்டத்தை யூ பி ஏ அரசு தான் கொண்டு வந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி கணிசமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.

உலக அளவில் குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் என்று அழைக்கப்படும் உலக பசிக் குறியீட்டில் 67ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 107ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கிட்டத்தட்ட 4 கோடி இந்திய இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் வளர்ச்சியா?

இந்தியாவில் ஒரு பொதுத் துறை நிறுவனம் லாபகரமாக இயங்குகிறது என்றால், அதை தனியார் நிறுவனங்களுக்கு கைமாற்றி விடுகிறார்கள். ஒரு பொதுத் துறை நிறுவனம் லாபம் ஈட்ட வில்லை என்றால் அதற்கு தேவையான உதவிகளை செய்து அதை முழுவீச்சுடன் இயங்கச் செய்வதில் இந்திய ஒன்றிய அரசு ஆர்வம் காட்டாமல் இருக்கிறது அல்லது மூடிவிடுகிறது அல்லது விற்று விடுகிறது. இதுவே ஒரு தனியார் நிறுவனம் என்றால், இந்திய அரசு ஏன் வழியச் சென்று உதவுகிறது, ஏன் அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற துடிக்கிறது?

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு எங்கே? பிரதமர் தொடர்ந்து தமிழ் மொழியின் சிறப்புகளை பல மேடைகளில் குறிப்பிடுகிறார், ஆனால் மொழிகளுக்கு நிதி வழங்குவதற்கான நேரம் வரும்போது மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு 198 கோடி ரூபாயும், மத்திய தமிழ் பல்கலைக்கழகத்துக்கு 11.8 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நிறுவனத்திற்கு தேவையான அடிப்படை செலவுகளைக் கூட செய்ய முடியாது. பிறகு எப்படி மற்ற கூட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி பணிகளையும் மேற்கொள்ள முடியும்? என பல்வேரு கருத்துக்களைப் பேசினார் கனிமொழி.

கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன
அண்ணாமலை: ”காவல் துறை திமுகவின் பிடியில் இருக்கிறது” - சீரிய பாஜக தலைவர் - என்ன பேசினார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com