தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார். நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கான காரணங்களைக் கடந்த (பிப்ரவரி 1-ம் தேதி) தமிழக அரசுக்கு விளக்கியிருப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், நீட் விலக்கு மசோதா, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆளுநரின் இந்த செயலுக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்திருக்கிறது. மேலும் சில அமைப்புகள் போராட்டத்துக்குத் திட்டமிட்டு வருகின்றன.
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப்பார்க்கிறேன்" என ட்விட் செய்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில் #StandForStateRights என்ற ஹேஷ் டேக்-ஐ பதிவு செய்துள்ளார்.
“நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்படுகிறார் ஆளுநர். திருப்பி அனுப்பிய மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்புவோம்” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் கூறியுள்ளார்.
“மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா அல்லது தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்புவது ஆளுநரின் கடமை, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தடையாக இருப்பார் என்று நான் முன்பே கூறினேன்” எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கூறியிருக்கிறார்.
"நீட் விலக்கு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தால், நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கள் தமிழ்நாடு நீட் விலக்கு சட்டத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது; அதனால் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும்" என்று பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் ஆளுநரின் நடவடிக்கை குறித்து ஆவேசமாகப் பேசிய டி.ஆர்.பாலு, “ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும் நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் விலக்கு கோரியும் ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப்பெறக் கோரியும் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
நீட் தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்பது தான் தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் இயற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனக் கூறியுள்ளது. “நீட் விலக்கு சட்டத்திற்கு அடிப்படை கூறுகள் தவறானவை என ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல” எனவும் கூறியுள்ள தமிழக அரசு, இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு எதிரான அதிர்வலைகள் விரிவடைவதைத் தொடர்ந்து #GetOutRavi என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.