“ எப்பொழுதும் இரக்கத்தைக் கொண்டிருங்கள். துன்பம் நேராது. அனைத்திலும் தீமையைக் காணும் குணத்தை விட்டுவிட்டு அமைதியுடன் கூடிய நம்பிக்கையோடு செயல்பட்டால், அது பிரகாசமான எதிர்காலத்தைப் பெற்றுத்தரும். எப்பொழுதும் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் இருங்கள். விமர்சனத்தைத் தவிர்த்து விடுங்கள். ஆனந்தமான பெரு வாழ்வை வாழலாம் ” என்ற வாழ்வின் பிரகாசமான சாராம்சத்தைக் கூறியவர் நம் அனைவரும் அறிந்த புதுச்சேரி ஸ்ரீ அன்னை.
எத்தனை நிதர்சனமான உண்மை இது. பலருக்கும் தெரிந்திருந்தும், மறந்து போய் விடுகிறோம். நம்மையே அறியாமல் விமர்சனங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டோ, கவலைப்பட்டுக்கொண்டோ இருக்கிறோம். அதை விட முக்கியமான ஒன்று, யாரைப்பார்த்தாலும் கோபமும் வெறுப்பும் வருகிறது. யாரைப்பற்றியாவது பேச்சோ, சந்திப்போ வந்தால், முதலில் நம் கண் முன்னே வருவது, அவரின் தீமை குணங்கள் தான். அது அப்படியே பெருகப் பெருக, யாரைக்கண்டாலும் அவர் பற்றிய எதிர்மறையான எண்ணங்களே பெருகி, மனிதர்கள் மேல் வெறுப்பே வந்துவிடுகிறது. நம் மீதான தவறுகளும் வெறுப்புகளும் பிறக்கும் இருக்கலாம். இதையெல்லாம் அகற்றி நிம்மதியான பெரு வாழ்வு வாழ அன்னை கூறிய வழிகளையும், அவரின் அற்புதங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
1878-ம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர் மிரா அல்பாசா. இவரின் தந்தை துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். தாய் எகிப்து நாட்டவர். மிரா அல்பாசா சிறுவயது முதலே ஆன்மிகத் தேடல் உடையவராக இருந்தார். ஆன்மிக நூல்களை வாசித்து தன் அறிவையும் ஞானத்தையும் பெருக்கிக்கொண்டார். தன் வாழ்வில் தேடிக்கொண்டிருந்த ஆன்மாவின் தேடலுக்கான பதில், இந்தியாவில் உள்ளது என்றும் உணர்ந்தார். இந்தியா நோக்கிய பயணத்துக்கான நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார். தன் கனவில் தாடி வைத்த யோகி ஒருவர் வருவதை உணர்ந்த மிரா, அதை ஓவியமாக வரைந்து வைத்திருந்தார். இந்தியா வரும் காலமும் வந்தது. புதுச்சேரியை வந்தடைந்தார். யோக கலைகள் பலவும் கற்றார் மிரா. தான் கனவில் கண்ட அந்த தாடி வைத்த யோகியைக் கண்டார். அவர்தான் அரவிந்தர். அவரையே குருவாகக்கொண்டு ஆன்மீக பணிகளை மேற்கொண்டார். மிராவின் ஆன்மிக சாதனைகளைக் கண்ட அரவிந்தர் அவரை அன்னை என்று அழைக்க ஆரம்பித்தார். அதன்பின் அங்கு வரும் பக்தர்கள் அன்னை என்றே அவரை அழைக்க ஆரம்பித்தனர். அன்னையின் தரிசனமே தங்களின் குறைகளைப் போக்கும் என்று நம்பினர். அன்னையின் அருளும் அதை நிகழ்த்தியது என்பதுதான் உண்மை. அன்னை மலர்களின் மீது அபார பிரியம் கொண்டவர். எந்த மலர் கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று ஆய்வு செய்து தம் பக்தர்களுக்கு அவர் தெரிவிப்பார். குறிப்பாக, ரோஜா மலர்கொண்டு துதிக்கக் குறைகள் விலகும் என்றும் மல்லிகை மலர்கள் கொண்டு துதிக்கச் சோதனைகள் நீங்கும் என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு பலனை அன்னை குறித்துச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் அன்னையின் பக்தர்கள் இன்றும் அன்னைக்கு மலர் அலங்காரமே உயர்ந்த பூஜையாகக் கொண்டு செய்கிறார்கள்.
அன்னை தம் வாழ்வின் அடுத்த பணியாக, ‘மனித குலம் முழுமைக்குமான ஒரு பொது உலக நகரை உருவாக்க வேண்டும்’ என்று விரும்பினார். அந்த நகரில் ஆண்களும் பெண்களும் எல்லா தேசற்றவர்களும் சாதி, மத, தேச, இன, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அமைதியாகவும் ஒற்றுமையாகவும் அன்புடனும் வாழ வேண்டும் என்று விரும்பினார். அதற்காகப் புதுவையிலிருந்து 13 கி.மீ தொலைவில் 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஆரோவில் என்கிற புதிய நகரை நிர்மாணித்தார். 1968ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று 124 நாடுகள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் 5 ஆயிரம் பேர் தங்கள் சொந்த மண்ணிலிருந்து கொண்டுவந்த புனித மண்ணை வாங்கி, தாமரை மொட்டு வடிவ வெண்ணிறத் தாழியில் வைத்து ஆரோவில் பன்னாட்டு மையத்தை அமைத்தார். அந்நகரில் தற்போது 45 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்மிக வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.
அன்னையின் அற்புதமான தவ வலிமையால் கவரப் பெற்ற பாரதியார், வினோபா, யோகி ராம் சுரத்குமார், நேரு, இந்திரா காந்தி, ராஜேந்திர பிரசாத், கரண்சிங், லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் எனப் பலரும் அன்னையைப் போற்றி வணங்கினர். அன்னையின் புகழ் அகிலமெல்லாம் பரவியது. புதுச்சேரியில் அன்னை ஆசிரமத்தில் அவர் இருந்தபோது பால்கனி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொருவரின் பிறந்த நாளும் மிகச் சிறப்பு வாய்ந்தது எனக் கூறி தனியே வாழ்த்துவார். நாம் மானசீகமாக, உண்மையாக அழைத்தால் அங்கு ஸ்ரீ அன்னையே நம்மைத் தேடி வருவார். ஸ்ரீ அன்னையே இது குறித்துக் கூறி இருக்கிறார். ‘நேர்மையான பிரார்த்தனைகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன. ஒவ்வொரு அழைப்புக்கும் நிச்சயம் பதில் உண்டு’ என்று தெரிவித்திருக்கிறார். அன்னையின் அருளைப் பெற முக்கியத்தேவை நம்பிக்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் மட்டுமே.
நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்
) நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண நம்பிக்கையே.
ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாகத் தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் தேதி அன்னையின் பிறந்த நாளன்று அவர் தங்கி இருந்த அறை பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்படும். மலர்கொண்ட மனதார பிராத்தித்து அன்னையின் அருளை அனைவரும் பெறுவோம்.