

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி
NewsSense
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வேகத்தில் குறைந்து வருகிறது.
தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஒவ்வொன்றாக தளர்த்தி வருகிறது. அந்த வகையில், கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களிலும் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100% பார்வையாளர்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).
கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.