ஆர் என் ரவி : இதற்கு முன் ஆளுநர்கள் மாநில அரசின் உரைகளை வாசிக்காமல் இருந்திருக்கிறார்களா?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதவியில் இருந்த ஆளுநர்கள், மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து இருக்கிறார்கள். அவற்றை குறித்து பார்க்கலாம்.
ஆர் என் ரவி
ஆர் என் ரவி Twitter
Published on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையோடு தொடங்கியது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர் என் ரவி சட்டசபையில் ஆற்றிய உரையை வைத்து பிரச்சனை வெடித்தது.

தமிழ்நாடு மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமல் ஆளுநர் ரவி தன்னுடைய இஷ்டத்திற்கு ஒரு சில பகுதிகளை தவிர்த்துவிட்டு வாசித்ததாக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம்சாட்டியது.

இப்படி தமிழ்நாட்டில் இதுவரை நடந்ததில்லை என்றும், ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதவியில் இருந்த ஆளுநர்கள், மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து இருக்கிறார்கள் என சில வலைதளங்கள் சில சம்பவங்களைப் பட்டியலிட்டு இருக்கின்றன. அதை பார்ப்பதற்கு முன் ஆளுநர் உரை குறித்து கொஞ்சம் பார்த்து விடுவோம்.

ஆளுநர் உரை

ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஒவ்வொரு ஆண்டும் அந்த மாநில சட்டசபையின் முதல் கூட்டத்தில் உரையாற்றுவார். அதே போல, ஒரு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, ஒரு மாநில அரசு புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது, ஆளுநர் உரையில் இருந்து புதிய அரசின் சட்டசபைக் கூட்டத் தொடர் நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

பொதுவாக இதுபோன்ற ஆளுநர் உரைகளை அந்தந்த மாநில அரசுகளே தயாரித்துக் கொடுக்கும். அதில் தங்களுடைய அரசின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், அவர்கள் சாதித்த விஷயங்கள் குறித்தே இருக்கும். அதே போல எதிர்காலத்தில் தங்களுடைய அரசு கொண்டு வரவிருக்கும் கொள்கைகள் மாற்றங்கள் முன்னேற்றங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இப்படி தயாரிக்கப்படும் ஆளுநர் உரையை பெரும்பாலான சமயங்களில் அந்த அந்த மாநில ஆளுநர்கள் அப்படியே சட்டசபையில் வாசித்து விட்டுச் செல்வதே மரபாக இருந்து வருகிறது.

R N Ravi
R N RaviTwitter
ஆர் என் ரவி
தமிழ்நாடு : சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் - அப்படி என்ன பேசினார் முதல்வர்?

ஆளுநர் ரவி வாசிக்க மறுத்த இடங்கள்

தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் ரவி, தமிழ்நாடு மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையில், இந்தியாவில் முதல் சட்ட அமைச்சராக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கர், பல்வேறு திராவிடத் தலைவர்கள், தமிழ்நாடு அரசு முன்மொழிந்து செயல்பட்டு வரும் திராவிட மாடல் நிர்வாகம், தமிழ் நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு… என பல விஷயங்களையும், சொற்களையும் வாசிக்காமல் கடந்திருக்கிறார்.

இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் & வழக்குரைஞர் சரவணன் அண்ணாதுரை வண்மையாக கண்டித்ததோடு, இது மரபல்ல என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் ஆளுநருக்கு தன் விருப்பப்படி மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை மாற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்றும், ஆளுநர் அலுவலகமே கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததிருப்பதாகவும் கூறுகிறார்.

தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு கூட, பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில், ஆளுநர் உரை குறித்து ஆளுநரே கையெழுத்திட்டதாக சில ஆவணங்களைக் காட்டியதும் இங்கு நினைவுகூரத்தக்கது. ஆளுநர் உரைக்கு, அவருடைய அலுவலகத்தில் ஒப்புதல் பெறப்படவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

ஒரு மாநிலத்தின் கேபினெட் அமைச்சரவை ஆளுநர் உரையை தயாரிக்கும், அதை ஆளுநர் சட்டமன்றத்தில் வாசிப்பார். ஒருவேளை ஆளுநர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மரபை மீறி ஏதாவது பத்திகளை நீக்கினால், அது சட்டப்படி தவறு என்று கருதப்படாது.

ஆனால் நாடாளுமன்றத்தின் அடிப்படை வேர்களையே பாதிப்பதாக இருக்கும் என சிப்ரஞ்ஜன் முகர்ஜி என்பவர் தன் “Governor's rule in the indian constitution” என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பதாக சில வலைதளங்கள் மேற்கோள் காட்டியுள்ளன. இதற்கு முன் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளனவா?

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

2020 ஆம் ஆண்டு கேரள அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராக சில கருத்துக்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை ஆரிஃப் முகமது கான் வாசிக்கத் தவறவில்லை. ஆனால், வாசிக்கும் போது, இது தன் கருத்தல்ல, கேரள முதல்வரை கெளரவிக்கும் வகையில் தான் இதை வாசிப்பதாகவும், இக்கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

கேரள ஆளுநர் பி சதாசிவம்

2018 ஆம் ஆண்டு கேரள அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் இந்திய ஒன்றிய அரசின் தலைவராக செயல்படும் நரேந்திர மோடி குறித்து பல்வேறு விமர்சனக் கருத்துக்களை சேர்த்து இருந்தார்கள்.

அதோடு கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துவதாகவும், ஜிஎஸ்டி வரிமுறை குறித்த விமர்சனங்களையும் குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது அம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த பி சதாசிவம் அந்த உரையில் சில விமர்சனக் கருத்துக்களை வாசிக்காமல் தவிர்த்தார்.

ஆர் என் ரவி
தமிழ்நாடு : சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் - அப்படி என்ன பேசினார் முதல்வர்?

திரிபுரா ஆளுநர் ததாகத ராய் (Tathagata Roy)

2017 ஆம் ஆண்டு திரிபுரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த ததாகத ராய் அம்மாநில அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்த வரிகளை நீக்கினார்.

மேலும் இந்தியாவில் மத ரீதியிலான சூழல் பதற்றத்திற்குள்ளாகி வருவதாகவும், இந்தியாவில் மைனாரிட்டி மக்கள் மற்றும் தலித் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், சகிப்புத்தன்மையற்ற நிலை அதிகரித்து வருவதாகவும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதையும் ததாகத ராய் வாசிக்காமல் கடந்து சென்றார்.

மேற்கு வங்க ஆளுநர் தர்மா வீரா

1969 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக தர்மா வீரா என்பவர் பொறுப்பில் இருந்தார். அப்போது ஆளுநர் உரையில் சட்டத்துக்கு முரணாக இந்திய ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி, யுனைட்டட் ஃப்ரண்ட் 1 அரசாங்கத்தைக் கலைத்தது தொடர்பான விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதை ஆளுநர் வாசிக்க மறுத்தார். அப்போதைய மேற்கு வங்க முதல்வர் அஜாய் முகர்ஜி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துவிட்டு, அக்கருத்துக்களை வாசிக்குமாறு ஆளுநரை வலியுறுத்தினார். அப்போது தர்மா வீரா அக்கருத்துகளை வாசிக்கவில்லை.

பஞ்சாப் ஆளுநர் டிசி பவதே (D C Pavate)

1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த சிரோமணி அகாலி தள் கட்சியின் முதல்வர் குர்னாம் சிங், அப்போதைய ஆளுநர் டி சி பவதேவின் கோரிக்கையை ஏற்று, ஆளுநர் உரையில் சில கருத்துகளை நீக்க ஒப்புக் கொண்டார்.

ஆர் என் ரவி
திருச்சி சிவா உருக்கம் : சிறுபான்மையினர் மனதில் பயத்தை விதைக்கக்கூடாது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com