ராஜேந்திர சோழன் : ராஜராஜனை விஞ்சிய அரசன் - வரலாறு சொல்வதென்ன?

தந்தை ராஜராஜ சோழர் கடல் கடந்து இலங்கையை மட்டுமே கைப்பற்றினர். மகனோ கடல் கடந்து இன்று இந்தோனீசியா, மலேசியா, மாலத் தீவுகள், லட்சத் தீவுகள், மனக்காவரம் என்றழைக்கப்பட்ட நிகொபார் தீவுகள் போன்ற நாடுகளையும் பகுதிகளையும் வெற்றி கொண்டார்.
கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்canva
Published on

ராஜேந்திர சோழர். இன்று 'இந்தியா' என வரையறுக்கப்படும் நிலப்பரப்பைத் தாண்டி மற்ற பல நாடுகளையும், தேசங்களையும் வென்ற வெகு சில இந்திய மன்னர்களில் ஒருவர்.

எல்லா அரச பரம்பரைகளிலும் ஒரு சில மன்னர்களின் காலத்தை மட்டும் பொற்காலம் என வரலாறு தன் பொன்னெழுத்துக்களால் பொறிக்கும். அப்படி பிற்காலச் சோழ சாம்ராஜ்ஜியத்தின் பொற்கால மன்னர் தான் ராஜேந்திர சோழர்.

இவர் வெறும் போர், படையெடுப்பு, வலுவான கடற்படை என்பதோடு சுருக்க முடியாத திறமைசாலி. வணிகம், நிர்வாகம், அரசமைப்பு என பல துறைகளில் தன் திறனை நிரூபித்து ஒழுங்கோடு அரசாட்சி செய்தவர்.

மேற்கு வங்கம் முதல் மாலத்தீவு வரை

சோழ குலத்தை உலகறியச் செய்த ராஜ ராஜ சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் மகனாகப் பிறந்த ராஜேந்திர சோழருக்கு, மதுராந்தகன் என பெயரிடப்பட்டது. போர் களத்தில் தன் வீரத்தை பறைசாற்றி தந்தை மனதில் இடம்பிடித்து, பட்டத்து இளவரசரானார்.

தந்தை ராஜராஜ சோழர் கடல் கடந்து இலங்கையை மட்டுமே கைப்பற்றினர். மகனோ கடல் கடந்து இன்று இந்தோனீசியா, மலேசியா, மாலத் தீவுகள், லட்சத் தீவுகள், மனக்காவரம் என்றழைக்கப்பட்ட நிகொபார் தீவுகள் போன்ற நாடுகளையும் பகுதிகளையும் வெற்றி கொண்டார். அதே போல கலிங்கம் (இன்றைய ஒடிசா), மேற்குவங்கம் வரை தன் ஆளுமை நிறுவினார் ராஜேந்திர சோழர். கிட்டத்தட்ட வங்காள விரிகுடா ராஜேந்திர சோழனின் நீச்சல் குளமானது எனலாம்.

மொஹம்மத் கஜினியின் படை எடுப்பை எதிர்கொள்ள, இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் மால்வா பகுதியை ஆட்சி செய்து வந்த பரமார போஜ (போஜராஜன்) என்கிற மன்னருக்கு நட்பின் அடிப்படையில் தன் படைகளை அனுப்பி உதவியதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையின் வலைத்தள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ராஜராஜனின் பக்கபலம், சாளுக்கியர்கள் வீழ்ச்சி

1012ஆம் ஆண்டு இணை அரசராக முடிசூட்டப்பட்டவர், தந்தை ராஜராஜனின் மரணத்துக்குப் பிறகு 1014 - 15 காலத்தில் சோழ வம்சத்து பேரரசராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர், 1044ஆம் ஆண்டு வரை சீறும் சிறப்புமாக ஆட்சி செய்தார்.

சோழப் பேரரசர்களில் மகத்தான மன்னர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜராஜ சோழரின் பல வெற்றிகளுக்கும், நல்ல அரசு நிர்வாகத்துக்கும் ராஜேந்திர சோழர் பக்க பலமாக இருந்தார் என தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த கல்வெட்டு ஆய்வாளர்களில் ஒருவரான குடவாசல் பாலசுப்ரமணியன் சில ஊடகங்களிடம் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு, ராஜராஜனின் கீழ், ராஜேந்திர சோழர் மாதண்ட நாயகராக பணியாற்றியதைப் பலரும் குறிப்பிடுகிறார்கள்.

சோழப் பேரரசுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலை சாளுக்கியர்களை வெற்றி கொண்டு தன் வலிமையையும், சோழ தேசத்தின் பலத்தையும் இந்திய துணைக் கண்டத்தில் பறைசாற்றினார். இவரது காலத்தில்தான் சேரர்கள் மற்றும் பாண்டியர்களை சோழப் பேரரசு முழுமையாக வெற்றி கொண்டது.

கங்கை கொண்ட சோழபுரம்
கம்போடியா அங்கோர் வாட்: பிரமிக்க வைக்கும் பொக்கிஷம் - சோழ மன்னர்கள் கட்டியதா?

கங்கைக் கொண்ட சோழபுரம்

சோழம் என்றாலே தஞ்சைதான் பலரது நினைவுக்கு வரும். பல தேசங்களில் போரிட்டு, புலிக் கொடியைப் பறக்கவிட்ட சோழப் பெரும்படைக்குத் தஞ்சை வசதியாக இல்லை. எனவே, சோழ தேசத்தின் புகழ்பெற்ற தலைநகராக விளங்கிய தஞ்சையைவிடுத்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவினார் ராஜேந்திர சோழர். தஞ்சை நகரில் தந்தை ராஜராஜ சோழர் கட்டிய திருக்கோயிலைப் போலவே ஒரு பிரமாதமான சிவன் கோயிலை தன் சோழபுரத்திலும் கட்டினார். இன்று அக்கோயில் கங்கை கொண்ட சோழபுரக் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

வலிமையான கடற்படை

ராஜேந்திர சோழர் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த இந்தியத் துணைக் கண்டத்திலேயே யாரிடமும் அத்தனை வலிமையான கடற்படை இல்லை. அந்த அளவுக்குச் சோழர்கள் கடற்படையை கட்டமைப்போடும், நுணுக்கமான போர் திறத்தோடும், கடல் சார்ந்த அறிவோடும் விளங்கினர் என பிபிசி வலைத்தள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல கடல் கடந்து சென்று மற்ற நாடுகளை வென்ற இந்திய மன்னர்களையும் அக்காலத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

விவசாயிகளுக்காக தனி அதிகார வர்க்கம்

போரில் கிடைத்த வெற்றி மற்றும் செல்வத்தைக் கொண்டு கடல் வணிகத்தை செவ்வனே மேம்படுத்தினார் ராஜேந்திர சோழர். வணிக கப்பல்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார். வணிகர்கள் சுதந்திரமாக வியாபாரம் செய்ய அனைத்து வசதிகளும் அரசு தரப்பிலிருந்து செய்து கொடுக்கப்பட்டன.

அரசு நிர்வாகத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, நிலப்பரபுக்கள், தொழிற்குழுக்கள், விவசாயிகளின் நலனை பாதுகாக்க தனி அதிகார வர்க்கம் உருவாக்கப்பட்டது.

தயார் நிலையில் போர் வீரர்கள்

10, 11 ஆம் நூற்றாண்டுகளில், போர் மூண்டால் மட்டுமே ஆட்கள் திரட்டப்படுவார்கள். நிலையாக ராணுவத்தை வைத்திருக்கும் வழக்கம் அக்காலத்தில் பிரபலமாக இல்லை என சில வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் கட்டுரைகளில் காண முடிகிறது. ஆனால் சோழப் பேரரசு இதிலிருந்து மாறுபட்டது.

எப்போதும் போருக்குத் தயாராக இருக்கும் ராணுவ வீரர்களை ஸ்டாண்டிங் மிலிட்டரி என ஆங்கிலத்தில் அழைப்பர். அப்படி சோழர்கள் எப்போதும் போருக்குத் தயார் நிலையில் இருக்க ஒரு பெரும் ராணுவப் படையைக் கட்டமைத்து வைத்திருந்தனர்.

விவசாயம், நீர் மேலாண்மை

நாட்டின் எல்லைகள் முறையாகப் பயிற்சி பெற்ற தேர்ந்த வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்பட்டது. விவசாயப் பாசனம் மற்றும் நீர் மேலாண்மைக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டது. ராஜேந்திர சோழர் காலத்தில் பெண்கள் அரசு நிர்வாகத்தில் அதிகாரிகளாக பணியாற்றினர்.

அப்பேர்பட்ட ராஜேந்திர சோழருக்கு, அவரது தந்தைக்கு சதயத் திருவிழா கொண்டாடுவது போல, மகனுக்கு ஆடி திருவாதிரைப் பெருவிழா நடத்த கடந்த 2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு முடிவு செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கங்கை கொண்ட சோழபுரம்
வருகிறார் சோழர்: தென் கிழக்கு ஆசியா வரை வெற்றி கண்ட Cholas - சோழர் வரலாறு மினி தொடர் 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com