அகரமுதல்வன் நேர்காணல் : "ஊழியின் கடைசி அத்தியாயங்கள் யாவும் அப்படித்தான் இருந்தன"

சிங்கள மக்கள் இன்று தமது யுத்தவெற்றி நாயகர்களை வெறுத்து ஒதுக்கி, ஓடச் செய்துவிட்டார்கள் என்று உலகம் நம்புவதைப் போல ஒரு ஈழரால் நம்பமுடியாது. ஏனெனில் சிங்கள ராஜதந்திரம் என்பதே “முகத்துக்கு கை ஓங்கி, அடிவயிற்றில் குத்தும்” மரபைக் கொண்டது.
அகரமுதல்வன்
அகரமுதல்வன்

Twitter

Published on

ஈழத்திலிருந்து தமிழகம் வந்து போர் நிலம் குறித்த இலக்கியங்களைப் படைத்தவர்களில் மிகவும் முக்கியமான எழுத்தாளர் அகரமுதல்வன்.

2000ம் ஆண்டிலிருந்து "அறம் வெல்லும் அஞ்சற்க" முதல் "மாபெரும் தாய்" வரை கவிதை, சிறுகதை தொகுப்புகள் எழுதியிருக்கிறார். அவரது புதிய நாவல் "கடவுள், பிசாசு, நிலம்".

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வந்த இந்த கதை விகடன் பிரசுத்தில் நாவலாக வெளியிடப்பட்டுள்ளது.

போர்காலத்தில் பிறந்தமையால் தனது பாலியகாலம் முழுவதுமே இடம் பெயர்ந்த படி இருந்தார் அகரமுதல்வன். அவரது படைப்பான கடவுள், நிலம் பிசாசு கூட ஒரு சிறுவனின் பார்வையிலேயே போர்நிலத்தை விவரிக்கிறது.

முழு நேர எழுத்தாளராகவும், சினிமா துறையிலும் பணியாற்றி வரும் இவர், சென்னை புத்தக கண்காட்சி பரபரப்புக்கு இடையில் நமக்கு அளித்த நேர்காணல்,


ஈழப் படைப்புகள் உலகளாவிய அளவில் கவனிக்கப்படும் தன்மையும் பெறுமதியும் கொண்டவை. “கடவுள் பிசாசு நிலம்” என்கிற உங்களுடைய புனைவும் அப்படியொரு கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்தக் கதைக்களத்தை தேர்வு செய்தமைக்கான காரணம் என்ன?

கடவுள் பிசாசு நிலம், ஜூனியர் விகடன் இதழில் தொடராக வந்த நாட்களிலேயே அதனை தொடர்ச்சியாக வாசித்தவர்களுள் மிகச் சிலர் வாசக அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொள்வர். அதிலொரு வாசகர் சொன்ன வாக்கியத்தை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். தமிழ்நாட்டின் வாசக மனம் கோரக்கூடிய சாகசங்களோ, முன் தீர்மானமான போர் பற்றிய காட்சிகளோ இந்தத் தொடரில் இல்லை என்பதே புதிய தன்மையாக இருக்கிறது என்றார். அது ஒருவகையில் இத்தொடருக்கு கிடைத்த ஆக்கபூர்வமான பாராட்டு. இந்தத் தொடரில் வரக்கூடிய களமும் களச்சூழலும் ஈழ இலக்கியத்தில் விரிவாகப் பேசப்படாத காலம். அது ரணில் –பிரபா அமைதி ஒப்பந்த காலம். அப்படியொரு களச்சூழலில் யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்குமாய் மாறிமாறி பயணப்படும் சிறுவனின் கண்களின் வழியாக இந்தப் புனைவு உருக்கொண்டது. போர் நிலத்தில் வாழ்ந்த சிறுவர்களின் கதைகளை எழுதவேண்டுமென்ற கனவின் தொடக்கமாக இந்தப் புனைவை விரித்துக் கொண்டேன்.

“கடவுள் பிசாசு நிலம்” புனைவின்  கடைசி அத்தியாயங்கள் துயரப்பெருக்காக, அழிவு மிகுந்தவையாக இருக்கின்றனவே?

ஊழியின் கடைசி அத்தியாங்கள் யாவும் அப்படித்தான் இருந்தன.

உங்களுடைய எழுத்துக்களில் பதிகங்களில் வருகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன. இந்தப் புனைவில் தெய்வம் முக்கிய கதாபாத்திரமாகவே அமையப் பெற்றுள்ளது. உங்கள் படைப்பூக்கத்தில் பதிகங்களும் தெய்வங்களும் எவ்வளவு முக்கியம் பெறுகின்றன?

நான் இறை நம்பிக்கை கொண்டவன். சைவ சமயத்தை பின்பற்றுபவன். “நீறில்லா நெற்றி பாழ்” என்று சொல்லி வளர்க்கப்பட்டேன். அது என்னளவில் உண்மையான உணர்வு. என்னுடைய இலக்கியத்தில் சைவப் பதிகங்கள் ஆளுமை செலுத்துவதை பெருமையாக உணர்கிறேன். இறைவனை “பித்தா பிறை சூடி” என்று அழைக்கிற ஏசுகிற மொழியையும் வல்லபத்தையும் பதிகங்கள் எனக்கு அருளுகின்றன. தெய்வம் என்றவுடன் அது கண்ணுக்குத் தெரியாத சக்தி என்றுமட்டும் கூறமாட்டேன். அருவமாயும், உருவமாயும், அருவுருமாயும் தெய்வங்களை நான் தரிசிப்பேன். தலையால் நடந்து சிவனை நோக்கி வந்த காரைக்கால் அம்மையைப் பார்த்த உமை அந்தப் பெண் யாரென்று சிவனிடம் கேட்ட போது “நம்மைப் பேணும் அம்மை காண்” என்று சொல்கிறார். உண்மையில் நம்மைப் பேணும் அம்மைகளாய் இவ்வுலகில் பல கோடித்தெய்வங்கள் இருப்பர். என்னைப் பெற்றெடுத்த  அம்மாவும் எனக்குத் தெய்வம்தான். அவள் முன்னால் அழுவேன். தொழுவேன். எழுவேன். அதுபோல எழுத்தும் தெய்வம். என் மண்ணைக் காக்க உயிர் நீத்த ஒவ்வொருவரும் தெய்வம். என்னுடைய தெய்வங்கள் எனக்கு மட்டுமல்ல, என் படைப்புகளுக்கும் முக்கியம். தெய்வங்கள் தமது வார்த்தைகளை எனது இலக்கியத்தில் ஏவி விட்டிருக்கின்றனர்.

இன்று இலங்கையில் நிலவும் அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு இனத்தை இன்னொரு இனம் கூட்டாக ஒன்று சேர்ந்து அழித்தொழிப்புச் செய்தது. இந்துசமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்பெற்ற இலங்கைத்தீவில் கொன்றொழிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மனித உயிர்கள் குறித்து உலகிலுள்ள எவருக்கும், எந்த மனித உரிமை அமைப்புக்களுக்கும் கொஞ்சம் கூட கவலையில்லை. இந்த நிலையில் கடுமையான போரைச் சந்தித்த நாடு, எதிர்கொள்ளும் மிகச் சாதாரணமான சிக்கலையே இலங்கை எதிர்கொண்டுள்ளது. அங்கே நிகழ்ந்த போராட்டங்களும், உலகமே செய்தியாகப் பார்த்த காட்சிகளும் என்னளவில் சிங்கள ராஜதந்திரத்தின் இன்னுமொரு நாடகமாக இருக்கக்கூடுமெனவே எண்ணுகிறேன். சிங்கள மக்கள் மத்தியில்  “யுத்த வெற்றிவாதம்” என்பது இனப்படுகொலைக்கு பின்பான சிங்கள நவீன அரசியலின் மூலதனமாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் இன்று தமது யுத்தவெற்றி நாயகர்களை வெறுத்து ஒதுக்கி, ஓடச் செய்துவிட்டார்கள் என்று உலகம் நம்புவதைப் போல ஒரு ஈழரால் நம்பமுடியாது. ஏனெனில் சிங்கள ராஜதந்திரம் என்பதே “முகத்துக்கு கை ஓங்கி, அடிவயிற்றில் குத்தும்” மரபைக் கொண்டது.

அகரமுதல்வன்
எழுத்தாளர் அகரமுதல்வன் நேர்காணல் : பெண்கள்தான் வரலாற்றுக்கு உரிமையுள்ளவர்கள்

கடவுள் பிசாசு நிலத்தில் வருகிற உப்புக்காடு உணர்வுரீதியான வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. உங்கள் புனைவுகளில் காட்டுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

நல்ல அவதானிப்புக்குச் சான்று இந்தக் கேள்வி. வன்னி நிலப்பரப்பு காடுகளால் அரவணைக்கப்பட்ட வளங்கள் நிறைந்த பகுதி. வன்னி வாழ்வு அதனைச் சார்ந்தே இருக்கும். காடு போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் வழங்கிய இயற்கை. அவர்களது நண்பன். அந்தவகையில் வன்னியிலுள்ள காடுகள் காலனியகாலத்தில் இருந்து மண்ணுக்காக போராடியவர்களுக்கு அரணாக நின்றிருக்கிறது. போர்த்துக்கீசர் தமிழர் மண்ணை வன்கவர் வெறியோடு ஆக்கிரமிக்கையில், அதற்கு எதிராக போராடிய வன்னியை ஆண்ட வன்னியனார்களின் படைகள் இறுதியாக மறைந்திருந்ததும் காட்டுக்குள்தான். காடு என்பது வெறுமென ஒரு நிலவியல் அடையாளமாக மட்டும் என்னால் கருதமுடியாது. அதனாலேயே காடு என்கிற சித்திரம் எனது படைப்புகளில் தொடர்ச்சியாக வருகின்றது. 

இந்தப் புனைவில் நீங்கள் கையாண்டிருக்கும் மொழியும், கூறல் தன்மையும் இதுவரைக்குமான உங்கள் படைப்புகளில் இருந்த உலகில் இல்லாமல் வேறொன்றாய் உள்ளதே?

அப்படித்தான் இருக்கவேண்டும். எல்லாக் கதையையும் ஒரே கூறல் மொழியில் சொன்னால் வாசகருக்குச் சலிப்பு நேரக்கூடும் அல்லவா. நிறைய எழுத்தாளர்கள் அப்படித்தான் தமது எழுத்துக்களை ஒரேயொரு தாளகதியில் எழுதி எழுதி கரைத்தனர். அதுபோல கரைகிற களிமண் அல்ல நானும் எனது எழுத்தும். எனது ஒவ்வொரு படைப்புக்கும் முன்னேயும் ஆயிரம் பக்க வாசிப்பு இருக்கிறது. நான் வாசகனாய் இருந்து எழுதுபவன். எனக்கு எழுத்துக்களின் நீரோட்டம் தெரியும். அதன் ஓசை விளங்கும். மு. தளையசிங்கம், எஸ்.பொ, தி.ஜா, லா.ச.ரா, ஜி.நா, கரிச்சான் குஞ்சு, ம.அரங்கநாதன், நாஞ்சில் நாடன், எஸ்.ரா, ஜெயமோகன், லக்ஷ்மி சரவணகுமார் என்ற எழுத்தாளுமைகளை முழுவதுமாய் வாசித்து, அவர்களிடம் இருந்து பயின்ற இலக்கியத்தின் செழுமையே இதையெல்லாம் நிகழ்த்த வைக்கிறது. நான் மேலே சொன்னால் எழுத்தாளுமைகளுக்கு நிகராக ஒரு கதைய எழுதவேண்டுமென்ற மனச்சவால் எல்லாம் என்னிடம் இல்லை. அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதை நான் கடைப்பிடிக்கிறேன். 

அகரமுதல்வன்
போர் நிச்சயம் முடியும், ஆனால் விலை கொடுப்பது யார்? - மனதை உருக்கும் கவிதை

நீங்கள் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் கவிதை ஒன்றை சொல்ல முடியுமா?

கவிஞர் கல்யாண்ஜியின் மிகப்பிடித்தமான கவிதைகளில் ஒன்று.

நனைவு 

வீசிவிட்டுப் போன தினசரி 

நனைந்திருந்தது சற்று.

வீசிவிட்டுப் போன பையன் 

நனைந்திருப்பான் முற்றிலும் 

எல்லோர்க்கும் எதற்குப் 

பெய்யவேண்டும் மழை?

அகரமுதல்வன்
சுப்ரமணிய பாரதி : முண்டாசுக்காரர் முத்தமிழ் கவிதை...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com