ஒரு காலத்தில் அமெரிக்க மாப்பிள்ளை போல முகத்தில் உள்ள மீசை, தாடி எல்லாம் வழித்தெடுத்துவிட்டு மொழுமொழுவென இருந்த ஆண்களுக்கு தற்போது தாடி மீசை வைத்துக் கொள்ளும் விருப்பும் அதிகரித்திருக்கிறது. தாடி மீசைக்கு பிரத்யேகமாக எண்ணெய், கிரீம், லோஷன் போட்டு பராமரிக்கத் தொடங்கியுள்ளனர்.
அது போக ராணுவம், காவல்துறை போன்ற சீருடைப் பணிகளில் இருக்கும் ஆண்களுக்கு மீசை மீது ஒரு தனி காதலே இருக்கும். தாத்தா, தந்தை வைத்திருக்கும் மீசையைப் பார்த்து மகன், பேரன்கள் மீசையை வெகு கவனமாக வளர்க்கும் கதையை எல்லாம் பார்த்திருப்போம்
இதற்கு அப்படியே நேர்மாறாக பெண்கள் என்றால் முகத்தில் ரோமங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என ஒரு பொதுப்புத்தி இப்போதும் இந்திய சமூகத்தில் நிலவுகிறது. இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது போல கேரளாவில் ஒரு விஷயம் நடந்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான ஷைஜா என்கிற பெண்மணி, கம்பீரமாக மீசை வளர்த்து வருகிறார். அதுதான் அவருக்குப் பிடித்த வசீகரமான விஷயம் என்றும் ஊடகங்களிடம் கூறியுள்ளார். இதை வெறுமனே வாய்வார்த்தைகளில் மட்டும் சொல்லாமல், வாட்ஸ் ஆப் செயலியில் தன் புகைப்படத்தைப் பதிவிட்டு "எனக்கு என் மீசையைப் பிடிக்கும்" என ஸ்டேட்டஸ் வைத்து ஒட்டுமொத்த உலகத்துக்கும் உரக்கச் சொல்லியுள்ளார்.
இந்த செய்தி மெல்ல பரவ, எதிர்பார்த்தது போலவே, ஷைஜாவை ஆதரித்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிடத் தொடங்கினர்.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் ஷைஜாவை ஒருவிதமாகப் பார்ப்பதற்கு இடையிலும், அவர் கடந்த சில ஆண்டுகளாகவே தன் மீசையை பராமரித்து வருகிறார். மற்றவர்களின் கருத்துக்கள் அவரை பாதிக்கவில்லை அல்லது அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
"ஆண்கள் தான் மீசையை வைத்துக் கொள்ள வேண்டும், ஒரு பெண் ஏன் மீசை வைத்துக் கொள்ள வேண்டும்? என என்னை விமர்சிப்பவர்கள் கூறுவர் என்கிறார் ஷைஜா. நான் என்ன வைத்துக் கொள்ள விரும்புகிறேன் விரும்பவில்லை என்பது முக்கியமில்லையா? என கேள்வி எழுப்புகிறார் ஷைஜா.
எல்லா பெண்களுக்கும் இருப்பதைப் போல ஷைஜாவுக்கும் முகத்தில் உதடுகளுக்கு மேல் லேசாக மீசை முடி இருந்தது. கண் புருவங்களை நேர்த்தி செய்து கொள்ளும் அவர், தன் மீசையை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மிக லேசாக இருந்த மீசை, மெல்ல அடர்த்தி கூடத் தொடங்கி பார்ப்பவர்களுக்கு ஷைஜாவின் முகத்தில் மீசை இருப்பது அப்பட்டமாகத் தெரியத் தொடங்கியது. மெல்ல தன் முகத்தில் இருக்கும் மீசையை அவர் விரும்பத் தொடங்கினார்.
"இப்போது, என் மீசை இல்லாமல் நான் வாழ்வதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கிய போது, என் முகத்தை மறைக்கும் என்பதால், எப்போதும் முகக்கவசத்தை அணிந்து கொள்ள நான் விரும்பவில்லை" என ஷைஜா பத்திரிகைகளிடம் கூறியுள்ளார்.
பலரும் ஷைலஜாவிடம் மீசையை எடுத்துவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால் ஷைஜா அதற்கெல்லாம் பெரிதாக செவிசாய்க்கவில்லை. தன் முகத்தில் மீசை இருப்பதால், தான் அழகாக இல்லை என்கிற எண்ணம் அவருக்கு துளி கூட இல்லை என அவரே ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
இப்படி ஒரு அபார நம்பிக்கையோடு ஷைஜா இருப்பதற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கொடுக்கும் ஆதரவு ஒரு முக்கிய காரணம் என்றால், கடந்த 10 ஆண்டுகளில் அவர் 6 அறுவை சிகிச்சைகளை எதிர்கொண்டு அதே உற்சாகத்தோடு இப்போதும் உலகை எதிர்கொள்வது மற்றொரு முக்கிய காரணம் என ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
மார்பகத்தில் ஒரு கட்டியை நீக்க அறுவை சிகிச்சை, கருப்பையில் ஏற்பட்ட கட்டிக்கு ஒரு ஆபரேஷன், சில ஆண்டுகளுக்கு முன் கருப்பை நீக்கத்துக்கு hysterectomy போன்ற அறுவை சிகிச்சைகள் இதில் அடக்கம்.
ஒவ்வொரு முறை அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வரும் போது, மீண்டும் அறுவை சிகிச்சை அறைக்கு நான் செல்லக் கூடாதெனக் கருதுவேன் என்கிறார் ஷைஜா. இனி அவர் உடல் நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளாமல் இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம். ஷைஜாவின் கம்பீர மீசைக்கு நம் ராயல் சல்யூட்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust