2021 ஆம் ஆண்டில் உலகின் மிக ஏழ்மையான நாடுகள் உலக வங்கியின் உலக வளர்ச்சிக் குறிகாட்டிகளால் (WDI) தீர்மானிக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளின் மொத்த உள்நாட்டு வருமானம் (GDI) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைவாக உள்ளது. வறுமை, கல்வி, சுத்தமான நீர் மற்றும் உணவு, வீடு மற்றும் வாழ்வதற்கான பல வளங்களின் பற்றாக்குறை இந்நாடுகளை ஏழ்மை நாடுகளாக காட்டுகிறது.
இந்நாடுகளில் வசிக்கும் பல பத்து இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். இது குறித்து ஐ.நா.சபை பல முறை கடந்த ஆண்டுகளில் எச்சரித்திருக்கிறது. இருப்பினும் முன்னேறிய நாடுகள் எவையும் இது குறித்து செவிசாய்க்கவில்லை.
இந்த உலகில் பணம் நமது வாழ்நிலையின் தரத்தை தீர்மானிக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உலகின் மிகப்பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் போது பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவின்றி தவிக்கிறார்கள். இதுதான் பலநாடுகளின் யதார்த்தம்.
இந்த உலகில் பொருளாதாரம் மற்றும் செல்வ வேறுபாடு வியக்க வைக்கிறது. அமெரிக்காவில் தனிநபர் ஆண்டு வருமானம் 55,000 டாலர் என்றால் வறிய நாடுகளில் இது 2,000 டாலர்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட 25 மடங்கு குறைவு. இந்த ஏழை நாடுகளில் பணக்கார நாடுகளை விட விலைவாசி குறைவாக இருந்தாலும அதைக்கூட வாங்குவதற்கு வழியின்றி மக்கள் வருமானமின்றி இருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் பொருளாதார வருமானத்தை அளவிட, அவர்களின் GNI கணக்கிடப்பட வேண்டும். மொத்த தேசிய வருமானம் அல்லது GNI என்பது ஒரு நாட்டின் இறுதி வருமானத்தை அதன் தற்போதைய மக்கள் தொகையால் வகுக்கப்படுவதால் கிடைக்கும். இதை அமெரிக்க டாலரில் குறிப்பிடுகிறார்கள். ஒரு டாலர் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 75 ரூபாய்.
உலக வங்கியின் கூற்றுப்படி, 1,026 டாலருக்கும் குறைவான தனிநபர் வருமானம் ஈட்டும் நாடுகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளாகக் கருதப்படுகின்றன. தொற்றுநோய்களின் போது உலகளாவிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், சில நாடுகள் மற்றவர்களை விட கடுமையாக பாதிக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டில் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் பத்து நாடுகள் கீழே உள்ளன.
மத்திய ஆபிரிக்கக் குடியரசின் GNI உலகின் எந்த நாட்டை விடவும் குறைவாக உள்ளது. இது நாட்டை நீண்ட காலமாக ஆண்ட பிரான்ஸ் நாட்டின் காலனிய ஆட்சியோடு தொடர்புடையது. இந்நாடு 1960 இல் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது. காலனிய ஆடசிக் கொடுமைகளோடு விடுதலை பெற்ற பிறகு ஆட்சிக் கவிழ்ப்புகள், மத வன்முறைகள் மற்றும் ஊழல் நிறைந்த அரசாங்க அதிகாரிகள் போன்ற பல காரணங்களால் இந்நாடு சிதைக்கப்பட்டுள்ளது.
1994 இல் துட்சிகளுக்கும் ஹுட்டு மக்களுக்கும் இடையே நடந்த கொடூரமான 12 ஆண்டுகால உள்நாட்டுப் போர், நாட்டை தலைமுறை தலைமுறையாகப் பின்னுக்குத் தள்ளியது. புருண்டியின் பொதுத்துறை உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த துறைகளில் ஒன்றாகும். நாட்டின் மக்கள்தொகையில் 10% க்கும் குறைவானவர்கள் மட்டுமே மின்சாரம், நவீன தொழில்நுட்பம் மற்றும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
DCR – காங்கோ என்பது தாமிரம், வைரம் மற்றும் பிற கனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. இருப்பினும், நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர்கள் 60 இலட்சத்திற்கும் அதிகமான இறப்புகளையும் இடப்பெயர்வையும் ஏற்படுத்தியுள்ளன. ஊழல் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாதது நாட்டின் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
1960 ஆம் ஆண்டில் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற நைஜரின் பொருளாதாரம் அப்போதிலிருந்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் தொகையில் 80% த்திற்கும் அதிகமானோர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இங்கே மின்சாரம் அல்லது மருத்துவமனைகள் போன்ற முக்கிய வசதிகள் ஏதுமில்லை. இந்நாடு நீண்ட காலமாக நிலையற்ற தன்மை மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் கூட பெரும்பாலும் சேரிகளில் வாழ்கின்றனர். இருப்பினும் நைஜர் நாடு 2017 இல் 4.9% பொருளாதார வளர்ச்சியைக் கண்டது.
மலாவியில் 70%க்கும் அதிகமான மக்கள் தொகை ஒரு நாளைக்கு ரூ.150க்கும் குறைவான வருமானத்தை நம்பியே வாழ்கின்றனர். மற்ற வறிய நாடுகளைப் போல மலாவியும் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளது. நாட்டில் உள்ள பல குடும்பங்களின் முக்கிய வருமானம் விவசாயம்தான். எச்ஐவி போன்ற வைரஸ் நோய்களின் தொடர்ச்சியான பரவல் நாட்டின் மக்கள் தொகை மற்றும் இறப்பு விகிதத்தையும் பெரிதும் பாதித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் பழமையான இக்குடியரசு இன்னும் வறுமைக்கு எதிராக போராடி வருகிறது. மேலும் இது போன்ற வறிய நாடுகளின் பட்டியல்களில் நீண்ட காலமாக இடம்பிடித்துள்ளது. 2003 இல் உள்நாட்டுப் போரின் முடிவு ஓரளவு அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வந்துள்ளது. ஆனால் குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க அது போதுமானதாக இல்லை. ஊழல் நிறைந்த அரசாங்க அமைப்புகள் தங்கள் குடிமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன, மேலும் 2014 இல் மேற்கு ஆபிரிக்காவைத் தாக்கிய எபோலா தொற்றுநோய் லைபீரியாவையும் வெகுவாகப் பாதித்துள்ளது.
மொசாம்பிக் நாடு முன்னாள் போர்த்துகீசிய காலனியாக இருந்தது. வளமான விளை நிலம், இயற்கை எரிவாயு மற்றும் போதுமான நீர் ஆகியவற்றின் ஆதாரமாக இந்நாடு இருந்து வருகிறது. ஆனால் 1992 இல் முடிவடைந்த 15 ஆண்டுகால உள்நாட்டுப் போர் நாட்டை சிதைத்திருக்கிறது. தீவிர காலநிலை நிலைமை மாற்றங்கள் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவை நாட்டின் வளர்ச்சியைத் தொடர்ந்து தடுக்கின்றன. 2017 முதல், இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்களும் நாட்டின் வடக்குப் பகுதிகளை அச்சுறுத்தி வருகின்றன. இருப்பினும், பில்லியன் கணக்கான மதிப்புள்ள சமீபத்திய பிரெஞ்சு முதலீடுகள் இந்நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை சற்றே அளிக்கிறது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மடகாஸ்கர் உலகின் நான்காவது பெரிய தீவாகும். இத்தீவின் வளமான காடுகளும் வன விலங்குகளும் பல ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களில் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலா போதுமானதாக இல்லை. பெரும்பாலான உள்ளூர்வாசிகள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் இருப்பிடம் காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. சமீப ஆண்டுகளில் வன்முறை சதிப்புரட்சிகள் மற்றும் ஊழலையும் நாடு சந்தித்து வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற நாடுகளைப் போலவே, சியரா லியோனும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதன் வைரங்கள் மற்றும் தாதுக்கள் பெரும் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் ஊழல் நிறைந்த பொதுத் துறையும் அவர்களின் ஏழ்மையான நிலையை மாற்ற எதுவும் செய்யவில்லை. எபோலா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்று.
ஆப்கானிஸ்தான் சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டு நீண்டகாலப் போரை சந்தித்த நாடாக இருக்கிறது. நாட்டில் நிலவும் உள்நாட்டு மற்றும் அரசியல் அமைதியின்மை காரணமாக, முறையான மற்றும் அர்த்தமுள்ள பொருளாதார முதலீடுகள் மற்றும் வளர்ச்சியை அடைவது கடினமாக உள்ளது. இன்று அமெரிக்க இராணுவம் வெளியேறி தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தாலும் உள்நாட்டுப் போர் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp