உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக்கில் மத்திய டோங்கா தீவுகள் இருக்கின்றன. இப்பெருங்கடலில் ஹோம் ரீஃப் வால்கனோ என்கிற பெயரில் ஒரு எரிமலையும் இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன் வெடித்த இந்த எரிமலையின் குழம்பு கடலின் மேற்புறத்தில் வந்து குளிர்ந்த நீரைத் தொடுவதால் ஒரு சிறு தீவு போன்ற இடம் உருவானது.
எரிமலையிலிருந்து குழம்பு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்ததால், நிலப்பரப்பின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, எரிமலை வெடிப்பினால் உருவான தீவின் அளவு சுமார் 4,000 சதுர மீட்டராகவும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 மீட்டர் உயரமாகவும் இருந்தது. ஆனால் கடந்த வார செவ்வாய்க்கிழமை இந்த தீவின் நிலப்பரப்பு 24,000 சதுர மீட்டாராக அதிகரித்துள்ளதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திகையில் வெளியாகி இருக்கும் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோம் ரீஃப் எரிமலை கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி வெடித்தது. அப்போதிலிருந்து எரிமலைக் குழம்பு தொடர்ந்து வெளியாகி வந்தது, கடந்த வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தது.
தற்போது டோங்கா எரிமலை விமானச் சேவை நிறுவனங்களுக்குக் குறைவான அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும், வாவா ஹாபாய் (Vava’u and Ha’apai) தீவுகளில் வாழும் மக்களுக்கும் பெரிய அபாயத்தை ஏற்படுத்தாது என்றும் டோங்கா புவியியல் சேவை தன் முகநூல் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கண்ணில் புலப்படும் வகையில் சாம்பலைக் கக்கவில்லை என்றும், கப்பலோட்டிகள் ஹோம் ரீஃப் எரிமலையிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஹோம் ரீஃப் எரிமலை வெடிப்பினால் உருவாகியுள்ள இந்த சிறு நிலப்பரப்பு நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்காமல் போகலாம் என நாசா புவி கண்காணிப்பகம் கூறியுள்ளது.
பொதுவாக இது போன்ற எரிமலை வெடிப்புகளினால் உருவாகும் சிறு தீவுகள் கொஞ்ச காலத்திலேயே காணாமல் போய்விடும் என கூறியுள்ளது.
ஹோம் ரீஃப் எரிமலை இதுவரை நான்கு முறை வெடித்துள்ளது. இதில் 1852 மற்றும் 1857 ஆகிய இரு ஆண்டுகளில் வெடித்த நிகழ்வுகளும் அடக்கம். இந்த இரு வெடிப்புக்குப் பிறகு தற்காலிகமாக சில சிறு தீவுகள் தோன்றின. 1984 மற்றும் 2006ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெடிப்பின் போது உருவான தீவுகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 50 - 70 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தன.
லாடெ இகி (Late’iki Volcano) எரிமலை வெடித்து 12 நாட்கள் குழம்பு வெளியாகி உருவான ஒரு சிறு தீவு இரு மாதங்களில் கரைந்து காணாமல் போனது. 1995ஆம் ஆண்டு எரிமலை வெடிப்பில் உருவான தீவு ஒன்று கடந்த 25 ஆண்டுகளாக நிலைத்து நின்றது நினைவுகூரத்தக்கது.
நியூசிலாந்து முதல் டோங்கா வரையிலான கடல் முகடுகளில்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கடலடி எரிமலைகள் இருக்கின்றன. இந்த கடலடி முகடுகளில் தான் ஹோம் ரீஃப் எரிமலையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust