தோராயமாக 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மன்னன் உலக நாடுகளை வென்று தனது பேராற்றலை நிரூபித்தான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அவர்தான் வரலாற்றில் அலெக்சாண்டர் தி கிரேட் என்று அழைக்கப்படும் மாவீரன் அலெக்சாண்டர்.
இன்றைக்கு உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் நாகரீக வளர்ச்சியின் அடிச்சுவடுகள் பண்டைய கிரேக்கத்தில் தோன்றியவை என்று சொன்னால் மிகையில்லை. அப்படிப்பட்ட கிரேக்கத்தின் மாசிடோனியாவின் ஆட்சியாளராக துவங்கிய அலெக்சாண்டர் விரைவிலேயே உலகை தனது இராணுவ பலத்தால் வலம் வந்தார். பண்டைய உலகம் இதுவரை கண்டிராக மிகப்பெரும் பேரரசை நிறுவினார். மொத்தம் 12 ஆண்டுகளில் அவர் 12,000 மைல்கள் படை நடத்தி தனது வெற்றியை உலகம் முழுவதும் பதித்துச் சென்றார்.
உலக வரலாற்றின் மிகச் சிறந்த இராணுவ வல்லுநராக அலெக்சாண்டர் போற்றப்படுகிறார். தனது இராணுவத்தை இரக்கமற்றதாகவும், அதிகாரப்பசி கொண்டதாகாவும், தனக்கு விசுவாசமாக இருக்குமாறும் அமைத்துக் கொண்டார். அதனால்தான் பல ஆண்டுகள் அவரது இராணுவம் அவரைப் பின் தொடர்ந்து சென்றது. வெற்றி அல்லது வீர மரணம் இவை இரண்டைத் தாண்டி அலெக்ஸ்சாண்டரின் இராணுவத்திற்கு வேறு வாழ்க்கை கிடையாது.
மாவீரன் அலெக்சாண்டர் இறக்கும் முன்பு ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தை ஒன்றிணைப்பதை சாத்தியமாக்க முடியவில்லை என்றாலும் அவரது செல்வாக்கு ஐரோப்பா துவங்கி ஆசியா வரை ஆழமாக பதிந்தது. அந்த வரலாற்றுக் காலத்தை ஹெலனிஸ்டிக் காலம் என்று அழைக்கிறார்கள்.
கிமு 323 -ல் அலெக்சாண்டர் இறந்ததற்கும் ரோமானியப் பேரரசின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட மத்திய தரைக்கடல் வரலாற்றின் காலப்பகுதியை ஹெலனிஸ்டிக் காலம் குறிக்கிறது.
அலெக்சாண்டர் கிமு 356 இல் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் கிரேக்க தீபகற்பத்தின் வடக்கிலிருந்த மாசிடோனியா நாட்டின் பெல்லாவில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் பிலிப் 3, தாயார் ராணி ஒலிம்பியாஸ்.
தந்தையார் பிலிப் கிரேக்க தீபகற்பத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாசிடோனியாவை ஒரு முக்கியமான நாடாக மாற்றினார். மேலும் அவர் பிரம்மாண்டமான பாரசீக சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றுவது பற்றி கற்பனையும் கொண்டிருந்தார். இந்தக் கனவு பின்னர் தனயனுக்கும் பற்றிக் கொண்டது.
அலெக்ஸ்சாண்டர் தனது 12வது வயதில் காட்டுக்குதிரையான புசெஃபாலஸை அடக்கினார். இந்தக் குதிரைதான் பின்பு அலெக்சாண்டரின் பெரும்பகுதி போர்க்கால வாழ்க்கையில் உற்ற துணைவனாக அவருடன் வலம் வந்தது.
அலெக்சாண்டருக்கு 13 வயதாக இருந்த போது தந்தையார் பிலிப், கிரேக்கத்தின் சிறந்த தத்துவஞ்ஞானியாக இருந்த அரிஸ்டாட்டிலை தனது மகனுக்கு கல்வி கற்க அழைத்து வந்தார். வரலாற்றில் புகழ்பெற்ற அரிஸ்டாட்டிலும் மாணவன் அலெக்சாண்டருக்கு இலக்கியம், அறிவியல், மருத்துவம், தத்துவம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தார். ஒரு பேரரசன் வீரானக மட்டுமல்ல விவேகமானவனாகவும் இருக்க வேண்டும் என்பதை அரிஸ்டாட்டில் பூர்த்தி செய்தார்.
தனது தந்தை உயிருடன் இருக்கும் போது அலெக்சாண்டர் சிறுவயதிலேயே போர்களில் பங்கு பெற்றார். கி.மு. 336-ல் அவரது தந்தை பிலிப், அவரது மெய்க்காப்பாளர் பௌசானியாஸால் படுகொலை செய்யப்பட்டார். ஆகவே அலெக்சாண்டர் வெறும் 20 வயதிலேயே மாசிடோனியாவின் அரியணையைக் கைப்பற்றினார். கூடவே தனது பதவிக்குப் போட்டியாளர்களாக இருந்து சவால் விட்டவர்களைக் கொன்று தனது பதவியை உறுதி செய்து கொண்டார்.
மாசிடோனியாவில் அமைதியைக் கொண்டு வந்த அலெக்சாண்டர் பின்னர் தனது தந்தையில் அடிச்சுவடுகளைப் பின்பற்றி உலகை வென்று வர புறப்பட்டார். முதலில் இராணுவத் தளபதி அண்டிபேட்டரை மாசிடோனியாவின் தற்காலிக ஆட்சியாளராக அலெக்சாண்டர் நியமித்தார். பின்னர் பாரசீகத்தை நோக்கி தனது படையுடன் சென்றார். கிரானிகஸ் நதியில் அவர் பாரசீக மற்றும் கிரேக்கப் படைகளை வென்றார்.
பிறகு தெற்கு நோக்கிச் சென்று சர்தேஸ் நகரத்தை எளிதில் கைப்பற்றினார். கி.மு. 333இல் அலெக்சாண்டரும் அவரது படையும் தெற்கு துருக்கியில் உள்ள இசுஸ் நகருக்கு அருகில் மூன்றாம் டேரியஸ் மன்னரின் தலைமையிலான ஒரு பெரிய பாரசீக இராணுவத்தை எதிர் கொண்டனர். அலெக்சாண்டரின் படைகள் எண்ணிக்கையில் பாரசீக படையை விட சிறியது. என்றாலும் அனுபவத்திலும், பழிவாங்கும் உணர்விலும் அது தீவிரமான படையாகும். இப்போரில் அலெக்சாண்டர் வெற்றியடைவார் எனத் தெரிந்ததும், டேரியஸ் மன்னன் தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டுவிட்டு எஞ்சியிருந்த படைகளுடன் தப்பி ஓடினார். இதனால் வருத்தமடைந்த அவரது தாயார் சிசிகாம்பிஸ், அலெக்சாண்டரைத் தனது மகனாக ஏற்றுக் கொண்டார். இப்படி பெரும் இழப்புகள் இல்லாமலே இந்த வெற்றியை அலெக்சாண்டர் வசப்படுத்தினார்.
இதற்கடுத்து அலெக்சாண்டர் ஃபீனிசிய நகரங்களான மராத்தஸ் மற்றும் அரடாஸைக் கைப்பற்றினார். மேலும் பைப்லோஸ் மற்றும் சிடோன் நகரங்களை வென்று தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார். கிமு 332 ஆம் ஆண்டில் அவர் டயர் தீவை முற்றுகையிட்டாலும் அலெக்சாண்டரிடம் ஒரு கடற்படை இல்லை. டயர் தீவிற்கு அவர் ஒரு தரைப்பாதை அமைக்க முயன்றாலும் அவை தோல்வியில் முடிந்தது. எனவே ஒரு கடற்படையின் தேவையை உணர்ந்த அலெக்சாண்டர் பின்னர் ஒரு பெரும் கடற்படையைக் குவித்தார். இறுதியில் ஜூலை 332-ல் டயர் தீவின் நகரக் கோட்டைச் சுவர்கள் உடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான டைரியர்கள் தூக்கிலிடப்பட்டனர். பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர். தான் ஒரு ராஜதந்திரி என்பதோடு ஒரு இரக்கமற்ற படையெடுப்பாளன் என அலெக்சாண்டர் இதில் நிறுவினார்.
பல வார முற்றுகைக்குப் பிறகு அவர் எகிப்து நாட்டை வென்றார். அங்கே தனது பெயரைக் கொண்ட நகரமான அலெக்சாண்ட்ரியாவை உருவாக்கினார். கிமு 331இல் அவரது படைகள் கௌகமேலாவில் டேரியஸ் மற்றும் அவரது பாரியைப் படைகளை எதிர்கொண்டார். இரு தரப்பிலும் கடுமையான சண்டையும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. தப்பி ஓடிய டேரியஸ் தனது சொந்த துருப்புக்களால் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறாக டேரியஸை ஒழித்து விட்டு அலெக்சாண்டர் தன்னை பாரசீக அரசனாக அறிவித்துக் கொண்டார்.
பெர்சியர்களிடம் நம்பகத் தன்மையைப் பெற அலெக்சாண்டர் பல பாரசீக பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தார். பாரசீகரைப் போல ஆடை அணியத் துவங்கினார். பாரசீக நீதிமன்ற வழக்கமான மற்றவர்களின் தரத்தைப் பொறுத்துக் குனிந்து கையை முத்தமிடும் ப்ரோஸ்கினெசிஸ் பழக்கத்தை அவர் கடைப்பிடிக்கத் துவங்கினார்.
இந்த மாறுபட்ட பழக்கங்கள் அலெக்சாண்டரின் சொந்த ஊரைச் சேர்ந்த சில மாசிடோனியர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் அலெக்சாண்டரை கொல்ல சதி செய்தனர். அவர்களைக் கண்டுபிடித்து அலெக்சாண்டர் படுகொலை செய்தார். தனது மதிப்புமிக்க ஜெனரல்களில் ஒருவரான பார்மெனியோவை கிமு 330இல் கொலை செய்ய உத்தரவிட்டார். பார்மேனியோவின் மகன் பிலோட்டஸ் அலெக்சாண்டருக்கு எதிராக சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டார்.
அதே போன்று மற்றொரு தளபதியும் தனது நெருங்கிய நண்பருமான கிளீடசையும் அலெக்சாண்டர் ஈட்டியால் குத்திக் கொன்றார். இது அலெக்சாண்டர் குடிபோதையில் கொன்ற ஒன்று என சில வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். எனினும் இந்த சம்பவம் அலெக்சாண்டர் வாழ்க்கை முழுவதும் அவரை அலைக்கழித்தது.
கிமு 327 இல் அலெக்சாண்டர் இந்தியாவின் வடமேற்கிலிருந்த பஞ்சாப் மீது படையெடுத்தார். அங்கிருந்த சில பழங்குடியினர் சரணடைந்தனர். சிலர் எதிர்த்துப் போராடினர். கிமு 326இல் அலெக்சாண்டர் பௌரவ அரசர் போரஸை ஹைடாஸ்பெஸ் நதியில் சந்தித்தார்.
போரஸின் இராணுவம் அலெக்சாண்டரின் இராணுவம் போல பெரும் போர் அனுபவம் இல்லாதது. ஆனால் அவர்களிடம் அலெக்சாண்டரிடம் இல்லாத யானைப்படை இருந்தது. இதனால் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும் இறுதியில் அலெக்சாண்டர் வெற்றியடைந்தார். போரஸ் தோற்கடிக்கப்பட்டார்.
இங்குதான் அலெக்சாண்டரின் அன்புக்குரிய குதிரையான புசெபாலஸ் மரணமடைந்தது. இக்குதிரை போர்க்காயங்களால் இறந்ததா இல்லை முதுமையால் இறந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தனது அன்புக்குரிய குதிரையின் பெயரை ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் சூட்டினார். அதுதான் புசெபலா நகரம்.
அலெக்சாண்டர் இந்தியா முழுவதையும் கைப்பற்ற விரும்பினாலும் பல ஆண்டுகள் போரில் கழித்த அவரது போர் வீரர்கள் சோர்வுற்று மறுத்து விட்டனர். அவர்கள் பெர்சியாவிற்கு திரும்பும்படி கோரினர். அதன்படி அலெக்சாண்டர் தனது படையை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை பெர்சியாவிற்கும், மறுபாதியை சிந்து நதிக்கு மேற்கில் உள்ள வெறிச்சோடியப் பகுதியான கெட்ரோசியாவிற்கும் அனுப்பினார்.
கிமு 324இன் ஆரம்பத்தில் அலெக்சாண்டர் பெர்சியாவின் சூசா நகரத்தை அடைந்தார். அங்கு அவர் பெர்சியர்களையும் மாசிடோனியர்களையும் ஒன்றிணைத்து தனக்கு மட்டுமே விசுவாசமான ஒரு புதிய இனத்தை உருவாக்க விரும்பினார். பாரசீக இளவரசிகளைத் திருமணம் செய்யுமாறு தனது தளபதிகளுக்கு உதிரவிட்டார். அதே போன்று அவரும் இரண்டு பெண்களை மணம் செய்து கொண்டார்.
மாசிடோனிய இராணுவம் தங்கள் கலாச்சாரத்தை மாற்ற விரும்பிய அலெக்சாண்டரின் முயற்சியை எதிர்த்து கலகம் செய்தது. ஆனால் அலெக்சாண்டர் உறுதியாக இருந்ததால் இராணுவம் பின்வாங்கியது. இவ்வாறு இரு இனங்களும் ஒன்று கலந்தன. இதற்காகவே அவர் ஒரு பெரும் நல்லிணக்க விருந்தையே நடத்தினார்.
கிமு 323 வாக்கில் அலெக்சாண்டர் ஒரு மகத்தான சாம்ராஜ்ஜியத்தின் தலைவராக இருந்தார். அப்போதும் அவர் உலக மேலாதிக்கத்திற்கான போர்களை நிறுத்தவில்லை. அவர் அரேபியத் தீபகற்பத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டங்களைத் தொடங்கினார். ஆனால் கடுமையான போருக்குப் பிறகு காயமடைந்த அலெக்சாண்டர் எனும் மாவீரன் கிமு 323 ஜூன் மாதத்தில் தனது 32ஆவது வயதில் மரணமடைந்தார்.
அலெக்சாண்டர் மலேரியா அல்லது வேறு இயற்கை காரணங்களால் இறந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் அவர் விஷம் குடித்து இறந்ததாகக் கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் அவர் தனக்குப் பிறகு ஒரு வாரிசு என்று யாரையும் விட்டுச் செல்லவில்லை. அதனால் அவரது மறைவிற்குப் பிறகு அவரது பேரரசைக் கைப்பற்றுவதற்கு இரத்தக்களரியான பல மோதல்கள் நடைபெற்றது. அதனாலேயே அவரது பேரரசு சிதறுண்டு போனது.
அலெக்சாண்டரால் கைப்பற்றப்பட்ட பல பகுதிகளில் கிரேக்கச் செல்வாக்கு ஏற்பட்டதோடு அது தொடரவும் செய்தது. அவர் நிறுவிய பல நகரங்கள் இன்றும் முக்கியமான கலாச்சார மையங்களாக இருக்கின்றன. அவரது இறப்பிலிருந்து கிமு 31 வரையிலான காலம் ஹெலனிஸ்டிக் காலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் கிரேக்க மொழி பேசுவது அல்லது கிரேக்கர்களுடன் அடையாளம் காண்பது என்பதாகும். அந்த வகையில் அலெக்சாண்டர் தி கிரேட் எனும் இந்த மாவீரன் பண்டைய உலகம் உருவாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். இருபது வயதில் உலகை வெல்லத் துவங்கிய அவரது பயணம் 32 வயதில் முடிந்தாலும் இன்றளவும் அவரது சாதனைக்குச் சவால் விடுவதற்கு வரலாற்றில் யாருமில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust