கடந்த ஆண்டு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகிய போது ஒரு குழப்பமான நிலை நிலவியது. அப்போது அதிபர் ஜோ பைடன் தனது நிர்வாகம் புதிய தாலிபான் தலைமையிலான ஆட்சியை பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக மாற்ற அனுமதிக்காது என்று உறுதியளித்தார்.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், சிஐஏ அதிகாரிகள் முதலில் அதிபர் பைடனின் ஆலோசகர்களுக்கு விளக்கமளித்தனர். பின்னர் அதிபர் பைடனுக்கே நேரடியாக இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி அல்-கொய்தா தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பல உளவுத்துறைகள் வலையமைப்பின் மூலம் கண்டறிந்ததாக அவருக்குத் தெரிவித்தனர்.
ஜவாஹிரி இருந்த வீட்டில் ஒரு பெண்ணின் தனித்துவமான நடத்தையை வைத்து அவரை ஜவாஹிரியின் மனைவி என உளவாளிகள் கண்டுபிடித்தனர். அதே போன்று வீட்டில் வசிக்கும் மற்றவர்கள் நடந்து கொள்ளும் தனித்துவமான நடத்தை முறைகளில் இருந்து உளவாளிகள் இந்த வீடு ஜவாஹிரியின் புகலிடமாக இருக்குமென்று உறுதி செய்தனர்.
காபூலில் உள்ள தனது கணவரின் பாதுகாப்பு இல்லத்திற்கு யாரையும் அழைத்துச் செல்வதைத் தவிர்க்கும் முயற்சியில் ஜவாஹிரியின் மனைவி நடந்து கொண்ட முறை உளவாளிகளின் முடிவை மேலும் உறுதிப்படுத்தியது.
வீட்டிற்கு வந்த பிறகு, ஜவாஹிரி தனிப்பட்ட முறையில் வளாகத்தை விட்டு வெளியேறவில்லை என்பதை உளவாகள் கவனித்தனர். ஆனால், வீட்டின் ஒரு பால்கனியில் குறுகிய காலத்திற்கு அவ்வப்போது தோன்றும் அவரது பழக்கத்தை உளவாளிகள் கவனித்தனர்.
அதிபர் பைடனைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் மிகவும் தேடப்பட்ட மனிதர்களில் ஒருவரைக் கொல்லும் வாய்ப்பு ஆபத்து நிறைந்ததாக இருந்தது.
இதற்கு முன்னர் ஜவாஹிரி காபூலில் ஒரு அடர்ந்த குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார். அப்போது அவரைக் குறிவைத்து அமெரிக்கா தாக்கிய ட்ரோன் தாக்குதலில் ஒரு உதவி ஊழியர் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 10 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தவறு அதிபர் பைடனின் மனதில் ஒரு தயக்கத்தை உருவாக்கியிருக்கலாம். ஏனெனில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தி அது தவறாகி அப்பாவி மக்கள் கொல்லப்பட்டால் அமெரிக்கா அதை நியாயப்படுத்த முடியாது.
அதிபர் பைடனின் வெள்ளை மாளிகையைப் பொறுத்த வரையில், பல பத்தாண்டுகளாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட கருத்துக்கள் இருந்தன.
ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, அதிபரின் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்கள் அவரை அணுகி, உளவுத்துறை அதிகாரிகள் அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாஹிரியை ஆப்கானிஸ்தானில் கண்டுபிடித்திருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.
மேற்கத்திய நாடுகளது அரசாங்கத்தின் சரிவைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு ஜவாஹிரி திரும்பியதாக தாங்கள் நம்பியதை அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகப் பிரமுகர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகியதைத் தொடர்ந்து அல் கொய்தா தலைவர்கள் மெதுவாக மீண்டும் ஆப்கானிற்கு வரத்துவங்கினார்கள். அதை அமெரிக்க உளவாளிகள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்ததாக அதிபர் பைடனின் ஆலோசகர் கூறினார்.
ஜவாஹிரி தனது மனைவி மற்றும் மகளுடன் காபூல் நகரத்தில் உயரமான, பாதுகாப்புச் சுவர்களைக் கொண்ட ஒரு பெரிய வளாகத்தில் குடியேறியதாகக் கூறப்படுகிறது.
ஜவாஹிரி தேர்ந்தெடுத்த சுற்றுப்புறத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. தாலிபான்களுக்கு முந்தைய அமெரிக்க ஆதரவு அரசு இருந்த போது இந்த சூர்பூர் பகுதியில் அமெரிக்கா உள்ளிட்டு பல வெளிநாட்டு தூதரகங்கள் செயல்பட்டன. அமெரிக்கா விலகியதை அடுத்து வெளிநாடுகள் இந்த தூதரகங்களை காலி செய்து விட்டன. இப்போது, தாலிபானின் பெரும்பாலான மூத்த அதிகாரிகள் இந்த தூதரகங்கள் இருந்த சூர்பூர் பகுதியில்தான் வாழ்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க மே மற்றும் ஜூன் மாதம் முழுவதும், அமெரிக்க அதிபர் உக்ரைனில் நடந்த போரில் கவனம் செலுத்தினார். மேலும் அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த முக்கிய சட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் ரகசியமாக "மிகச் சிறிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட" உயர் புலனாய்வு அதிகாரிகள் குழு அவருக்கு ஜவாஹிரியைத் தாக்கும் திட்டங்கள் குறித்து பல வாய்ப்புகளை தயாரித்து முன்வைத்தது.
ஜவாஹிரியின் குடும்பத்தினர் மற்றும் தாலிபான் அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் தற்செயலாக தாக்குதலில் கொல்லப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு அதிபர் பைடென் உளவுத்துறை அதிகாரிகளை பணித்தார்.
ஜூலை 1 ஆம் தேதி, திரு பைடென் சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் அவரில் ஹெய்ன்ஸ் உட்பட பல உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
உளவுத்துறை அதிகாரிகள் வெள்ளை மாளிகைக்குக் கொண்டு வந்த ஜவாஹிரியின் வீட்டின் சிறு மாதிரியைச் சுற்றி அதிபரும் அவரது ஆலோசகர்களும் உளவுத்துறை அதிகாரிகள் கூறிய விளக்கங்களைக் கேட்டு வந்தனர்.
"எடுக்கப் போகும் நடவடிக்கை ஆபத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்வதில் அதிபர் குறிப்பாக கவனம் செலுத்தினார்" என்று மூத்த ஆலோசகர் ஒருவர் கூறினார்.
வார இறுதி விடுமுறைக்காக கேம்ப் டேவிட்டிற்குச் செல்வதற்கு முன், கட்டிடத்தின் அமைப்பு மற்றும் அது தாக்கப்பட்டால் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய தகவல்களை திரு பைடன் கேட்டார்.
அடுத்த சில வாரங்களில், அதிகாரிகள் வெள்ளை மாளிகையின் அவசரக்கால அறையில் சந்தித்தனர். இந்த அறையானது வெள்ளை மாளிகைக்கு கீழே உள்ள பதுங்கு குழியில் பாதுகாப்பாக செயல்படும் ஒரு கட்டளை மையமாகும். இங்கிருந்து கொண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் நெருக்கடிகளை அமெரிக்க அதிபர் கண்காணிக்கும் வகையில் இந்த பதுங்கு குழி அறை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், ஒரு சிறிய வழக்கறிஞர்கள் குழு ஒன்று கூடி அமெரிக்க தாக்குதலுக்கான சட்டப்பூர்வமான தன்மையை மதிப்பிடுவது குறித்து பரிசீலித்தது. இறுதியில் ஜவாஹிரி "அல்-கொய்தாவில் அவரது தொடர்ச்சியான தலைமைப் பாத்திரம் மற்றும் அல்-கொய்தா தாக்குதல்களில் அவரது பங்கேற்பு மற்றும் செயல்பாடு" ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தாக்குதல் சட்டப்பூர்வமானது என்று முடிவு செய்தனர்.
ஜூலை 25 அன்று, கடைசியாக ஒரு முறை தனது குழுவைக் கூட்டி, அவரது உயர்மட்ட ஆலோசகர்களிடம் கருத்துக் கேட்ட பிறகு, அதிபர் பைடென் தாக்குதலுக்கான அங்கீகாரத்தை அளித்தார்.
உள்ளூர் நேரப்படி 06:18 மணிக்கு , ஆளில்லா விமானம் மூலம் ஏவப்பட்ட இரண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகள் ஜவாஹிரியின் வீட்டின் பால்கனியில் மோதியதில் அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் காயமின்றி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், இந்த தாக்குதலின் வெற்றி குறித்து அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை, தாலிபானின் உள்துறை அமைச்சகம் உள்ளூர் டோலோ செய்தி நிறுவனத்திடம், ஒரு ராக்கெட் தாக்குதல் ஒரு காலியான வீட்டின் மீது விழுந்ததாகவும், அதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியது. அப்போது கூடுதல் விவரங்களை அளிக்க அமைச்சக அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
தாக்குதல் நடந்த உடன் தாலிபானின் தீவிர வன்முறைப் பிரிவான ஹக்கானி பிரிவைச் சேர்ந்த போராளிகள், ஜவாஹிரியின் குடும்பத்தை அந்த இடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, அவரது இருப்பை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அதிபர் பைடனின் நிர்வாக அதிகாரிகள் கூறினர்.
திங்கள்கிழமை காலை ஒரு பிபிசி நிருபர் தாக்கப்பட்ட வீட்டிற்கு வந்தார். அப்போது தாலிபான் வீரர்கள் அவரை சுற்றி வளைத்து துப்பாக்கியைக் குறிவைத்து, "பார்ப்பதற்கு எதுவும் இல்லை" என்று விரட்டினர்.
உளவுத்துறையின் பல பிரிவுகள் ஜவாஹிரியின் மரணத்தை உறுதிப்படுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம் காபூலில் எந்த அமெரிக்கப் பணியாளர்களும் இல்லை என்பதையும் வலியுறுத்தினார்கள். பின் எப்படி அவர்கள் தாக்குதலின் வெற்றியை உறுதிப்படுத்தினார்கள் என்பதை விவரிக்க மறுத்து விட்டனர்.
பொதுவில் புலனாய்வு அமைப்புகள் தங்கள் உளவாளிகளின் அடையாளங்களைப் பாதுகாக்கின்றன. மேலும் அதிபர் ஒபாமாவின் கீழ் பணியாற்றிய தேசிய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநரான ஜேம்ஸ் கிளாப்பர், காபூலில் உள்ள முன்னாள் அமெரிக்க கூட்டாளிகள் சில தகவல்களை வழங்கியிருக்கலாம் என்று கூறினார்.
தாக்குதலை அடுத்து ஜவாஹிரியின் உடலுக்கு என்ன ஆனது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒசாமா பின்லேடனைக் கொன்ற சோதனைக்குப் பிறகு, ஜவாஹிரியின் எச்சங்களை மீட்டெடுக்க அமெரிக்கா எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பைடன் நிர்வாகம் தெரிவித்தது.
பின்லேடனின் சமாதி இஸ்லாமியர்களின் புனிதத்தலமாக மாறுவதைத் தடுப்பதற்காக பின்லேடனின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பிறகு சிறப்புப் படைகள் பின்லேடனின் உடலை மீட்டு கடலில் வீசினர்.
தற்போது ஜவாஹிரி மீதான தாக்குதலுக்கு பிறகு தாலிபான்கள் அப்பகுதியை சுத்தம் செய்துள்ள நிலையில், அவரது உடல் எச்சங்கள் மீட்கப்பட்டிருக்கலாம்.
வெள்ளை மாளிகையின் பால்கனியில் இருந்து திரு பைடனின் தொலைக்காட்சி உரை உலகம் முழுவதும் ஒளிபரப்பப் பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தாலிபான் தலைவர்கள் தங்கள் எல்லைக்குள் அமெரிக்கா ஊடுருவியதற்குக் கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர். ஆனால் அவர்களின் கருத்துகளில் ஜவாஹிரி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
காபூலில் ஜவாஹிரியின் இருப்பைப் பற்றி மூத்த தாலிபான் தலைவர்களுக்கு எவ்வளவு தெரியும் மற்றும் அவர்கள் என்ன உதவி செய்திருக்கலாம் என்பது பற்றி இப்போது ஊகங்கள் உள்ளன.
ஒரு குடியிருப்பாளர் பிபிசியிடம் பேசிய போது தாலிபான் போராளிகள் தாக்குதல் நடந்த தெருவைக் காத்து வருவதாக கூறினார். மேலும், "ஆப்கான் அல்லாத குடிமக்கள்" அங்கே இருப்பது உள்ளூர் மக்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.
தற்போது தாலிபான்கள் என்ன செய்வார்கள் என்பது ஒரு சிக்கலான கேள்வி. ஆனாலும் அவர்கள் தற்காப்பு நிலையிலிருந்துதான் செயல்பட முடியும் என்பதையே ஜவாஹிரி மீதான துல்லியமான தாக்குதல்கள் காட்டுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust