நமது ஊரில் குறி சொல்லும் பெண்களை கேள்விப் பட்டிருப்போம். திடீர் என்று அவருக்கு சாமி வந்து ஆடிக் கொண்டே ஊர்மக்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் சொல்வார்.மக்களும் அந்த பரிகாரத்தை செய்து விட்டு கொஞ்ச காலம் நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் குறி சொல்லும் பெண்களால் யாருக்கும் பிரச்சினைகள் முடிந்ததில்லை.
1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டில் தனது 84-வது வயதில் இறந்து போனார். இறந்து போகும் போது அவருக்கு இலட்சக்கணக்கில் சீடர்கள் இருந்தனர். குறிப்பாக ரசியா, கிழக்கு ஐரோப்பாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.
அவர் வாழ்ந்த காலத்தை விட இறந்த பிறகு அவர் பல்வேறு உலக நிகழ்வுகளை சரியாக கணித்து முன்கூட்டியே சொன்னார் என்ற கதைகள் இணையம் முழுவதும் வலம் வருகின்றன. இலுமினாட்டிகளையும், சதிக் கோட்பாடுகளையும், தமது வாழ்க்கை பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வுகளை தேடுபவர்களும் இத்தகைய குறி சொல்லும் ’தேவதைகளை’ கொண்டாடுகின்றனர்.
பாபா வாங்கா பல்கேரிய நாட்டில் வாழ்ந்தவர். தாயின்றி தந்தை, சித்தியுடன் வறிய குடும்பத்தில் வளர்ந்தவர். புயல் ஒன்றில் சிக்கி பார்வை முற்றிலும் இழந்தவர். பல்கேரிய மொழியே அவருக்கு முழுமையாகத் தெரியாது. பிரெய்லி (பார்வையற்றவர்கள் படிக்கும் முறை) முறையில் கொஞ்சம் செர்பிய மொழியில் படிப்பார். அவர் எந்த புத்தகத்தையும் எழுதியதில்லை. அவர் கணித்ததாக கூறப்படும் நிகழ்வுகள் அனைத்தும் அவருடைய உதவியாளர்களால் தொகுக்கப்பட்டவை. பிறகு அவை பல்வேறு நூல்களாக வெளிவந்தன. அந்தக் கணித்தல்கள் பல அவர் மறைவுக்கு பிறகு வெளியானவை. சுருக்கமாகச் சொன்னால் அவர் இன்னும் 5000 ஆண்டுகளுக்கு உலக நிகழ்வுகளை கணித்திருக்கிறாராம்.
புயலில் சிக்கிய போது அவருக்கு ஒரு அமானுஷ்ய சக்தி வந்தது, அதன் பிறகு அவர் மக்களைப் பற்றியும், எதிர்கால உலக நடப்புகளைப் பற்றியும் சரியாகக் கணித்துக் கூறினார் என்று அவரது சீடர்கள் கூறுகிறார்கள்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு காணாமல் போனோரை கண்டுபிடிக்குமாறு பல கிழக்கு ஐரோப்பிய மக்கள் வாங்காவை பார்க்க வருகின்றனர். இப்படித்தான் அவர் பிரலமானார். சில ஐரோப்பிய அரச வம்சத்தினரும் அவரைப் பார்க்க வந்திருக்கின்றனர்.
சோவியத் யூனியன் உடைந்து போகும், செர்னோபில் அணுவிபத்து, ஸ்டாலினின் மரணம், குர்ஸ்க் எனும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் மூழ்கிப் போனது, அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல், வடகொரிய பதட்டம் போன்றவை அவர் கணித்த சில நிகழ்வுகள் சரியாக நடந்திருக்கின்றன என சீடர்கள் பரப்பியிருக்கின்றனர்.
இவற்றை அவர் நேரடியாக சொன்னதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. மேலும் சீடர்கள் சொன்ன வார்த்தைகளும் குறிப்பிட்ட சொற்றொடரை வியாக்கியானம் செய்து பொருளை மாற்றியதுதான். இது ஒரு பிராண்டிங் உத்தி. இந்த உத்தி உண்மை என்பதற்கு பாபா வாங்கா சொன்னதாக கருதப்பட்ட ஏராளமான நிகழ்வுகள் நடக்கவே இல்லை என்பது ஒரு சான்று.
1994-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் B-யில் தொடங்கும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்று வாங்கா சொன்னாராம். ஆனால் இறுதிப் போட்டியில் பிரேசிலும், இத்தாலியும் விளையாடின. அறை இறுதிப் போட்டியில் பல்கேரியா தோற்றுப் போனது. இவையெல்லாம் உலகப்போட்டியை பார்த்துக் கொண்டே குறிப்பிட்ட கட்டத்தில் வாங்காவின் சீடர்கள் பல்கேரியா இறுதிப் போட்டிக்கு செல்லும், பிரேசிலோடு மோதும் என்று கணித்திருக்கிறார்கள். அது நடக்கவில்லை. ஏனெனில் காலபந்து என்பது குறி சொல்லுதலில் தீர்மானிக்கப்படுவதில்லை. களத்தில் ஆடியே வெற்றி பேறவேண்டும்.
2010 இல் மூன்றாவது உலகப்போர் துவங்கி 2014இல் முடியும் என்று வாங்கா கணித்திருக்கிறார். அப்படி போர் நடந்தால் இதை எழுதுவதற்கு நானும், படிப்பதற்கு நீங்களும் இருந்திருக்க மாட்டீர்கள். உலகம் போரின்றி ஜம்மென்றுதான் இருக்கிறது.
வாங்காவின் பிரபலத்தை அறுவடை செய்ய நினைத்த பல்கேரிய அரசு 1960-களிலேயே அவருக்கு உதவியாளர்கள், பாதுகாப்பு, அலுவலகம் அனைத்து வசதிகளையும் செய்தது. அவரது கிராமம் சுற்றுலா மையமானது. வாடகை கார்களும், உணவகங்களும், விடுதிகளும் நன்கு தொழில் செய்தன. வந்து போகும் சுற்றுலா பயணிகளிடம் வாங்காவின் அமானுஷ்ய சக்தியை இவர்கள் ஊதிப்பெருக்கி பரவச் செய்வார்கள். அப்போதுதான் இவர்களுக்கு பிசினெஸ் செழிக்கும் அல்லவா?
மேலும் டாக்சி ஓட்டுநர்கள் வாங்காவைப் பார்க்க வரும் பயணிகள் பற்றிய முழுவிவரத்தை சேகரித்து வாங்கா அலுவலகத்திடம் சேர்த்து விடுவார்கள். பிறகு அந்த விவரங்களை வைத்து யார் வேண்டுமானாலும் ஜோசியம், பரிகாரம் சொல்லலாம் அல்லவா? பிரபலங்கள் வருகிறார்கள் என்றால் அவர்களது பிரச்சினைகள் முழு உலகிற்கே தெரியும். அதை தனியாக துப்பறிய தேவையில்லை.
ரசிய தலைவர் ஸ்டாலின் எப்போது இறப்பார் என்று வாங்கா சொன்னதற்கு ஆதாரமில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று செர்னோபில் விபத்து பற்றியும் அவர் சொல்லவில்லை. அதே போன்று 96 இல் ரசியாவில் போரிஸ் எல்சின் வெற்றி பெறுவார், அமெரிக்கா செப் 11 இல் தாக்கப்படும் என்று சொன்னதற்கும் ஆதாரமோ ஆவணமோ இல்லை. பின்னர் இவை சீடர்களால் புத்தகங்களாக எழுதப்பட்டு உலகம் முழுவதும் வாங்கா சொன்னதாக பரவின.
ரசியா 21-ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் மீண்டும் வலிமை பெறும் என்று வாங்கா சொன்னாராம். ஆனால் அதே காலத்தில் ரசிய பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சி அடைந்தததோடு வல்லரசுப் போட்டியிலும் அது இல்லை. ரசியாவில் பிறக்கும் சிலர் இந்த உலகையே மாற்றுவார்கள் என்றும் அவர் கூறினாராம். யார் அந்த சிலர் என்று தெரியவில்லை. உண்மையில் அவருக்கு வரும் ரசிய பக்தர்கள் அதிகம் என்பதால் வாங்கா அப்படி சொல்லியிருந்தாலும் ஆச்சரியமில்லை. மேலும் புற்றுநோய்க்கு இரும்பிலிருந்து மருந்து கண்டுபிடித்து கட்டுப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினாராம். அதே போன்று குதிரைகளிடமிருந்து எடுக்கப்படும் மரபணு மூலம் வயதாகும் பிரச்சினை மனிதர்களுக்கு இருக்காது என்றும் கூறினாராம்.
இவையெல்லாம் பார்த்தால் இனி லான்செட், நேச்சர் போன்ற அறிவியல் இதழ்களுக்கு வேலையே இல்லை. உண்மையில் வாங்காவே மார்பக புற்றுநோயால்தான் இறந்து போனார். ஒரு அப்பாவிப் பெண்ணை வைத்து உலகில் ஒரு மிகப்பெரிய கட்டுக்கதையையே அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
வாங்காவை நேரடியாக அறிந்தவர்கள் யாரும் வாங்கா இப்படி முன்கூட்டியே கணிப்புகள் எதையும் செய்யவில்லை என்று அடித்துக் கூறுகிறார்கள். வாங்காவின் சீடர்கள் தமது இனம் மொழி நாடு மதம் போன்றவற்றின் நலனிலிருந்தும் கட்டுக்கதைகளை பரப்பியிருக்கிறார்கள். அதில் ஒன்று ஐரோப்பாவை எதிர்த்து முஸ்லீம்கள் வேதிப்பொருள் ஆயுதத்தை பயன்படுத்துவார்கள் என்பது. அதனால் ஐரோப்பா முழுவுதும் பலவித கேன்சர்கள் பரவும், 2016-இல் ஐரோப்பா கிட்டத்தட்ட அழிந்து போகும் என்று கூறினாராம். இதில் நிச்சயம் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு இருப்பது ஒன்று. இரண்டாவது இன்றைக்கு ஐரோப்பா நன்றாகவே வாழ்கிறது.
தற்போது இணையத்தில் உலவும் முக்கியமான கதை என்ன தெரியுமா? கோவிட்டுக்கு அடுத்த உலக தொற்று நோய் விரைவில் வருமாம். அந்த வைரஸ் ஏற்கனவே தோன்றி சைபீரியாவின் பனியில் உறைந்து மறைந்திருக்கிறதாம். மலிவான ஊடகங்கள் பல இக்கதைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்கின்றன. பிரான்சின் நாஸ்டர்டாமஸ் முன்பு உலகைக் கணித்தார் என்று சொன்னார்கள். தற்போது பாபா வாங்கா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்.
உண்மையில் உலகின் எதிர்காலத்தை அரசியல், பொருளாதார, சமூக, அறிவியல் காரணங்களே தீர்மானிக்கின்றவே அன்றி ஒரு குறிசொல்லுப் பல்கேரியப் பெண்ணால் அல்ல.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust